செய்தி: நிரல்
ஜூலை 06 22:54

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் விழா

(முல்லைத்தீவு, ஈழம்) வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை முற்று முழுதாக பௌத்த மயமாக்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் திட்டத்திற்கு மத்தியிலும், குறித்த ஆலயத்தில் ஈழத்தமிழர்களின் நிலவுரிமையை நிலைநாட்டும் நோக்கில் மாபெரும் பொங்கல் விழா நடைபெற்றுள்ளது. நூற்றியெட்டுப் பானைகளில் பொங்கல் பொங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. திருகோணமலை தென்கையிலை ஆதின சுவாமி தவத்திரு அகத்தியர் அடிகளார், யாழ் சிதகாசனந்தக் குருக்கள், உள்ளிட்ட சைவ சமயப் பெரியார்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக நிகழ்வில் பங்குபற்றிய ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜூலை 05 22:27

இலங்கை ஒரேநாடு ஒரே சட்டம்- பிக்குகள் கண்டியில் மாநாடு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில், பௌத்த பிக்குமாரின் பௌத்த இனவாத செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இலங்கை அரசாங்கம் அதனைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென சர்வதேச அமைப்புகளும் உள்ளூரில் உள்ள அரசார்பற்ற நிறுவனங்களும் குற்றம் சுமத்தி வருகின்றன. இவ்வாறான நிலையில் கண்டி போகம்பர மைதானத்தில், அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல சேனா அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாடு ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கெதிரான கூட்டமாகக் கூறப்பட்டாலும் இலங்கைத் தீவில் வாழும் முஸ்லிம் மக்களைக் கட்டுப்படுத்தக் கூடிய ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
ஜூலை 05 10:19

சுகவீனமுற்ற மகனைப் பார்வையிடச் சென்றவர் மீதே துப்பாக்கிச் சூடு

(வவுனியா, ஈழம்) இலங்கையின் தென் மாகாணம் - காலி அக்மீமன உபானந்த வித்தியாலயத்திற்கு முன்பாக காவலுக்கு நின்ற இலங்கை இராணுவச் சிப்பாய் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர், அந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவனின் தந்தையெனக் காலி காவல்துறையினர் தெரிவித்தனர். மகன் சுகவீனமுற்றிருப்பதாகப் பாடசாலை அதிபரால் குறித்த நபருக்குத் தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் மகனைப் பார்வையிடச் சென்றபோதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். பாடசாலை வாசலில் நின்ற இலங்கை இராணுவச் சிப்பாய் குறித்த நபரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் வாக்குவாதப்பட்ட நிலையில் குறித்த நபர் பாடசாலைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டுள்ளார்.
ஜூலை 04 17:29

சீருடையணிந்தவர்கள் காரணமாயிருக்கலாம் என உடலகம ஆணைக்குழு 2008 ஆம் ஆண்டிலேயே கருதியது

(திருகோணமலை, ஈழம்) திருகோணமலைக் கடற்கரைப் பிரதேசத்தில் இலங்கை விசேட அதிரடிப்படையினரால் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு ஆதாரங்கள் இல்லையெனக் குறிப்பிட்டு குற்றவாளிகள் பதின்மூன்று பேரையும் திருகோணமலை பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்றுப் புதன்கிழமை விடுதலை செய்திருந்தது. ஆனால் இந்த மாணவர்களின் படுகொலை உள்ளிட்ட பதினைந்து விடயங்களை ஆராய்வதற்காக 2006 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட முன்னாள் நீதியரசர் உடலகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில், இலங்கை விசேட அதிரடிப்படையினர் இந்தப் படுகொலைகளைச் செய்துள்ளமை குறித்த சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சாட்சியமளித்தவர்களின் பெயர் விபரங்கள் அந்த அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி காண்டீபன் கூர்மைச் செய்தித் தளத்திடம் கூறியுள்ளார்.
ஜூலை 04 15:55

பாடசாலைக்கு முன்பாகத் துப்பாக்கிப் பிரயோகம் - ஒருவர் பலி

(வவுனியா, ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் இலங்கையில் அனைத்துப் பாடசாலைகளுக்கு முன்பாகவும் இலங்கை இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கையின் தென் மாகாணம் - காலி மாவட்டம் அக்மீமனப் பிரதேசத்தில் உள்ள உபானந்த வித்தியாலயத்தின் முன்பாகக் கடமையில் இருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முப்பத்தொன்பது வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். இன்று வியாழக்கிழமை காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாயின் துப்பாக்கியை பலாத்காரமாகப் பறிக்க முற்பட்டபோதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக, சம்பவம் இடம்பெற்றவுடன் இலங்கைக் காவல்துறையினர் கூறியிருந்தனர்.
ஜூலை 03 16:55

ஐந்து மாணவர் கொலை- ஆதாரமில்லையென நீதிமன்றம் தீர்ப்பு

(திருகோணமலை, ஈழம்) தமிழ் பேசும் மக்களின் தாயகமான திருகோணமலை கடற்கரைப் பிரதேசத்தில் நின்று விளையாடிக் கொண்டிருந்த ஐந்து தமிழ் மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கைதான இலங்கை விசேட அதிரடிப்படையினர் பன்னிரெண்டுபேர் உள்ளிட்ட பதின்மூன்று சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட வழக்கை தொடர்ந்து முன்னெடுப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லையென திருகோணமலை பிரதான நீதவான் முகமட் ஹம்சா தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பதின்மூன்று பேரையும் விடுதலை செய்வதாகவும் நீதவான் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.
ஜூலை 03 10:44

அமெரிக்காவோடு ஒப்பந்தம் - மகிந்த இரு குழுக்களை நியமித்தார்

(வவுனியா, ஈழம்) அமெரிக்காவுடன் செய்யவுள்ள சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக இலங்கையில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னா விளக்கமளித்து வருகின்றார். குறிப்பாக பௌத்த மகாநாயக்கத் தேரர்களையும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து வருகின்றார். ஆனாலும் எதிர்ப்புகள் தொடருகின்றன. அமெரிக்காவுடன் செய்யவுள்ள ஒப்பந்தத்தை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாகவே கண்டித்துள்ளார். கடந்த சில வாரங்களாக முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவைத் தொடர்ச்சியாகவே சந்தித்து வரும் அமெரிக்கத் தூதுவர் அலெய்னா, இலங்கையின் ஒற்றையாட்சிக்கும் இறைமைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகுமென உறுதியளித்துள்ளார்.
ஜூலை 02 21:54

ஹேமசிறி பெர்ணாண்டோ, பூஜித ஜயசுந்தர கைது

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக இந்தியப் புலனாய்வுப் பிரிவிடம் இருந்து அதிகாரபூர்மாகத் தகவல் கிடைத்திருந்தும் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமை தொடர்பான விசாரணைகளுக்குச் சமூகமளிக்காத குற்றத்திற்காக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ, முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைக் குற்றப்புலனாய்வுப் (CID) பிரிவினரால் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வலுக்கட்டாயமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி விலக்கப்பட்டிருந்த ஹேமசிறி பெர்ணாண்டோ, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த பூஜித ஜயசுந்தர ஆகியோர் சுகவீனம் காரணமாக இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஜூலை 01 22:47

மைத்திரிக்கு எதிராகச் செயற்படும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு

(வவுனியா, ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில். தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களை ஜனாதிபதியும் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கமும் பாதுகாக்கத் தவறியுள்ளதாக பல்வேறுபட்ட தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில், மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தமது அறிக்கையை கையளித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நியமித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது. ஆனால் தெரிவுக்குழு விசாரணைக்கு வருமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் , அந்த விசாரணைக்குச் செல்ல முடியாதெனக் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் விசாரணைக்கு சமூகமளிக்க முடியாதென மறுத்துவிட்டார்.
ஜூலை 01 16:41

பதினெட்டுக் கிலோமீற்றர் தூரம் நடந்து செல்லும் மாணவர்கள்

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழர் தாயகம் வடமாகாணம் - முல்லைத்தீவு அம்பாள்புரம் ஆறாம் கட்டை, கொல்லவிளாங்குளம் ஆகிய பிரதேசங்களுக்குப் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் பொது மக்களும் பாடசாலை மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். முல்லைத்தீவு - மாந்தை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள இந்த இரு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் தினமும் பாடசாலைக்குச் செல்வதற்காகப் பதினெட்டுக் கிலோ மீற்றர் தூரம் நடந்து செல்வதாகப் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர். சீரான போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் இந்தக் கிராமங்களைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவர்கள் பலர் வன்னிவிளாங்குளம், மாங்குளம் ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று கல்வியைத் தொடருகின்றனர்.