நிரல்
ஜன. 12 15:34

திருகோணமலையில் படைத்தளம் அமைக்க பிரித்தானியா முயற்சி- ஆனால் கொழும்பில் உள்ள தூதரகம் மறுப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) வடக்கு மாகாணம் முல்லைத்தீவுக் கடற் பிரதேசத்தில் இருந்து கிழக்கு மாகாணம் திருகோணமலைக் கடற்பிரதேசம் வரையான எண்ணெய்வள ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, திருகோணமலைத் துறைமுகத்தில் கடற்படைத் தளம் ஒன்றையும் அமைத்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கச் சார்பு நாடான பிரித்தானியாவும் திருகோணமலையில் கடற்படைத் தளம் ஒன்றை அமைப்பதில் ஆர்வம் கொண்டுள்ளதாக லன்டன் டெலிகிராவ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆசியாவில் தளங்களை அமைப்பதற்கு பிரித்தானியா திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜெரெமி ஹன்ட் கூறியுள்ளார். அந்த அடிப்படையில் திருகோணமலையில் கடற்படை தளத்தை அமைப்பது குறித்து பிரித்தானியா ஆர்வம் கொண்டுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஜன. 11 22:32

ஒற்றையாட்சியை மீண்டும் உறுதிப்படுத்தினார் ரணில்- வடக்கு- கிழக்கு இணைப்பு இல்லை எனவும் கூறியுள்ளார்

(யாழ்ப்பாணம், ஈழம் ) புதிய அரசியல் யாப்பு ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்டது என இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவில்லை என்றும் சமஸ்டி ஆட்சி முறை இல்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்புக்கான நகல் யோசனைகளைத் தயாரிக்கும் நிபுணர்குழுவிடம் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் கையளித்த அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியபோது ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார். ஏலவே நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் ஒன்பதாவது சரத்தில் உள்ள பௌத்த சமயத்துக்கான முன்னுரிமை, புதிய அரசியல் யாப்பில் தொடர்ந்தும் இருக்கும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
ஜன. 11 11:57

தடையையும் மீறி சட்டவிரோத மீன்பிடி முறையைப் பயன்படுத்தி கடற்தொழில் மேற்கொள்ளப்படுகின்றது - ஆலம் குற்றச்சாட்டு

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகத்தின் நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு போரினால் அனைத்தையும் இழந்து தமது வாழ்க்கையை புதிதாக ஆரம்பித்து 10 வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில் தற்போதும் தமக்கு தொடர்ச்சியாக அநீதி இழைக்கப்பட்டு வருவதாக வடமாகாண மீனவர் இணைய தலைவர் என்.எம்.ஆலம் விசனம் வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் கடந்த 1 வருடத்துக்கு முன்னர் சுருக்கு வலை மற்றும் வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல் ஆகியவற்றுக்கு தடைச் சட்டங்கள் ஏற்படுத்தப்ட்ட போதும் இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் தற்போதும் வடமாகாணத்தில் தடைசெய்யப்பட்ட சுருக்குவலை, சிலிண்டர் தொழில், மின் பாய்ச்சி மீன்பிடித்தல் உட்பபட்ட சட்டவிரோத தொழில்கள் மேற்கொள்ளப்பபட்டுவருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
ஜன. 10 14:54

ஆசிரியைகளை இடமாற்றுமாறு வலியுறுத்தி வட்டுக்கோட்டை பிளவத்தை அமெரிக்க மிசன் பாடசாலை மாணவர்கள் போராட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஆசிரியைகளை இடமாற்றுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பிளவத்தை அமெரிக்க மிசன் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். பாடசாலை நாளான இன்று காலை 7 மணிக்கு பாடசாலை முன்றலில் ஒன்றுகூடிய மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக யாழ்ப்பாண செய்தியாளர் கூர்மை செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டார்.
ஜன. 10 14:30

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை வெளியீடு - தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை குறித்து தகவல் இல்லை

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை இதுவரை சரியாக வெளியிடப்படாத நிலையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி வரை நிரந்தரமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டு மேன் முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ள கைதிகள் என ஆயிரத்து 299 பேர் உள்ளதாக இலங்கை நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன. 10 12:14

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் யாழ்ப்பாணத்தில் அனுட்டிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத்தமிழ் மக்களை மக்களை இலக்கு வைத்து கடந்த காலங்களில் இலங்கை அரச படையினராலும் சிங்கள அரச கைக்கூலிகளாலும் நடத்தப்பட்ட படுகொலைகளில் ஒன்றான உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுட்டிக்கப்பட்டுள்ளது.
ஜன. 10 10:16

பொங்கல் தினத்தன்று கண்டன ஆர்ப்பாட்டம் - போராட்டத்தைக் குழப்ப முயற்சி - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் விசனம்

(வவுனியா, ஈழம்) சர்வதேச நாடுகளின் துணையுடன் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தினால் தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு போரின் நிறைவின் பின்னரும் அதற்கு முற்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வவுனியாவில் நேற்று புதன்கிழமை கவனயீர்ப்புடன் கூடிய கண்டனப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜன. 09 22:30

திருகோணமலையில் அமெரிக்கக் கடற்படைத்தளம் - மைத்திரியிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கும் ரணில் தரப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியான திருகோணமலையில் உள்ள இலங்கைக் கடற்படை முகாமில் அமெரிக்கக் கடற்படைத் தளமொன்று அமைக்கப்பட்டு வருகின்றமை குறித்து மகிந்த ராஜபக்ச தரப்பு இலங்கை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அது குறித்து தனக்கு எதுவுமே தெரியாதெனக் கூறியுள்ளார். அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கும் நடவடிக்கைகள் பாதுகாப்பு அமைச்சுக்குரியது என்றும் வெளியுறவு அமைச்சுக்கு அந்த விடயத்தில் தொடர்பில்லை எனவும் திலக் மாரப்பன கூறியுள்ளார். இன்று புதன்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் மகிந்த தரப்பு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜன. 09 14:30

மட்டக்களப்பில் அடையாளங்காணப்படாத நோயினால் கால்நடைகள் உயிரிழப்பு - திட்டமிட்டா சதியா என தொழிலாளர்கள் சந்தேகம்

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மைலத்தமடு மற்றும் பெரிய மாதவணைப் பகுதியில் கால்நடைகளுக்கென ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரை பகுதியில் உள்ள கால்நடைகள் அடையாளங்காணப்படாத தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான மருந்துகளைக் கொடுத்தவுடன் அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளமை அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படத்துவதாக கால்நடை பண்ணையாளர் சங்கத்தின் செயலாளர் த.நிமலன் தெரிவித்தார்.
ஜன. 09 09:58

மடுத் திருத்தலத்தின் நிர்வாகம் தொடர்ந்தும் மன்னார் மறை மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்- ஆயர் இம்மானுவல்

(மன்னார், ஈழம்) மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள மடுத்திருத்தலம் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அதன் முழு நிர்வாகியாகவும் பொறுப்புக் கூறக்கூடிய தரப்பினராகவும் தானே தொடர்ந்து செயற்படுவேன் என மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இம்மானுவல் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை சரியாக வருமாக இருந்தால் மாத்திரமே தாம் அதற்கு அனுமதி கொடுப்போம் என்றும் இல்லாவிட்டால் அது தேவையில்லை என்று கூறுவதற்கும் தாங்கள் தயாராக இருப்பதாக ஆங்கில செய்தி இணையத் தளம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது ஆயர் குறிப்பிட்டார்.