நிரல்
ஜூலை 27 10:19

இந்திய அரசிடம் கையளிக்குமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இலங்கைப் பிரதமர் ரணிலிடம் கோரிக்கை

(யாழ்ப்பாணம், ஈழம் ) தமிழர் தாயகமான வடக்கு பிரதேசத்திற்குரிய வீடமைப்புத் திட்டத்தை இந்திய மத்திய அரசிடமே கையளிக்குமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சீன அரசு 1.3 மில்லியன் ரூபாய்களில் வீடொன்றை அமைக்க முடியுமென கூறியிருந்தது. ஆனால் இந்திய அரசினால் கட்டப்படும் வீடொன்றுக்கு 2.2 மில்லியன் ரூபாய்கள் செலவாகின்றன. ஆகவே சீன அரசின் பெறுமதியில் வீடுகளை அமைப்பதற்கு இந்திய அரசு தங்களிடம் உறுதியளித்துள்ளதாகவும் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவிடம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் சீன அரசிடம் கையளிப்பதே சிறந்தது என மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியிருந்தார்.
ஜூலை 26 15:09

மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்ட முறிவுகள்- அதிகாரிகள் கூறுகின்றனர்

(மன்னார், ஈழம்) தமிழர் தாயகமான மன்னார் நகர நுழைவாசலில் உள்ள இலங்கை அரசாங்கத்தின் விற்பனை நிலையமான சதொச கட்டட வளாகத்தில் இருந்து மீட்கப்படும் எலும்புக் கூடுகளில், கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்ட அடையாளங்கள் இருப்பதாக அகழ்வுப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் தெரிவி்க்கின்றனர். இன்று வியாழக்கிழமை 42 ஆவது நாளாக இடம்பெறும் மனிதப் புதைகுழி அகழ்வின்போது, மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் பலவற்றில் கூரிய ஆயுதத்தால் பலமாகக் குத்தப்படும்போது ஏற்படும் முறிவுகள் காணப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். சடலங்கள் புதைகுழியில் உரிய முறையில் புதைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை மீட்கப்படும் எலும்புக் கூடுகளில் இருந்து அறியமுடிவதாக களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ் சோமதேவா கூறுகின்றார்.
ஜூலை 26 10:47

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் அடிபணியமாட்டார்- அமைச்சர் மஹிந்த சமரசிங்க விளக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்திலும் மற்றும் அரசியல் செயற்பாடுகளிலும் சர்வதேச அழுத்தங்களுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் அடிபணியமாட்டார் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார். ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் பல்வேறு பரிந்துரைகளை செய்துளார் என்றும், ஆனால் அவற்றை இலங்கை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையெனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளித்தபோது இலங்கை அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜூலை 25 22:13

வீடமைப்பு விவகாரத்தில் சீன இந்திய அரசுகளின் போட்டி, இலங்கை அரசாங்கம் பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டுள்ளது

(யாழ்ப்பாணம், ஈழம் ) அரசியல் வேறுபாடுகளுக்கு மத்தியிலும் ஈழத் தமிழர்களின் 70 ஆண்டுகால சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை அழிப்பதற்கு மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு, நேரடியாகவும் மறைமுகமாகவும் 2009 ஆம் ஆண்டு இராணுவ உதவிகளை வழங்கிய சீன இந்திய அரசுகள், தற்போது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைக்கும் விடயத்தில் முரண்பட்டுள்ளன. சீனா இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனரட்ன பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டுள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனரட்ன, தமிழர் தாயகத்தை நோக்கிய சீன. இந்திய மோதல் குறித்து விளக்கமளித்துள்ளார்.
ஜூலை 25 15:06

கொழும்பில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியும் அலுவலகப் பிரதிநிதிகள் நேரில் பார்வையிட்டனர்

(மன்னார், ஈழம்) தமிழர் தாயகமான மன்னார் நகரத்தின் நுழைவாசலில் போர்க்காலத்திற்குரியது என சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழியில் இருந்து சிறுவர்களின் பாற்பற்களுடைய மண்டையோடுகள் உட்பட 52 எலும்புக் கூடுகள் மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பில் இயங்கும் இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போவோரைக் கண்டறியும் அலுவலகப் பிரதிநிதிகள் இன்று புதன்கிழமை மன்னாருக்கு வருகை தந்து தந்துள்ளனர். புதைகுழி அகழ்வுப் பணியில் ஈடுபடும் சட்ட வைத்திய அதிகாரி டபில்யூ. ஆர்.ஏ.எஸ். ராஜபக்ஷ, களனி பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜ் சோமதேவா ஆகியோருடனும் அவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
ஜூலை 24 17:00

நீதிபதியின் உத்தரவுக்கு அமைவாக பரிசோதனை செய்யப்படவில்லை. மேலதிக விசாரனையும் நிறுத்தம்?

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாணம் கல்வியங்காடு- நாயன்மார்க் கட்டு செம்மணி பிரதேசத்திற்கு அருகில் கண்டபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான விசாரனைகள் தெர்ந்து நடைபெறக்கூடிய வாய்ப்புகள் இல்லையென பிரதேச மக்கள் கூறுகின்றனர். இலங்கை அரசாங்கத்தின் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் ஏற்பாட்டில் இந்திய நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக, வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள கடந்த வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டிருந்தன. சென்ற சனிக்கிழமை மாலை யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி சி.சதிஸ்தரன் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரனைகளை மேற்கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைப் பொலிஸாருக்கு உத்தரவுமிட்டிருந்தார்.
ஜூலை 23 23:40

சம்பந்தன், கோட்டபய, மஹிந்த கலந்துரையாடல்- மைத்திரி, ரணில் பங்குகொள்ளவில்லை

(வவுனியா, ஈழம் ) இலங்கைத் தலைநகர் கொழும்பு காலிமுகத்திடலில், சீன அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சங்ரில்லா ஏழு நட்சத்திர ஹோட்டேலில், சீன இராணுவத்தின் 91 ஆவது சம்மேளன நிகழ்வு இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கேட்டபய ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆனால் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பங்குபற்றவில்லை. எனினும் மைத்திரி- ரணில் அரசாங்கத்தரப்பில் இருந்து அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, அர்ச்சுன ரணுதுங்க, ஜோன் அமரதுங்க, ஆகியோரும் ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபல விஜயரட்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஜூலை 23 17:33

மருத்துவ வசதிகள் சீரில்லை- தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் புறக்கணிப்பதாக மக்கள் குற்றச்சாட்டு

(அம்பாறை, ஈழம்) தமிழ் பேசும் மக்களின் தாயகமான அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அன்னமலை 2ல் இருக்கும் மத்திய மருந்தகத்தின் கடமையாற்றும் வைத்தியர் உரிய நேரத்திற்கு வருகைதராமையினால் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக கிராமவாசியான சி.அருள்பிரகாசம் தெரிவித்தார். அன்னமலை கிராமத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அனைத்தும் இந்த மருந்தகத்தை நம்பித்தான் வசிக்கின்றார்கள். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாலை வேளையில் வைத்தியசாலைக்கு செல்கின்றனர். எனினும் வைத்தியர் உரிய நேரத்தில் வருகைதராமையினால் நோயாளிகள் பெரும் ஏமாற்றத்துடன் வீடுதிரும்புகின்றனர்.
ஜூலை 23 15:15

போர்க்கால மனிதப் புதைகுழி விவகாரத்தை மூடிமறைக்க இலங்கைப் பொலிஸார் முயற்சி- கொழும்பில் இருந்து அழுத்தம்?

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாணம் கல்வியங்காடு- நாயன்மார்க் கட்டு செம்மணி பிரதேசத்திற்கு அருகில் கண்டபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான விசாரனைகளுக்கு இலங்கைப் பொலிஸார் ஒத்துழைப்பு வழங்கவில்லை. இலங்கை அரசாங்கத்தின் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் ஏற்பாட்டில் இந்திய நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக, வெட்டப்பட்ட குழியில் இருந்தே மனித எச்சங்கள கடந்த வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டிருந்தன. இதனால் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை குறித்த விசாரனைகளை முன்னெடுப்பதை தவிர்க்குமாறு இலங்கைப் பொலிசாருக்கு கொழும்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. கொழும்பில் இருந்தும் அதிகாரிகள் சிலர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர்.
ஜூலை 23 13:26

இந்தியத் துணை கண்டத்தில் சிறந்த மாநில அரசுகளின் பட்டியல் வெளியீடு- தமிழ்நாடு, கேரளா சிறப்பான ஆட்சியாம்

(சென்னை, தமிழ்நாடு) இந்தியாவின் கருநாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் இயங்கும் பொது விவகார மையம் (Public Affairs Centre) வெளியிட்ட 2018-பொதுவிவகார குறியீடு (Public Affairs Index) முடிவுகளின் படி, தென்னிந்திய மாநில அரசுகளான கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, கருநாடகம் சிறந்த ஆட்சி முறைகளை கொண்டவைகள் எனவும் மத்திய பிரதேசம், ஜார்காந்த், பீகார் ஆகிய வட இந்திய மாநிலங்களின் நிர்வாகங்களுக்கு இறுதி புள்ளிகளே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1994ஆம் ஆண்டு, இந்திய துணைக்கண்டத்தின் பொருளாதர நிபுணர்களின் ஒருவரான சாமுவேல் பவுல் என்பரால், இந்திய துணைக்கண்ட மாநில அரசுகளின் ஆட்சி முறையினை கண்காணிக்க உருவாக்கப்பட்ட அமைப்புதான், பொது விவகார மையம் (Public Affairs Centre).