நிரல்
செப். 07 21:45

மங்கள சமரவீர பாணியில் பீரிஸ்: ஐ.நா. அணுகுமுறை புதிய வடிவில் முன்னெடுப்பு

(மன்னார், ஈழம்) பேராசிரியர் ஜீ. எல். பீரிஸை அமைச்சராகக் கொண்டியங்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் வெளிநாட்டமைச்சு ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகருக்குக் கடந்த 27ம் திகதி தான் சமர்ப்பித்த மனித உரிமை மற்றும் உள்நாட்டுப் பொறிமுறை தொடர்பான புள்ளிவிபரங்கள் உள்ளடங்கிய அறிக்கையிடலின் பதின்மூன்று பக்கச் சுருக்கத்தை கொழும்பில் இருக்கும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு 31ம் திகதி அனுப்பிவைத்திருக்கிறது. உள்நாட்டுப் பொறிமுறைகள் மிகவும் சீராக இயங்குவதான தோற்றப்பாட்டைக் கொடுக்கும் வகையில் 14 தலைப்புகளில் 25 புள்ளிகளில் கனகச்சிதமாக அவ்வறிக்கை எழுதப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் இதைப் பார்த்து வியந்து போயிருப்பதாகப் பிரித்தானியாவை மையமாகக் கொண்டியங்கும் தகவலறிந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
செப். 06 21:36

அவசரகாலச் சட்டம் அமுல்- பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

(மன்னார், ஈழம்) கொவிட் நோய்த் தொற்றைத் தடுத்தல் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துதல் என்ற போர்வையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அமுல்படுத்தப்படட அவசரகாலச் சட்டம் இன்று திங்கட்கிழமை இலங்கைப் பாராளுமன்றத்தில் 81 மேலதிக வாக்குகளினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் பெறப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் அறிவித்தார். இன்று காலை பத்து மணி முதல் மாலை வரை விவாதம் இடம்பெற்றது.
செப். 05 22:53

கொழும்புத் துறைமுகத்துக்குச் சொந்தமான பதின்மூன்று ஏக்கர் நிலப்பகுதி சீன நிறுவனத்திடம் கையளிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவின் தலைநகர் கொழும்பில் உள்ள கொழும்புத் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான பதின்மூன்று ஏக்கர் நிலப்பகுதியை சீன அரசின் நிறுவனம் ஒன்றுக்கு வழங்க ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சம்மதத்துடன் கொழும்புத் துறைமுக அதிகாரிகள் காணியைக் கையளிப்பதற்கான எற்பாடுகளை செய்துள்ளதாக அனைத்துத் துறைமுகங்களின் பொது ஊழியர் சங்கச் செயலாளர் நிரோஷன் கொரகானகே தெரிவித்தார். காணியைக் கையளிப்பது தொடர்பாக கொழும்புத் துறைமுக ஊழியர் சங்கப் பிரதிநிதிகளோடு உரையாடவில்லை எனவும் அவர்களின் சம்மதம் பெறப்படவில்லையெனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
செப். 04 22:37

சந்தேக நபர்களை விசாரணை செய்ய விசேட நீதிபதிகள் குழு

(மன்னார், ஈழம்) இலங்கையில் 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைதானவர்களில் 26 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கினை ட்ரயல் அட் பார் முறையில் விசாரணை செய்ய மூன்று நீதிபதிகள் கொண்ட விஷேட குழுவொன்றை பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரிய கடந்த மாதம் நியமனம் செய்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி தமித் தொட்டவத்த தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமல் ரணராஜ மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவர் கொண்ட நீதிபதிகள் குழாமே உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பிரதம நீதியரசரினால் கடந்த வாரம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செப். 03 22:32

மன்னாரில் கொவிட் தொற்றால் மரணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

(மன்னார், ஈழம்) இலங்கையின் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் கொவிட்- 19 நோய்த் தொற்றினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதினால் மன்னார் நகரில் முப்பது மில்லியன் ரூபா செலவில் புதிய மின் மயானம் ஒன்றினை அமைப்பதற்கும், அதற்கு தேவையான புதிய வாகனமொன்றினைக் கொள்வனவு செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மன்னார் மாவட்டத்தில் அதி தீவிரமாகக் கொரோனா நோய்த் தொற்றுப் பரவிவரும் நிலையில் குறித்த நோய்த் தொற்றினால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட மன்னார் பொது வைத்தியசாலையில் ஒரே நாளில் நால்வர் மரணமடைந்திருந்தனர்.
செப். 02 22:44

அவசரகாலச் சட்டம்- பாராளுமன்றத்தில் விவாதம்

(வவுனியா, ஈழம்) அவசரகாலச் சட்டம் தொடர்பாக விவாதிப்பதற்கு இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றம் எதிர்வரும் 6 ஆம் 7 ஆம் திகதிகளில் கூடவுள்ளது. நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பாக இன்று வியாழக்கிழமை சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதன்போது அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி அமுல்படுத்தியமை தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரியிருந்தன. இதனை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் விவாதத்திற்குச் சம்மதம் தெரிவித்தார்.
செப். 01 20:50

வேகமாகப் பரவும் கொவிட். இரண்டு நாட்களில் 409 பேர் மரணம்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் கொவிட் நோய்ப்பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மேலும் இரண்டு வாரங்கள் நீடிப்பதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆனாலும் புதன்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுமென அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. நேற்றுச் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரையான 24 மணி நேரத்தில் 215 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் திணைக்களம் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.
ஓகஸ்ட் 31 20:27

வடமாகாணத்தில் உள்ள விகாரைகளுக்குப் புத்தர் சிலைகளை அன்பளிப்புச் செய்யுமாறு பணிப்பு

(மன்னார், ஈழம்) ஜனாதிபதியாக கோட்டபய ராஜபக்ச தெரிவாகி எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில் அதனை அனுஷ்டிக்கும் முகமாக தமிழர் தாயகமான வட மாகாணத்தில் உள்ள பௌத்த விகாரைகளுக்கு புத்தர் சிலைகளை அன்பளிப்புச் செய்ய வேண்டும் என இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டபய ராஜபக்ச ஐனாதிபதியாகப் பதவி பிரமாணம் செய்து எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைகின்றது. இந்த நிலையில் இதனை அனுஷ்டிக்கும் வகையில் ஆளும் கட்சியின் தொழிற் சங்கமான வட மாகாண பொதுஜன பெரமுன போக்குவரத்துச் சபை ஊழியர் சங்கம் ஏற்பாடுகளைக் மேற்கொண்டு வருகிறது.
ஓகஸ்ட் 31 20:00

அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தினார் ஜனாதிபதி- அனைத்து அதிகாரங்களையும் கையிலெடுத்தார்

(மன்னார், ஈழம்) அத்தியாவசிய உணவுத் தேவைகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கையாளக்கூடிய முறையில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கையொப்பமிட்ட இலங்கை ஒற்றையாட்சி அரச வர்த்தமானி இன்று செய்வாய்க்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவில் இருந்து அவசரகாலப் பிரகடனம் நடைமுறைக்கு வரவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தரவின்படி இவர் இன்று நள்ளிரவில் இருந்து செயற்படவுள்ளார்.
ஓகஸ்ட் 31 12:22

ஆடு, மாடு, கோழிகள் தேவையில்லை- அரசாங்கத்திடம் உறவினர்கள் கடும் ஆட்சேபம்

(மன்னார், ஈழம்) இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறவுகள் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என பல வருடங்களாக அங்கலாய்த்து வரும் நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகத்தின் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தாய்மார்களிடம் ஆடு மாடுகள் மற்றும் கோழிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி அது தொடர்பான பதிவுகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் சங்கத்தின் தலைவி திருமதி மனுவல் உதயச்சந்திரா பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.