நிரல்
நவ. 01 10:14

பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை- மகாநாயக்கத் தேரர்களிடம் சஜித் உறுதி

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கண்டியில் வெளியிட்டார். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச, அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களிடமே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை முதலில் கையளித்தார். இலங்கையில் அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரப் பரவலாக்கலை உறுதிப்படுத்துவதே அரசியல் தீர்வு என்று அந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் பௌத்த சமயத்துக்கான முன்னுரிமை, இலங்கை ஒற்றையாட்சி அரசின் இறைமை ஆகியவற்றை மேலும் உறுதிப்படுத்தல் முக்கியமானதென்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஒக். 31 22:45

பிரச்சாரத்துக்காக பிரதான வேட்பாளர்கள் இருவர் 760 மில்லியன் ரூபாய்கள் செலவு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக இதுவரை பல மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் கூட்டிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வாரங்களில் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக இவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவற்றில் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் எழுநூற்றி 60 மில்லியன் ரூபாய்களைச் செலவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஒக். 31 22:00

மட்டக்களப்பில் தொடரும் மழையால் விவசாயச் செய்கைகள் பாதிப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் மழையுடன் கூடிய காலநிலையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். மாவட்டத்தின் பதின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாழ்நிலை பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களும் நீரில் முழ்கியுள்ளன. கோறளைப்பற்று தெற்கு கிரான், கோறளைப்பற்று, வவுணதீவு ஆகிய கமநலகேந்திர நிலையத்திற்குட்பட்ட நெற் செய்கை கண்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய பெரும்பாக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒக். 30 16:40

மீன் சின்னத்திற்குத் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்- காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம் கோரிக்கை

(வவுனியா, ஈழம்) எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வவுனியாவில் தொள்ளாயிரத்து 84ஆவது நாளாகவும் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபடும் காணாமல் போன உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைப் படையினரால் கடத்தப்பட்டுக் காணமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம், பிரதான சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்கள் மீது அதிருப்தி வெளியிட்டுள்ளது. தமிழ் இளைஞர் யுவதிகளைக் காணாமல் ஆக்கிவிட்டுச் சிங்கள வேட்பாளர்கள் எந்த முகத்தோடு வாக்குக் கேட்க வருகிறார்கள் என்றும் சங்க உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே மீன் சின்னத்திற்கு வாக்களித்து சிங்கள வேட்பாளர்களை நிராகரிக்க வேண்டும் என்றும் உறவினர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஒக். 30 10:13

புதுக்குடியிருப்பில் தொடர்ச்சியாக மனித எலும்புகள் மீட்பு

(முல்லைத்தீவு, ஈழம்) போர் நடைபெற்ற வடமாகாணம் முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் உள்ள காணியொன்றில் இருந்து மனித எலும்புக் கூடுகள், மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் அது தொடர்பான அகழ்வுப் பணிகள் நேற்றுச் செவ்வாய்க்கிழமை மீண்டும் இடம்பெற்றது. இன்று புதன்கிழமையும் அகழ்வுப் பணிகள் தொடருகின்றன. புதுக்குடியிருப்புப் பிரதேசச் செயலக பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 2019.10.20 ஆம் திகதியன்று தோட்ட காணி ஒன்றைத் துப்பரவு செய்த போது மனித எச்சங்கள் காணப்படுவதாக புதுக்குடியிருப்புப் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து சென்ற 25 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற அனுமதியோடு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
ஒக். 29 05:01

ஈழத் திரையுலகில் புதிய அத்தியாயம் திறக்கும் “சினம்கொள்”

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத்தமிழர்களின் பின்போர்க்கால வாழ்வியலைச் சித்தரிக்கும் அபூர்வமான திரைப்படைப்பாகப் பலத்த வரவேற்பை சினம்கொள் என்ற முழு நீளத்திரைப்படம் பெற்றுள்ளது. இதன் இயக்குநரான ரஞ்சித் ஜோசப் தனது மதிநுட்பமான திரையாடலால் (screenplay) இலங்கை ஒற்றையாட்சி அரசு தமிழ்க்கலைஞர்கள் மீது விதித்திருக்கும் மூன்று நிர்ப்பந்தங்களுக்கூடாகவும் சுழியோடியிருக்கிறார். அது மட்டுமல்ல, பதினோர் இடங்களில் ஒலியைச் சற்றே தணிக்கை செய்தால் போதும் என்ற நிபந்தனையோடு இந்தியாவின் தணிக்கைக் குழுவின் அங்கீகாரத்தை வென்றெடுத்த முதலாவது ஈழத்தமிழர் போராட்டம் சார்ந்த திரைப்படைப்பாகவும் சினம்கொள் விளங்குகிறது. முழுமையாக ஈழத்தமிழ்க் கலைஞர்களின் நடிப்பில் வடக்கின் மூன்று மாவட்டங்களில் எழுபது இடங்களில் சினம்கொள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஒக். 28 23:37

மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச புதிய கூட்டணியில்- ஒப்பந்தம் கைச்சாத்தாகும்

(வவுனியா, ஈழம்) மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளன. ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியுடன் ஏனைய சிறிய கட்சிகள் இணைந்து உருவாக்கிய ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜனக் கூட்டணியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து செயற்படுமென கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கூட்டணியின் இணைத் தலைவர்களாக மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும் இணைந்து செயற்படுவார்கள் என்றும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஒக். 28 12:55

சவேந்திர சில்வா தொடர்ந்தும் இலங்கை இராணுவத் தளபதி- சஜித் பிரேமதாச

(வவுனியா, ஈழம்) எவ்வாறான சர்வதேச அழுத்தங்கள் ஏற்பட்டாலும் இலங்கையின் இராணுவத் தளபதியாக பெல்ரினட் ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்ந்தும் பதவி வகிப்பாரென இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவைத் தலைவராகக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, நிவத்திகலப் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றினார். தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரும் சவேந்திர சில்வா தொடர்ந்தும் இராணுவத் தளபதியாகப் பதவி வகிப்பார் என்றும் புதிய தளபதி நியமிக்கப்படமாட்டாரெனவும் சஜித் பிரேமதாச அங்கு கூறினார்.
ஒக். 27 23:21

வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை அழைக்க முயற்சி- சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு

(வவுனியா, ஈழம்) எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு இலட்சம் இலங்கை அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்த இரண்டு இலட்சம் அரச ஊழியர்களுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 30 ஆம் திகதியும் முதலாம் திகதியும் நடைபெறவுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் ஜே.ஏ.எஸ்.பி.ஜயசிங்க தெரிவித்தார். வாக்கெண்ணும் பணிகளில் மாத்திரம் நாற்பத்து எட்டாயிரம் பேர் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறினார். இவர்களுக்கான நலன்புரிச் செயற்பாடுகளில் பத்தாயிரம்பேர் ஈடுபடவுள்ளதாகவும் ஜயசிங்க கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தேவை ஏற்படின் மேலதிகப் பணிகளுக்கான மேலும் அரச ஊழியர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர் எனவும் அவர் கூறினார்.
ஒக். 26 04:17

கட்டுமுறிவுக்குளம் பாடசாலையில் வளங்கள் இல்லை- அதிபர்

(மட்டக்களப்பு, ஈழம்) கொழும்பில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் இலங்கைச் சிங்கள ஆட்சியாளர்கள் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை முன்னேற்றுவற்கு எடுத்த நடவடிக்கைகள் போதுமானவையல்ல என்று அதிபர்கள், ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நகர்ப்புற பாடசாலைகளில் மாத்திரமே மேலும் மேலும் வளங்களை குவி்ப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேசச் செயலகப் பிரிவு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட, போர்க்காலத்தில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கட்டுமுறிவுக் குளம் அ.தக.பாடசாலையில் எந்த வளங்களுமே இல்லையென அதிபர் நாகேந்திரன் கூர்மைச் செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.