நிரல்
டிச. 15 23:19

கொழும்பில் பிரபல வர்த்தகர் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்

(வவுனியா, ஈழம்) பிரபல தொழிலதிபரும், ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் தலைவருமான தினேஸ் ஷாப்டர் (Dinesh Schaffter) கொழும்பில் வியாழக்கிழமை மாலை கடத்தப்பட்டுக் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டபோதும். அவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பொரளை கனத்தை மைதானத்தில் அவருடைய வாகனத்தில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையிலேயே வைத்தியசாலையில் அனுமதித்ததாகப் பொரள்ளைப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் கூறுகின்றனர்
டிச. 14 23:18

இலங்கைத்தீவு ஒரே நாடு என்கிறார் சஜித் பிரேமதாசா

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் இனவாதம், பிரிவினைவாதம், மதவாதம் போன்றவற்றை நிராகரிக்கும் சட்ட விதிகளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளாா். செவ்வாய்கிழமை கொழும்பில் இடம்பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இலங்கைத்தீவு ஒரே நாடு என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் வடக்கு கிழக்குத் தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்து உரிய கருத்துக்களை சஜித் பிரேமதாச முன்வைக்கவில்லை. ஆனால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமெனக் கூறினார். ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இன, மதம், சாதி வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சஜித் பிரேமதாசா கூறினார்.
டிச. 11 15:00

அதிகாரப் பங்கீடின்றி முதலீடுகள் சாத்தியமில்லை என்பதை உலகத்துக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும்

(மட்டக்களப்பு, ஈழம்) அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற வல்லரசு நாடுகளுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், வர்த்தகச் செயற்பாடுகள் போன்ற பல திட்டங்களை முன் அறிவித்தல்கள் இன்றி ரத்துச் செய்த சிங்கள ஆட்சியாளர்கள், புலம்பெயர் தமிழர்களுக்கு முதலீடு செய்ய அழைப்பு விடுத்திருக்கின்றனர்.  அரசுக்கு அரசு என்ற அணுகுமுறையில் சர்வதேச நியமங்களுக்கு ஏற்பச் செய்யப்பட்ட ஒப்பந்தங்களைச் சிறிய தீவான இலங்கை ரத்துச் செய்யும் சூழலில், எந்தவிதமான அரசியல் அதிகாரங்கள் - பாதுகாப்புகள் இல்லாத புலம்பெயர் தமிழர்கள் எந்த நம்பிக்கையோடு இலங்கையில் முதலிட முடியும் என்ற கேள்விகள் நியாயமானவை.
டிச. 09 18:19

சீனாவுக்கு எதிரான சாணக்கியனின் கருத்தைக் கண்டித்துக் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனா இலங்கையோடு விட்டுக் கொடுத்துச் செயற்பட வேண்டும் இல்லையேல் சீனா வீட்டுக்குப் போ என்று போராட நேரிடுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு உறுப்பினர் சாணக்கியன் இலங்கை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்திய கருத்தைக் கண்டித்துக் கொழும்பில் வெள்ளிக்கிழமை முற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. நவ ஜனதா பெரமுன எனும் சிங்களக் கடும்போக்குவாத அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது.
டிச. 07 18:52

ஜப்பான் அரசுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ரத்துச் செய்த ஆட்சியாளர்கள்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையின் தலைநகர் கொழும்பில் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜப்பான் அரசின் கடனுதவித் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இலகு ரயில் சேவைத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் தன்னிச்சையாக ரத்துச் செய்துள்ளது. இத் திட்டத்தை ரத்துச் செய்வது தொடர்பாக ஜப்பான் அரசுடன் எந்தவிதமான பேச்சுக்களும் நடத்தப்படவில்லை என்றும், இதனால் ஐநூற்றுப் பதினாறு கோடி ரூபாவை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் ஜப்பான் கோரியுள்ளது. சர்வதேச விதிகளின் பிரகாரம் மனுத்தாக்கல் செய்யப்பட்டால் இதனைவிடக் கூடுதல் நஷ்டஈடு வழங்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிச. 06 20:05

வெளிநாட்டுத் தூதுவர்களுடன் ரணில் உரையாடல்

(வவுனியா, ஈழம்) இலங்கைக்கு நிதி வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கும் நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலரை அழைத்துக் கலந்துரையாடியுள்ளார். பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில் ரணில் விக்கிரமசிங்க தூதுவர்களையும் தூதரக அதிகாரிகள் சிலரையும் சந்தித்து உரையாடியுள்ளார்.
டிச. 05 21:27

அரசாங்கத்துக்கு எதிரணி உறுப்பினர்கள் சிலர் ஆதரவு

(வவுனியா, ஈழம்) வரவு செலவுத் திட்டம் முடிவடைந்த பின்னர் புதிய அமைச்சர்கள் சிலர் பதவிப் பிரமாணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த வாரம் சிலர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. முன்னாள் அமைச்சர்களான குமார வெல்கம, ராஜித சேனாரத்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகத் தெரிய வருகின்றது. ராஜித சேனரட்ன சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்.
டிச. 03 19:36

மன்னார் பள்ளிமுனை காணி அபகரிப்பு வழக்கின் தீர்ப்பு ஜனவரியில்

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் பகுதியான மன்னார் மாவட்டத்தின் பள்ளிமுனை மேற்கு பகுதி மக்களால் கடற்படையினருக்கு எதிராக மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி வழங்கப்படவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் கூர்மைச் செய்தி தளத்திற்கு தெரிவித்தார். மன்னார் பள்ளிமுனையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அவர்களின் காணிகளை, இலங்கை கடற்படையினர் ஆக்கிரமித்து தற்பொழுது தொடர்ந்தும் அங்கு நிலை கொண்டுள்ளனர். இந்தநிலையில் கடற்படையினரின் ஆக்கிரமிப்பில் வீடுகளையும் காணிகளையும் இழந்தவர்களில் இருபத்து நான்கு உரிமையாளர்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றில் கடற்படையினருக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.
டிச. 02 22:54

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படவில்லையானால் போராட்டம்

(கிளிநொச்சி, ஈழம்) முறைப்படி நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்தாமல் தேர்தல்கள் ஆணைக்குழு இரட்டை வேடம் போடுவதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் நளின் பண்டார நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வரவுசெலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். தேர்தல் ஆணைக்குழுவை முற்றுகையிடும் நிலை ஏற்படும் என்றும் நளின் பண்டார நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் தயாராக வேண்டும். ஆனால் அது பற்றி எதுவிதமான கருத்துக்களையும் கூறாமல் அரசாங்கம் அமைதி காக்கிறது.
டிச. 01 22:26

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு கோரிக்கை

(வவுனியா, ஈழம்) மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக இதுவரையும் அரசாங்கத்திடம் இருந்து உத்தரவுகள் கிடைக்கவில்லையென தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டிய அவசியம் குறித்து கொழும்பில் உள்ள சிவில் சமூக அமைப்புகளின பிரதிநிதிகள் வியாழக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளைச் சந்தித்தனர். இதன்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு செப்ரெம்பர் மாதம் பரிந்துரைத்துள்ளது.