நிரல்
மே 22 10:21

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் கல்விச் செயற்பாடுகளைப் புறக்கணிப்பதாக அறிவிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவபீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகியோரை அவர்களது வழக்குகளிலிருந்து நிரந்தரமாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் அனைத்துக் கல்விச் செயற்பாடுகளையும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக நேற்றுத் திங்கட்கிழமை திகதியிடப்பட்ட கடிதமொன்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் சார்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மே 22 10:13

கொழும்புத் துறைமுக அபிவிருத்தி - ஜப்பான், இந்தியா இணக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்துள்ளதாலும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான நிலையிலும், கொழும்புத் துறைமுகத்தின் தென்பகுதியில் உள்ள கிழக்குக் கொள்கலன் முனையத்தில் பாரிய கொள்கலன் கப்பல்கள் வந்து செல்லக் கூடியதாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணங்கியுள்ளன. இதற்கான பேச்சுக்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் இடம்பெறுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. விரைவில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அபிவிருத்திச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கொழும்புத் துறைமுகத்தின் தென்பகுதியில் உள்ள கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு கடந்த ஆண்டு இந்தியா கோரியிருந்தது.
மே 21 23:17

ஞானசார தேரரைச் சிறையில் பார்வையிட்டார் மைத்திரி!

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடந்த தாக்குதலை அடுத்து சிங்கள அரசியல் கட்சிகளிடையே பலத்த முரண்பாடுகள், மோதல்கள் அதிகரித்துள்ளன. கூட்டு எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி, ரணில் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளது. அதேவேளை. அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராக அமைச்சர்கள் கருத்துக் கூறுகின்றனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் தலைமையிலான அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
மே 21 11:19

ரணில் அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி நம்பிக்கையில்லாப் பிரேரணை

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களை தடுத்த நிறுத்தத் தவறியதனால் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டுமெனக் கோரி நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை ஜே.வி.பி இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் பிரேரணையை சமர்ப்பித்துள்ளார். ஐ.எஸ் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்திடம் பயிற்சி பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் பலர் இலங்கைக்கு வந்துள்ளதாக ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். ஆகவே முன்கூட்டியே தெரிந்திருந்தும் ஏன் தாக்குதல்களைத் தடுக்க முடியவில்லையென பிரேரணையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மே 21 11:15

வற்றாப்பளை பொங்கல் திருவிழாவுக்குச் சென்றோர் கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது

இலங்கையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ந்தும் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கைப் பொலிஸாரின் சோதனை நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், கைக்குண்டு வைத்திருந்ததாக தெரிவித்து நேற்றுத் திங்கட்கிழமை இரவு வற்றாப்பளை அம்மன் ஆலய திருவிழாவிற்கு சென்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மே 20 22:02

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பதவி விலகத் தேவையில்லை - ரணில்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ரிஷாட் பதியுதீன் அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டுமென்ற அவசியம் இல்லையென ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். தற்கொலைத் தாக்குதல்தாரிகளுக்கும் அவருக்கும் தொடர்புள்ளதாக இதுவரை குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லையெனவும் ஆகவே ரிஷாட் பதவியுதீன் அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டிய தேவை இல்லையென்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்.
மே 20 15:22

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அகதிகள் யாழ்ப்பாணத்தில்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை அடுத்து கொழும்பு, நீர்கொழும்பு பிரதேசங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அகதிகள் வடமாகாணத்தில் தற்காலிகமாகக் குடியேற்றப்பட்டு வருகின்றனர். சுமார் ஆயிரத்து ஐநூறு பேரில் நூற்று ஐம்பது பேர் வவுனியாவில் பூந்தோட்டம் அகதி முகாமில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த பதின்மூன்று அகதிகள் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பதின்மூன்று பேரும் பல பகுதிகளில் உள்ள வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதற்கு முன்னதாக தங்களை யாழ் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளனர்.
மே 19 23:35

இலங்கை முப்படையினருக்கு மைத்திரி தலைமையில் அஞ்சலி

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஈழப் போரில் வெற்றியடைந்த இலங்கை ஒற்றையாட்சி அரசின் முப்படையினருக்கு இலங்கை மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நன்றி செலுத்த வேண்டுமென்ற இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் கூற்றுக்கு அமைவாக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு 30க்கு இலங்கை முப்படையினருக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. அத்துடன் 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் போரில் உயிர் நீத்த முப்படையினருக்கும் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இலங்கை ஒற்றையாட்சியாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள படையினரின் நினைவுத் துபியில் பத்தாம் ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
மே 19 16:24

இஸ்லாமியவாதிகளுக்குத் தீனி போட்டவர் கோட்டாபய - ஜே.வி.பி

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைக் தாக்குதலை நடத்திய தேசிய தௌஹீத் ஜமா அத் என்ற இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்கு இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தீனிபோட்டு வளர்த்துள்ளார். இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்றால், இலங்கையில் இரத்த ஆறு ஓடுமென மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது உறுதியென்றும் வெற்றிபெற்றால் இஸ்லாமியத் தீவிரவாதிகளை முற்றாக ஒழிப்பேன் என்றும் கோட்டாபய ராஜபக்ச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளார்.
மே 18 17:21

தேசத்துக்கான அங்கீகாரம் கோரி முள்ளிவாய்க்காலில் பிரகடனம்

(முல்லைத்தீவு, ஈழம்) மே 18 நாளை இன அழிப்புக்கு எதிரான தமிழ்த் தேச எழுச்சி நாளாகவும் 2019 ஆம் ஆண்டை இன அழிப்புக்கு எதிரானதும் அரசியல் நீதிக்கான சர்வதேச வலுச்சேர்க்கும் ஆண்டாகவும் பிரகடனம் செய்வதாக முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் தமிழினத்தின் மீது கட்டமைத்து நடத்திய இனப்படுகொலையை ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றது. இதனால் ஈழத் தமிழர்கள் கவலையடைந்துள்ளனர். தமிழ் இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வே்ண்டுமென ஈழத் தமிழா்கள் கோருவதாக மே 18 பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.