செய்தி: நிரல்
ஜூன் 19 23:02

அமைச்சர்களாகப் பதவியேற்பு- ரணிலின் பிரித்தாளும் தந்திரம்!

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கைத் தீவில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பேரினவாதிகளினால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும், இலங்கை இராணுவச் சோதனைக் கெடுபிடிகளுக்கு உள்ளாகியிருந்த நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் இருந்து ஒன்பது முஸ்லிம் அமைச்சர்களும் கூட்டாகத் தமது பதவிகளில் இருந்து விலகினர். இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் ஹபீர் காசிம், கட்சியின் மூத்த உறுப்பினர் அப்துல் ஹலீம் ஆகிய இருவரும் இன்று புதன்கிழமை மீண்டும் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். கட்சி வேறுபாடுகளின்றி சமுகத்தின் பலத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தவே கூட்டாக அமைச்சுப் பதவியில் இருந்து விலகியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அப்போது கூறியிருந்தார்.
ஜூன் 19 16:12

அமெரிக்காவுக்கும் நெருக்குதலா? பொம்பேயோவின் வருகை ரத்து

(வவுனியா, ஈழம்) இலங்கையுடன் செய்யவுள்ள சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா தொடர்ச்சியாக கலந்துரையாடி வரும் நிலையில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பேயோ, (US Secretary of State Mike Pompeo) கொழும்புக்கு பயணம் செய்வாரென எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத நெருக்கடிகளினால் பொம்பேயோவின் இலங்கைப் பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. பொம்பேயோவின் இலங்கைப் பயணம் ஆபத்தானதென்று மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்றுச் செய்வ்வாய்க்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். மகாநாயக்கத் தேரர்களும் சோபா ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
ஜூன் 17 11:13

யாழ்ப்பாணம் - மணியந்தோட்டம் வேளாங்கன்னி மாதா சொரூபம் உடைத்து வீதியில் வீசப்பட்டுள்ளது

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் மதத்தின் பெயரால் அநீதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தலைநகர் கொழும்பு உட்பட கிழக்கு மாகாணத்திலும் கிறிஸ்தவ மக்களை இலக்கு வைத்து பயங்கரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் - மணியந்தோட்டம், வேளாங்கன்னி மாதா சொரூபம் அடையாளந் தெரியாதவர்களால் உடைத்து வீதியில் வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் கூர்மைச் செய்தித்தளத்திற்குத் தெரிவித்தார்.
ஜூன் 17 09:13

அதிஸ்டலாப சீட்டு விற்கும் போர்வையில் தமிழர்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் இராணுவம்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கைச் சிங்க படைப்பிரிவின் இராணுவத்தினர் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 நிர்வாகப் பகுதிகளிலும் அதிஸ்டலாபச் சீட்டு விற்கும் போர்வையில் தமிழ் மக்களை அச்சுறுத்திப் பணம் பறிப்பதில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக படுவான்கரைப் பகுதியில் இராணுவ முகாமுக்கு அருகில் வீதியால் செல்லும் தமிழ் மக்களை வழிமறித்து இராணுவத்தினர் தம்மிடமுள்ள 100 ரூபா மதிப்பிலான அதிஸ்டலாப சீட்டொன்றைக் கொடுத்து அவர்களிடம் இருந்து பணம் மற்றும் பெறுமதியான பொருட்களைப் பறிப்பதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளதாக தமிழ் நெற் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜூன் 16 22:36

ஷாபி கருத்தடை சிகிச்சை செய்தமைக்கான ஆதாரங்கள் இல்லை

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில், சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரச திணைக்களங்களில் பணிபுரிந்த அதிகாரிகள் பலரும் கைதாகியிருந்தனர். சிங்களப் பெண்களுக்குக் கருத்தடைச் சிகிச்சை செய்தார் என்ற குற்றச்சாட்டில் குருணாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் சேகு சியாப்டீன் மொஹமட் ஷாபி, இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதாகித் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் மீது குற்றம் இல்லையென, இலங்கைச் சுகாதார அமைச்சு நியமித்த மருத்துவர் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
ஜூன் 16 18:39

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பிக்குமார் போராட்டம்

(முல்லைத்தீவு, ஈழம்) வடமாகாணம் - முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் இலங்கைப் படையினரின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரையில், பௌத்த சிங்கள மக்கள் வெள்ளையுடைகளுடன் பொசன் பண்டிகைத் தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தினர். அம்பாந்தோட்டை, மாத்தறை அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து மூன்று பேருந்துகளில் கொண்டுவரப்பட்ட சுமார் இருநூறுக்கும் அதிகமான பௌத்த சிங்கள மக்கள் இவ்வாறு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டதாக பிரதேச மக்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர். இலங்கைத் தேசிய உரிமைகள் இயக்கத்தின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தலைமையில், இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
ஜூன் 15 23:40

முஸ்லிம் பிரதேசங்களில் பொசன் தோரணங்கள்- இராணுவம் பலவந்தம்

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை பிரதேசங்களில் பௌத்த சிங்களவர்களின் பொசன் பண்டிகைத் தோரணங்களைக் கட்டுவதற்கு இலங்கைப் படையினர் முயற்சித்து வருகின்றனர். ஐ.எஸ் இஸ்லாமியவாதிகள் சாய்ந்தமருது, சம்மாந்துறைப் பிரதேசங்களில் உள்ள சில வீடுகளில் வாடகைக்குத் தங்கியிருந்த நிலையில், குறித்த பிரதேசங்களில் பொசன் பண்டிகைத் தோரணங்களைக் கட்டுவது நல்லிணக்கத்து வழிவகுக்கும் என்றும் அதற்கான அனுமதியை பள்ளிவாசல் நிர்வாகம் வழங்க வேண்டும் எனவும் கல்முனைப் பிரதேசத்தில் உள்ள இராணுவத் தளபதி சமயத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஒவ்வொரு பள்ளிவாசல்களுக்கும் சென்று இலங்கை இராணுவம் அனுமதி கோருவதாக பிரதேச மக்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.
ஜூன் 15 22:49

மைத்திரி - ரணில் மோதல், சர்வஜன வாக்கெடுப்பு நடத்த முடிவு!

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஆரம்பித்த அரசியல் நெருக்கடியும், அரசியல் முரண்பாடுகளும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் மேலும் அதிகரித்துள்ளன. குறிப்பாக இலங்கை ஒற்றையாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருக்கிடையேயும் ஏற்பட்டுள்ள மோதல்கள், முரண்பாடுகள், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகளை முடக்கியுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் தஜிகிஸ்தான் நாட்டிற்குச் சென்றுள்ள மைத்திரிபால சிறிசேன கொழும்பு திரும்பியதும் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்றைக் கோரவுள்ளதாக மகிந்த தரப்பு உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஜூன் 14 20:13

இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் பயங்கரவாதமாம் - மோடி

(வவுனியா, ஈழம்) அப்பாவி உயிர்களைப் பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகத்தை தனது இலங்கை விஜயத்தின் போது பார்த்தததாக, கிர்கிஸ்தான் தலைநகர் கிஸ்கெக் நகரில் இடம்பெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தின் ஆபத்தைத் தடுக்க அனைத்து மனிதநேய சக்திகளும் ஒன்றாக முன்வர வேண்டும் எனவும் அவர் இதன்போது அழைப்பு விடுத்துள்ளார். பயங்கரவாதிகளுக்கு நிதி ஆதரவு ஊக்கமளிக்கும் நாட்டைத் தனிமைப்படுத்த வேண்டும் எனவும் இந்தப் போரில் அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பை அதிகப்படுத்தி இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை அகற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஜூன் 14 10:46

கிளிநொச்சி மாவட்டத்தில் 332 ஆசிரியர் வெற்றிடங்கள் - வலயக் கல்வி அலுவலகம் தகவல்

(கிளிநொச்சி, ஈழம்) தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு போரின் பின்னர் தமிழர்களது கல்வி மட்டம் அதிகரிக்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டாயிரத்து 77 ஆசிரியர்கள் கடமையாற்றிவரும் நிலையில், தற்போது 332 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை 2010 - 2013 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் வழங்கப்பட்ட புதிய ஆசிரியர் நியமனங்கள் தொடர்பாக தம்மிடம் ஆவணங்கள் எவையும் இல்லையென கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.