நிரல்
ஜூலை 11 11:02

அமெரிக்க - இந்திய அரசுகளிடையேயான பனிப்போர் இலங்கை விடயத்தில் தாக்கம் செலுத்தவில்லை

(வவுனியா, ஈழம்) ரசிய- உக்ரெய்ன் போரினால் அமெரிக்க - இந்திய அரசுகளுக்கிடையே பனிப்போர் மூண்டுள்ளது என்பது உண்மை. ஆனால் இந்த இரு நாடுகளும் இலங்கை விவகாரத்தில் ஒரே புள்ளியில் நின்றுதான் செயற்படுகின்றன என்பதைக் கூர்மைச் செய்தித் தளம் பல தடவை கூறியிருக்கின்றது. குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கச் சார்புடையவர் என்பதும், இந்தியாவுடனான இலங்கையின் உறவுகூட அமெரிக்காவுக்கும் விருப்பமான நகர்வுதான் என்பதும் வெளிப்படை. சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் மூலம் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக முடிவெடுத்தாலும், அடுத்த வரவுள்ள ஜனாதிபதிகூட அமெரிக்க - இந்தியச் சார்புப் போக்கைக் கையாள வேண்டும் என்ற சமிக்ஞைகள் வழங்கப்பட்ட நிதியுதவிகள் மூலம் கன கச்சிதமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
ஜூலை 10 23:52

காத்திருக்க முடியாதென போராட்டக்குழு அறிவிப்பு- பிரதமர் பதவியில் இருந்து விலக ரணில் கூறும் காரணம்

(வவுனியா, ஈழம்) கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதிப் பதவியில் உடனடியாக விலக வேண்டும். எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை வரை காத்திருக்க முடியாதென காலிமுகத் திடல் போராட்டக்குழு அறிவித்துள்ளது. ஒன்பதாம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற போராட்டம் மற்றும் அதன் பிரகடனத்தின் பிரகாரம் கோட்டாபய ராஜபக்ச உடனடியாக விலக வேண்டுமெனவும் கேட்டுள்ளனர். எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை பதவி விலகுவதாக கோட்டாபய ராஜபக்ச சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தனவுக்கு அறிவித்திருந்தார். இந்த நிலையிலேயே உடனடியாகப் பதவி விலக வேண்டுமென போராட்டக்குழு அறிவித்துள்ளது.
ஜூலை 09 22:38

பதவி விலகவுள்ளதாக கோட்டாபய சபாநாயகருக்கு அறிவித்தார்- சர்வகட்சிக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றம்

(வவுனியா, ஈழம்) போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமரின் அலரி மாளிகை போன்றவற்றை முற்றுகையிட்டுக் கைப்பற்றியுள்ளதால், எதிர்வரும் புதன்கிழமை 13 ஆம் திகதி ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலகவுள்ளதாக கோட்டாபய ராஜபக்ச சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தனவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். இத் தகவலை சபாநாயகர் சனிக்கிழமை இரவு ஊடகங்களுக்கு அறிவித்தார். சுமார் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள், சனிக்கிழமை காலை கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையையும் காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தையும் முற்றுகையிட்டு பிற்பகல் கைப்பற்றினர். ஆனால் கோட்டாபய ராஜபக்ச அங்கிருக்கவில்லை. அவர் ஏலவே அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடமொன்றுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது.
ஜூலை 08 22:02

சனிக்கிழமை போராட்டத்தை அடக்க ஊரடங்குச் சட்டம் அமுல்- மாணவர்களின் பேரணி மீது பொலிஸார் தாக்குதல்

(வவுனியா, ஈழம் ) வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் நாளை சனிக்கிழமை இரவு வரை தொடர்ச்சியாக நடைபெறவிருந்த போராட்டத்தைத் தடுக்க இலங்கைப் பொலிஸ் தலைமையகம் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது. கொழும்பு களனி பல்கலைக்கழகங்களுக்கு முன்பாக வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆரம்பித்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேரணி, புறக்கோட்டை, கோட்டை பிரதேசங்கள் ஊடாக ஜனாதிபதி மாளிகையை நோக்கி வந்தபோது பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதல்களை நடத்தினர். அதனையும் பொருட்படுத்தமால் இரவு ஏழு மணிக்கு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாசலை அண்மித்த தூரத்தில் மாணவர்கள் வந்தபோது, கலகமடக்கும் பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளையும் நீர்த்தாரைகளையும் மாணவர்கள் மீது பிரயோகித்தினர்.
ஜூலை 07 22:27

கொழும்பில் இராணுவம் குவிப்பு- போராட்டங்களைத் தடுக்க அரசாங்கம் கடும் முயற்சி

(வவுனியா, ஈழம்) கொழும்பில் ஒன்பதாம் திகதி சனிக்கிழமை அரசாங்கத்துக்கு எதிராகக் நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்தை பொலிஸ், மற்றும் இராணுவத்தினரைப் பயன்படுத்தித் தடுக்க முற்பட்டால் போராட்டம் வெடிக்குமென தொழிற்ச் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஜனாதிபதிப் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலக வேண்டுமென வலியுறுத்தி கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாகவும், காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும் நடைபெறவுள்ள போராட்டத்தினால், பொதுமக்கள் பாதிக்கப்படவுள்ளதாக் குறிப்பிட்டு அந்தப் போராட்டத்தைத் தடுக்குமாறு கோரி கோட்டைப் பொலிஸார் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அந்த மனுவை கொழும்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஜூலை 06 23:21

கோட்டாபய, ரணில் ஆகியோருக்கு எதிராகக் கொழும்பில் தொடர் போராட்டங்கள்- சனியன்று பேரணி

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்குச் செல்லுமாறு கோரி கொழும்பில் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகை முன்பாகவும் நாடாளுமன்ற வளாகத்துக்கு முன்பாகவும் புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களைக் கலகமடக்கும் பொலிஸார், இராணுவத்தினர் இணைந்து தடுத்தனர். ஆனாலும் போராட்டங்கள் தொடருமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் ஒன்பதாம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள பேரணியில் அனைவரையும் பங்கொள்ளுமாறு இலங்கையின் மூத்த சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜூலை 05 22:47

அடுத்த ஆண்டு மேலும் நெருக்கடி- 2026 வரை 28 பில்லியன் டொலர்களைக் கடனாகச் செலுத்த வேண்டும் என்கிறார் ரணில்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவு தற்போது எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகள் 2023 ஆம் ஆண்டுவரை தொடருமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செவ்வாய்க்கிழழை நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இலங்கைத்தீவு இருந்த முன்னைய நிலைமைக்குச் செல்ல 2026 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டுமென்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் இந்த ஜூன் மாதம் மூவாயிரத்து 489 மில்லியன் டொலர்களை கடனாக செலுத்தவேண்டும், அத்துடன் 2023 முதல் 2026ஆம் ஆண்டு வரை 28 பில்லியன் டொலர்களை கடனாக செலுத்த வேண்டுமெனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் கடன்களை ஓரளவு மறுசீரமைக்க முடியும் எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
ஜூலை 03 20:11

தமிழகம் சென்ற வயோதிப் பெண் மரணம்- கணவர் ஆபத்தான நிலையில் மதுரை வைத்தியசாலையில் அனுமதி

(மன்னார், ஈழம்) தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் முருங்கனைச் சேர்ந்த 71 வயதான பரமேஸ்வரி எனும் வயோதிபப் பெண் இரண்டாம் ஆம் திகதி சனிக்கிழமை மதுரை ராஜாஜி அரசினர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாகவும், அவரின் கணவரான 74 வயதுடைய பெரியண்ணன் சிவன், குறித்த வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடுவதாகவும் தம்பதியினரின் மருமகளான மன்னார் முருங்கனில் வசிக்கும் 28 வயதுடைய நதிக்குமார் சாரதா கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
ஜூலை 02 21:44

வடக்குக் கிழக்கு உள்ளிட்ட பதினைந்து இலட்சம் குழந்தைகளின் மருத்துவ கிளினிக் முடக்கம்

(கிளிநொச்சி, ஈழம்) பொருளாதார நெருக்கடி, எரிபொருட் தட்டுப்பாடுகள் காரணமாக, மருந்துகள், மருத்துவ உபகரண பற்றாக்குறை மற்றும் போசாக்கான உணவு வகைகளைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் காரணமாக இலங்கைத்தீவில் சுமார் அறுபது இலட்சம் பேர் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்களின் ஆரோக்கியம் மற்றும் போசாக்குப் பிரச்சினைகள் போன்றவற்றால் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், சுமார் பதினையாயிரம் இருதய நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜூலை 01 22:58

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த ஆட்கொணர்வு மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு

(வவுனியா, ஈழம்) இறுதிப் போரில் இலங்கைப் படையினாிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் பதினைந்தாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மூத்த சட்டத்தரணி இரட்ணவேல் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை வவுனியா மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில் மீண்டும் திகதி இடப்பட்டதன் பின்னர் இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆட்கொணர்வு மனுக்கள் சம்பந்தமான வழக்கின் தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட இருந்த போதிலும் பொருளாதார நெருக்கடி, எரிபொருட்கள் இல்லாமை போன்றவை காரணமாக இன்று தீர்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறினார்.