நிரல்
ஜூன் 16 20:47

அத்தியாவசிய சேவைகளுக்காக வழங்கப்படும் விசேட அனுமதிப் பத்திரங்கள் துஸ்பிரயோகம்- மன்னார் அரச அதிபர்

(வவுனியா, ஈழம்) கொவிட்- 19 நோய் பரவல் காரணமாக பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்ட செயலகம் மூலம் வழங்கப்படும் விஷேட பாஸ் அனுமதியை பெற்றுக்கொள்ளும் சிலர் அதனை துஸ்பிரயோகம் செய்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து பொலிஸாரினால் தனக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மெல் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். இலங்கையில் வேகமாகப் பரவும் கொவிட்- 19 நோய் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தீவு முழுதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டு இறுக்கமான நடைமுறைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
ஜூன் 16 19:49

மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்கள்- மாவட்ட வைத்தியசாலைகள் கொழும்பு நிர்வாகத்தில்

(வவுனியா, ஈழம்) தமிழர் தாயகமான வட மாகாணத்தில் மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள நான்கு மாவட்டப் பொது வைத்தியசாலைகளை இலங்கை மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்படுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றது. கொழும்பு ஐனாதிபதி செயலகத்தில் கடந்த 14ம் திகதி திங்கள் மாலை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்படி வட மாகாணத்தில் உள்ள நான்கு மாவட்ட பொது வைத்தியசாலைகள் உட்பட ஒன்பது மாவட்ட பொது வைத்தியசாலைகளை இலங்கை மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் பொறுப்பில் எடுப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 15 22:15

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச - தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு திடீரென ஒத்திவைப்பு

(மட்டக்களப்பு, ஈழம் ) சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை புதன்கிழமை சந்திக்கவிருந்த நிலையில் அந்தச் சந்திப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சந்திப்பு நடைபெறாதெனவும் பிறிதொரு தினத்தில் குறித்த சந்திப்பு இடம்பெறும் என்றும் கொழும்பு காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இன்று செவ்வாய்க்கிழமை மாலை அறிவித்துள்ளது. இதனை கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்தரன் ஊடகங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
ஜூன் 14 22:32

முள்ளிவாய்க்கால் பிரதேச மக்களைப் பதிவு செய்யுமாறு பொலிஸார் உத்தரவு- படிவங்கள் வழங்கப்பட்டன

(முல்லைத்தீவு, ஈழம் ) தமிழர் தாயகமான வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் வீடுகளில் தங்கியிருப்பவர்களின் விபரங்களைப் பதிவு செய்யுமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். பதிவதற்கான படிவங்கள் இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டுள்ளன. இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் அனைத்துப் பிரதேசக் குடியிருப்பாளர்களையும் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறலாமென மக்கள் சந்தேகிக்கின்றனர். முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்களைப் பதிவு செய்யும் நோக்கம் தொடர்பாகப் பொலிஸார் எதுவுமே கூறவில்லை என்றும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
ஜூன் 13 19:05

வடமாகாணத்தில் போதைப்பொருட் கடத்தல்கள் தொடருவதாக இலங்கைப் பொலிஸார் கூறுகின்றனர்

(மன்னார், ஈழம் ) இலங்கை அரசாங்கத்தினால் கொவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவு முழுவதிலும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழர் தாயகப்பகுதியான வட மாகாணத்தின் சில பகுதிகளில் கசிப்பு உற்பத்தி மற்றும் சட்டவிரோதப் போதைவஸ்து கடத்தல் அதிகரித்துள்ளன. அத்துடன் இந்தியாவின் தமிழ்நாட்டு பகுதியில் இருந்து கடல் வழியாக படகுகள் மூலம் வட மாகாண மாவட்டங்களுக்கு போதை பொருட்கள் கடத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போதைப் பொருட் கடத்தல்களுக்கு இலங்கைப் பொலிஸார், படை அதிகாரிகள் சிலர் மறைமுக ஆதரவு வழங்கி ஊக்குவித்ததாக மக்கள் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தனர்.
ஜூன் 12 23:43

தமிழர்கள் 24 பேர் தமிழ் நாட்டின் மதுரை நகரில் கைது

(கிளிநொச்சி, ஈழம்) வட மாகாண மாவட்டங்களைச் சேர்ந்த 27 தமிழர்கள் கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இந்தியாவின் தமிழ் நாட்டு மாநிலம் மதுரை நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்களில் இரண்டு பெண்கள் உட்பட ஒரு குழந்தை அடங்குவதாகவும் அவர்கள் இந்தியாவின் குடியகல்வுக் குடிவரவுச் சட்டங்களை மீறி கடவுச்சீட்டுகள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்த குற்றச்சாட்டில் இந்தியா கியு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
ஜூன் 11 21:01

மன்னார் கடற்கரையில் ஒதுங்கும் பிளாஸ்ரிக் பொருட்கள்

(மன்னார், ஈழம் ) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் கரையோரக் தமிழ் கிராமங்களில் கடந்த புதன்கிழமை தொடக்கம் பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் மற்றும் குருணை வடிவிலான வெண்ணிறப் பிளாஸ்டிக் பொருட்கள் பெருமளவு கரையொதுங்கி வருவதாக உள்ளூர் மீனவர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். கொழும்பு கடலில் மூழ்கிவரும் எம். வி எக்ஸ்பிரஸ் பேர்ல் (MV- X Press Pearl) எனும் சரக்கு கப்பலில் எடுத்து வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பிளாஸ்ரிக் மூலப் பொருட்களே மன்னார் மாவட்டத்தின் மீனவக் கிராமங்களில் கரையொதுங்குவதாக மீனவர்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தனர்.
ஜூன் 10 23:25

ரணில் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகிக்க ராஜபக்ச அரசாங்கம் திரைமறைவில் ஏற்பாடா?

(வவுனியா, ஈழம்) ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராவதற்குரிய ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் திரைமறைவில் மேற்கொண்டு வருவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. எதிர்வரும் 22 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ள நிலையில் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தொடர்ந்தும் செயற்படுவாரென்றும் செவ்வாய்க் கிழமை பெரும்பான்மை உறுப்பினர்களின் கையொப்பத்துடன் பிரேரணை ஒன்றை சபாநாயகரிடம் கையளிக்க ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்வதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
ஜூன் 09 22:58

கொவிட் நோய்தாக்கம் ஒரு மாதத்தில் 28 சதவீதத்தால் அதிகரிப்பு- மருத்துவர் சங்கம் எச்சரிக்கை

(வவுனியா, ஈழம்) கொவிட் 19 நோய்த் தொற்று இலங்கையில் கடந்த ஒரு மாதத்தில் 28 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மருத்துவர் சங்கத் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பத்தமா குணரட்ன கொழும்பில் இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். சென்ற ஏழாம் திகதியில் தொற்றின் வேகம் அதிகமாகக் காணப்பட்டதாகவும் இந்த ஆபத்து மேலும் தொடரக்கூடிய நிலமை இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
ஜூன் 08 23:36

பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராகிறார்- ஆனால் சஜித் அணி மறுப்பு

(வவுனியா, ஈழம்) எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்கை அனுமதிக்க முடியாதென்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் எவரும் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையப் போவதில்லையெனவும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரோடு, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 15 பேர் இன்று செவ்வாய்க்கிழமை கலந்துரையாடியுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.