நிரல்
ஜூன் 30 22:42

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழரசுக் கட்சியுடன் வாய்த்தர்க்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது, இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மண்டபத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பார்த்து மதுபோதையில் நின்று கூச்சலிட வேண்டாமெனக் கூறியுள்ளனர். இதனால் அங்கு பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் அங்கஜன் ராமநாதன், அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரிடம் சென்று காணாமல் ஆக்கப்பட்ட உங்கள் பிள்ளைகள் பற்றிக் கேளுங்கள் என தமிழரசுக் கட்சித் தொண்டர்கள் உரக்கச் சத்தமிட்டனர்.
ஜூன் 29 23:25

முஸ்லிம்களுக்கு எதிராக கண்டி தலதா மாளிகைக்கு முன் மாநாடு

(வவுனியா, ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர், முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளும் இனவாதக் கருத்துக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக பௌத்த பிக்குகள் மாபெரும் மாநாடொன்றை எதிர்வரும் ஜுலை மாதம் ஏழாம் திகதி நடத்தவுள்ளனர். சர்சைக்குரிய ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல சேனவின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் சுமார் பத்தாயிரம் பௌத்த பிக்குமார் கலந்துகொள்வார்களென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இலங்கைத் தீவில் வாழும் முஸ்லிம் மக்களின் சுதந்திரமான செயற்பாடுகள் பலவற்றைக் கட்டுப்படுத்தும் தீர்மானங்கள் இந்த மாநாட்டில் எடுக்கப்படவுள்ளன.
ஜூன் 29 09:37

போரால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பாதிக்கும் நுண்நிதிக் கடன்

(முல்லைத்தீவு, ஈழம்) போரின் தாக்கத்திலிருந்து தமிழ் சமூகம் படிப்படியாக மீண்டெழுந்துவரும் நிலையில், நுண்நிதிக் கடன் பிரச்சனை, தமிழ் மக்கள் குறிப்பாக தமிழ் குடும்பத் தலைவிகளை பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாக்கி வருவதுடன் தற்கொலைக்குத் தூண்டும் ஒரு நடவடிக்கையாக அமைவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர முன்னரே, நுண்நிதிக் கடன் நிறுவனங்கள் வடபகுதியை ஆக்கிரமித்துள்ளதாக கடந்த 10 வருடங்களாக பல தரப்பினராலும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் 28 23:37

மகிந்த தரப்பின் புதிய அரசியல் கூட்டணி- மைத்திரி மௌனம்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலா, நாடாளுமன்றத் தேர்தலா நடைபெறுமென எதிர்ப்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், எந்தத் தேர்தல் வந்தாலும் பொதுவான அரசியல் கூட்டணியாக இணைந்து வேறொரு சின்னத்தில் போட்டியிடுவதென மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றால் மைத்திரிபால சிறிசேனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரென கட்சியின் மத்திய குழு சென்ற புதன்கிழமை இரவு கூடித் தீர்மானித்துள்ள நிலையில், மகிந்த தரப்பு இவ்வாறு அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் யாரைக் களமிறக்குவது என்பது உள்ளிட்ட பேச்சுக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையே தொடர்ச்சியாக இடம்பெற்றன.
ஜூன் 28 21:54

ரஷிய - இலங்கை இராணுவக் கூட்டு ஒத்துழைப்பு ஏற்பாடு

(வவுனியா, ஈழம்) இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த முற்பட்டு வரும் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கையின் உட்கட்டமைப்புளைக் கட்டமைக்க கூட்டாக செயட்படுவது குறித்துக் கலந்துரையாடியுள்ளன. மியன்மார், பங்களாதேஸ், போன்ற நாடுகளிலும் பிராந்திய நலன் சார்ந்து அந்த நாடுகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் பேச்சு நடத்தியுள்ளன. ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒசாகா நகரில் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் அபிவிருத்தித் திட்டத்தில் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து செயற்படுவதற்கான உடன்படிக்கையில் ஏலவே கைச்சாத்திட்டுள்ளன.
ஜூன் 27 23:17

வைத்தியர் ஷாபி குற்றம் செய்யவில்லை- நீதிமன்றில் அறிக்கை

(வவுனியா, ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் கைது செய்யப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவு வைத்தியர் சேகு ஷpயாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த கருத்தடைச் சிகிச்சை தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லையென இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவு குருணாகல் நீதவான் நீதிமன்றத்திடம் கூறியுள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளோடு தொடர்புள்ளதாக வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கும் எந்தவிதமான ஆதரங்களும் இல்லையெனவும் காவல் துறை உயர்மட்டக்குழு நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
ஜூன் 27 20:21

மைத்திரி அதிபர் தெரிவு வேட்பாளர்! மகிந்த தரப்புடன் முரண்பாடு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சியின் அதிபர் தேர்தல் முதலில் நடைபெறுமென மைத்திரிபால சிறிசேன கூறியுள்ள நிலையில், இரண்டாவது தடவையாகவும் மைத்திரிபால சிறிசேனவை அதிபர் வேட்பாளராகத் தெரிவு செய்வதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு முடிவு செய்துள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கட்சியின் மூத்த உறுப்பினர், முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில், குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அடுத்த அதிபர் தெரிவு தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராகக் களமிறக்கும் வேலைத் திட்டங்களில் ஈடுபடவுள்ளதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
ஜூன் 26 23:34

முல்லைத்தீவுச் சாலைக் கடலில் சிங்கள மீனவர்கள் அத்துமீறல்

(முல்லைத்தீவு, ஈழம்) வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலைப் பிரதேசத்தில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்கள் சட்டவிரேதமாகத் தங்கியிருந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் தமது மீனவத் தொழில் பாதிக்கப்படுவதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் முல்லைத்தீவுச் செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். வடமராட்சிக் கிழக்கு சுண்டிக்குளம் கடற்தொழிலாளர்களே இவ்வாறு இன்று புதன்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர். முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உட்பட்ட சாலைப் பிரதேசத்தில் தங்கியுள்ள சிங்கள மீனவர்கள் சட்டத்திற்கு முரணாக கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
ஜூன் 26 11:20

இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பை மைத்திரி மீறிவிட்டாரா?

(வவுனியா, ஈழம்) இலங்கை அரசியல் யாப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைவாக முதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தி வரும் நிலையில், முதலில் அதிபர் தேர்தலே நடைபெறுமென இலங்கை ஒற்றையாட்சியின் அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பிரதம செய்தி ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதிபர் தேர்தலுக்கு முன்னதாக 2016 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டுமென்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜூன் 25 23:17

மாகாண சபைத் தேர்தல்? சட்டச் சிக்கல் என்கிறார் தேசப்பிரிய

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் படி இந்த ஆண்டு யூன் மாதம் மாகாண சபைகளுக்காக தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் ஆண்டின் இறுதியில் கூட நடத்த வாய்ப்புள்ளது. எனினும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் நோக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இல்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும். இல்லையேல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பெரும் சட்டச் சிக்கல் ஒன்றை அரசாங்கம் எதிர்கோக்க நேரிடுமென இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த சேப்பிரிய மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு ஏலவே கடிதம் எழுதியிருந்தார்.