நிரல்
ஜூன் 01 11:36

தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய யாழ் பொது நூலகம் தீக்கிரையாகி 38 ஆண்டுகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழ் மக்களின் கல்வி மற்றும் கலை கலாசாரத்தை வெளிப்படுத்தும் யாழ்ப்பாண நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள பொது நூலகம் எரியூட்டப்பட்டு இன்றுடன் 38 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. ஆசியாவின் மிகப்பெரிய பொது நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண பொது நூலகம் திட்டமிட்டு எரிக்கப்பட்டமை சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தது. அறுதிப் பெரும்பான்மையுடன் 1977ஆம் ஆண்டு ஆட்சியமைத்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழ் 1981ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
மே 31 15:00

திருகோணமலை சம்பூரில் மீண்டும் அனல்மின் நிலையம்

(திருகோணமலை, ஈழம்) தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்திலும் முஸ்லிம் மக்கள் கூடுதலாக வாழும் புத்தளம் - நுரைச்சோலைப் பிரதேசத்திலும் அனல்மின் நிலையம் அமைப்பதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. திருகோணமலை பவுல் பொயின்ட் பகுதியில் முந்நூறு மெகாவாட் உற்பத்தித் திறன் உள்ள, இரண்டு உயர் திறன்மிக்க அனல்மின் நிலையங்களும், நுரைச்சோலையில் 300 மெகாவாட் உள்ள மற்றொரு அனல் மின் நிலையமும் அமைக்கப்படவுள்ளன. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ரவி கருணாநாயக்க, இதற்கான அனுமதிப்பத்திரத்தை நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்தார்.
மே 31 03:32

இந்திய நடுவண் அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - இந்திய அமைதிப்படை ஆலோசகர் ஜெயசங்கர் அமைச்சராகிறார்

(சென்னை, தமிழ்நாடு) இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் பெரும்பான்மை பெற்ற பா.ஜ.கவின் புதிய அரசாங்கம் பதவி ஏற்றுள்ளது! தமிழ் தெரிந்த இருவர் அமைச்சராகப் பதவியேற்றுள்ளனர். எந்தத் துறை என்பதும் கூடியவிரைவில் வெளியாகும். அதில் ஒருவரான நிர்மலா சீதாராமன் 2017 - 2019இல் இராணுவ அமைச்சராக பதவிவகித்தவர். இன்னொருவரான ஜெய்சங்கர் 1988-1990 இல் இந்திய அமைதிப்படைக்கான அரசியல் ஆலோசகராக இருந்தவர் என்பதும், ஜெய்சங்கர் மற்றும் அவரது தந்தை சுப்ரமணியன் அவர்கள் இருவருமே இந்திய - அமெரிக்க ஒப்பந்தங்கள் பலவற்றில், குறிப்பாக அணுசக்தி விவகாரங்களில், ஆலோசகராகவும் இருந்தவர்கள். இந்திய வெளிவிவகார அதிகாரிகளில் மாந்தரின், ஜப்பான், ருசிய மொழிகளில் புலமை வாய்ந்த வெகுசிலரில் ஜெய்சங்கரும் ஒருவர் என்பதும் கவனிக்கத்தக்கது.
மே 30 21:50

நாடாளுமன்றத் தெரிவுக்குழு குற்றவாளிகளைக் காப்பாற்றும்!

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் உண்மைத் தன்மைகளை மூடிமறைப்பதற்காகவே நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டதாக இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத் தகவல்கள் கூறுகின்றன. இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்துள்ளதால், குற்றவாளிகளாகச் சந்தேகிக்கப்படும் அரசியல்வாதிகள் சிலரும் அரச உயர் அதிகாரிகள் சிலரும் தப்பித்துவிடுவர்கள் என்றும் சட்டத்தின் முன் அவர்களை நிறுத்துமாறு கோரி இலங்கை உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் வழக்குத் தாக்கல் கூடச் செய்ய முடியாதெனவும் சட்டத்தரணிகள் சங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மைத்திரிபால சிறிசேன அவசர அவசரமாக ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்தன் நோக்கம் கூட குற்றவாளிகளைக் காப்பாற்றவே என்று சட்டத்துறைத் தகவல்களும் கூறுகின்றன.
மே 30 00:24

கிளிநொச்சியில் வாள்வெட்டு- கர்ப்பிணிப் பெண் உட்பட 9 பேர் காயம்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை அடுத்து தமிழர் தாயகப் பகுதிகளெங்கும் பாதுகாப்பு என்ற பெயரில் இராணுவம் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கிளிநொச்சி - செல்வாநகர் பகுதியில் வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதன் போது 9 பேர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட ஆறு பெண்களும் ஆறு ஆண்களுமாக ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர். நேற்றுப் புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மே 29 22:34

கொழும்புத்துறைமுக அபிவிருத்தி- இந்தியா, ஜப்பான் ஒப்பந்தம்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் இல்லாதொழிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், பூகோள அரசியல் தந்திரோபாயங்களுக்குள் சிக்குண்டுள்ள இலங்கை அரசாங்கம் பத்து ஆண்டுகளில் இலங்கைத் துறைமுகங்களையும் கடற் பிரதேசங்களையும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு தாரைவார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இருந்து திருகோணமலைக் கடற்பிரதேசம் வரையான பகுதி எண்ணெய் வயல் ஆய்வுக்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி அதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு செப்ரெம்பர் மாதம் இரண்டாம் திகதி எண்ணெய் வயல் ஆய்வு ஆரம்பிக்கப்பட்டது.
மே 29 14:57

புதிய தேசிய பாதுகாப்புச் சபை - பரிந்துரைகள் மகாநாயக்க தேரர்களிடம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் தேசிய பாதுகாப்பு, அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை சர்வதேசத்துக்கும் மக்களுக்கும் காண்பிப்பதற்காக மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரை உள்ளடக்கிய புதிய பாதுகாப்புச் சபையொன்றை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தேசிய வழி என்ற தலைப்பில் பரிந்துரைகள் அடங்கிய ஆவணம் ஒன்று மகாநாயக தேரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்றுச் செவ்வாய்க்கிழமை இந்த ஆவணத்தைக் கையளித்தார். ஜாதிக ஹெல உறுமயவின் பௌத்த தேரர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மே 28 23:06

பாகிஸ்தான், ஆப்கானிஸ்த்தான் அகதிகளுக்கு உலர் உணவு வழங்க முல்லைத்தீவு மக்கள் ஏற்பாடு

(வவுனியா, ஈழம்) கொழும்பு, நீர்கொழும்பு பிரதேசங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மக்களை சிங்கள மக்கள் தாக்குவார்கள் என்ற அச்சத்தினாலேயே இலங்கை அரசாங்கம் அவர்களில் ஒரு தொகுதியினரை வடமாகாணம் வவுனியா - பூந்தோட்டம் முகாமில் தங்கவைத்தது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் இந்த மக்களை வேறு பிரதேசங்களுக்கு மாற்றுமாறு கோரி நீர்கொழும்பில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அம்பாந்தோட்டையில் தங்க வைக்கப்பட்டபோதும் அங்கும் சிங்கள மக்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் மனிதாபிமான அடிப்படையில் வவுனியாவில் தங்க வைப்பதற்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிலர் அனுமதித்தனர்.
மே 28 10:31

அமெரிக்காவுக்கு எழுந்துள்ள சந்தேகம் - மகிந்த அணியோடும் பேச்சு

(யாழ்ப்பாணம், ஈழம்) சீன-இலங்கை பாதுகாப்பந்தம் ஒன்றைச் செய்வதற்கான முன்நகர்த்தல் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் முழமையாக வெளிப்படுத்தப்படவில்லையென கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியா,ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளுடன் செய்யப்படுகின்ற ஒப்பந்தங்களின் பிரதிகள் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது வழமை. குறிப்பாக ஜே.வி.பி அந்த விடயத்தில் கடும் பிடியாகவே இருக்கும். ஆனால் சீனாவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்து கொண்ட முன் நகர்த்தல் ஒப்பந்தம் குறித்து ஜே.வி.பியோ, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியோ இதுவரை கேள்வி எழுப்பவில்லை.
மே 28 00:13

முல்லைத்தீவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல் - புகைப்படக் கருவியும் சேதம்

(முல்லைத்தீவு, ஈழம்) முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக காணப்படும் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸாருக்கு இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக சம்பவ இடத்துக்கு செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன் மீது கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கூர்மை செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டார்.