நிரல்
நவ. 12 16:10

பிரதான வேட்பாளர்களிடையே கடும்போட்டி- முடிவுகள் வெளிவருவதிலும் தாமதம் ஏற்படலாம்- ஆணைக்குழு தகவல்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் முப்பத்து ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனாலும் இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளின் இரு வேட்பாளர்களுக்கிடையேதான் கடுமையான போட்டி நிலவுகின்றது. ஜே.வி.பி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்காவுக்கு அதிகளவு வாக்குகள் செலுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அந்த வாக்குகள் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்குரிய வாக்குகளில் தாக்கத்தைச் செலுத்தலாமெனவும் கூறப்படுகின்றது. இதேவேளை, முப்பத்து ஐந்து வேட்பாளர்களில் குறைந்தது பன்னிரண்டு வேட்பாளர்கள் பிரதான வேட்பாளர்களினால் திட்டமிடப்பட்டுக் களமிறக்கப்பட்ட போலியான வேட்பாளர்கள் என்று இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
நவ. 11 22:08

தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்கவும்- தமிழ் மக்கள் பேரவையின் சுயாதீனக்குழு அறிக்கை

(யாழ்ப்பாணம், ஈழம்) பொது வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்வதில்தீவிரமாக ஈடுபட்ட தமிழ்மக்கள் பேரவையின் சுயாதீனக் குழு முயற்சி கூடாத நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் ஒப்பீட்டளவில் ஆகக் கூடுதலான தமிழ்த் தேசியக் கட்சிகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வேட்பாளருக்கு முதல் விருப்பு வாக்கையும் இரண்டாவது விருப்பு வாக்கை தந்திரோபாயமாகவும் வாக்களிக்குமாறு அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. சுயாதீனக் குழுவின் நீண்ட உரையாடல்களுக்கு பின்னரே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நவ. 11 15:50

ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த இந்திய அமைச்சர்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் வேட்;பாளர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம், மற்றும் பிரச்சார மேடைகளில் பேசப்படும் விடயங்கள் குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க, இந்தியத் தூதரகங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. பிரதான வேட்பாளர்களின் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களோடும் அவ்வப்போது சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்களின் மன நிலை எவ்வாறு இருக்கின்றது என்பதையும் இவர்கள் அறிந்து வருகின்றனர். இவ்வாறனதொரு நிலையில் இந்தியாவின் சட்டம் ஒழுங்கு, நீதி மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துள்ளார்.
நவ. 10 22:45

நீதிமன்றங்களில் முன்னிலையாக குருபரனுக்குத் தடை- சட்ட நடவடிக்கைக்கு ஏற்பாடு

(யாழ்ப்பாணம், ஈழம்) மனித உரிமைகள் விடயத்தில் பாதிக்கப்பட்ட தரப்புகளுக்குச் சார்பாக இலங்கை நீதிமன்றங்களில் வாதிட்டு வரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவதை தடை செய்யுமாறு கொழும்பில் உள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இது குறித்துக் கருத்து வெளியிட குருபரன் மறுத்துள்ளார். இந்தத் தடையுத்தரவு குறித்த கடிதம் கடந்த செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதியிடப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் தகுதி வாய்ந்த அதிகாரி சென்ற ஒக்ரோபர் மாதம் 15 ஆம் திகதியே பேராசிரியர் க.கந்தசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.
நவ. 09 21:56

தமிழ்த் தேசியத்தின் திருகோணமலைப் பிரகடனம்- வெளியிட்டார் சிவாஜிலிங்கம்

(திருகோணமலை, ஈழம்) ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் க.ம.சிவாஜிலிங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று சனிக்கிழமை திருகோணமலையில் வெளியிட்டார். தமிழ் பேசும் மக்களின் தாயகமான திருகோணமலையில் உள்ள குளக்கோட்டம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் உட்பட பெருமளவு மக்கள் கலந்து கொண்டனர். தேர்தல் விஞ்ஞாபனத்துக்குத் தமிழ்த் தேசியத்தின் திருகோணமலைப் பிரகடனம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நவ. 08 22:28

தமிழரசுக் கட்சியை பகிரங்கமாகக் கண்டிக்கத் தயங்கிய மாணவர்கள், சிவில் சமூக அமைப்புகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உள்ளிட்ட ஐந்து தமிழ்க் கட்சிகளோடும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் கலந்துரையாடியது. இறுதியில் பதின்மூன்று அம்சக் கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் முன்னணி தவிர்ந்த ஐந்து தமிழ்க் கட்சிகள் மாத்திரமே கைச்சாத்திட்டிருந்தன. இந்த ஆவணத்தை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளருக்கே ஆதரவு வழங்குவதென்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆவணம் சிங்கள ஆங்கில ஊடகங்களில் ஈழக் கோரிக்கையாகச் சித்தரிக்கப்பட்டிருந்ததையடுத்துத் தமிழ்க் கட்சிகளைச் சந்திக்காமலேயே பிரதான வேட்பாளர்கள் இந்த ஆவணத்தை ஏற்க முடியாதெனக் கூறிவிட்டனர்.
நவ. 08 14:17

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல சிரமதானப் பணியை நிறுத்திய இராணுவத்தினர்

(அம்பாறை, ஈழம்) கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் இன்று வெள்ளிக்கிழமை காலை சிரமதானப் பணிகள் இடம்பெற்றன. ஆனால் இங்கு வந்த இலங்கை இராணுவத்தினர் சிரமதானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டனர். நிறுத்தவில்லையானால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்ததாக சிரமதானப் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர். முன்னாள் போராளிகள், மாவீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் பிரதேச மக்களும் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னிட்டு வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன.
நவ. 07 12:37

ஒற்றுமையை வெளிப்படுத்த சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்கலாம்- காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்கம்

(கிளிநொச்சி. ஈழம்) பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் எவருக்கும் வாக்களிக்க முடியாது. ஒருவர் புடையன் பாம்பு என்றால் மற்றையவர் நாகபாம்பு என வடக்குக் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமது சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த அவர், இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார். சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிடுகிறார். ஆனால் அவரால் வெற்றிபெற முடியாது. எனினும் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்து ஒற்றுமைப் பலத்தைக் காண்பிக்க முடியும் என்றும் லீலாதேவி ஆனந்த நடராஜா கூறினார்.
நவ. 07 10:02

எஸ்.பி.திஸாநாயக்காவுடன் வாக்குவாதப்பட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு- இருவர் காயம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாகப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்காவின் மெய்ப்பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் பொதுமக்கள் இருவர் படுகாயமடைந்து தெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா கினிகத்தேனை பொல்பிட்டியப் பிரதேசத்தில் நேற்றுப் புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட பின்னர் சென்று கொண்டிருந்தபோது அவரது வாகனத்தைச் சிலர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் மீதே துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
நவ. 06 18:43

கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி துண்டுப் பிரசுரம்

(கிளிநொச்சி. ஈழம்) தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்குக் கிழக்கு, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் படுகொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதி கோரி தமிழ் ஊடகவியலாளர்களினால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இன்று புதன்கிழமை கிளிநொச்சி, வவுனியா. மன்னார் ஆகிய பிரதேசங்களில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் போராட்டம் இடம்பெற்றது. யாழ் ஊடக மையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் பலர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியில் இருந்து இன்று வரை நீதியான விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று தமிழ் ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தினர். கடந்த முப்பது வருடங்களாக தமிழ் ஊடகத்துறை பல்வேறு அச்சுறுத்தல்களையும் நெருக்குவாரங்களையும் எதிர்கொண்டு வருகின்றது.