செய்தி: நிரல்
ஜூலை 18 23:44

தேர்தல்கள் நெருங்கும்வேளையில் மீண்டும் அரசியல் யாப்புத் திருத்தங்கள் பற்றிய பேச்சுக்கள்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கும் வேளையில் மீண்டும் புதிய அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான பேச்சுக்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் ஆரம்பித்துள்ளதாக கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இது குறித்து இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சம்பந்தன் பேசியிருந்தார். முதல்கட்டமாக இலங்கை நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து விவாதம் நடத்துமாறு ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் இது குறித்து சம்பந்தன் உரையாடியுள்ளார்.
ஜூலை 18 05:36

மைத்திரிக்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணை

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணை ஒன்றை இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 23 ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடவடிக்கைகளைத் தடுக்கத் தவறியமை, 19 ஆவது அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறிச் செயற்படுகின்றமை போன்ற பல்வேறு அரசியல் குற்றச்சாட்டுக்கள் பிரேரணையில் முன்வைக்கப்படுமென கட்சித் தகவல்கள் கூறுகின்றன. பிரேரணையில் உள்ளடக்கப்படவுள்ள குற்றங்கள் குறித்த சட்ட வியாக்கியானங்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சட்ட வல்லுநர்கள் கலந்தாலோசித்து வருகின்றனர்.
ஜூலை 15 19:55

தேவதாசன் மகசீன் சிறையில் உண்ணாவிரதம்

(வவுனியா, ஈழம்) இடதுசாரி இயக்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு தமிழ் அரசியலை முன்னெடுத்தவரும், இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபன தமிழ்ப் பிரிவின் முன்னாள் பணிப்பாளருமான கனகசபை தேவதாசன், இன்று திங்கட்கிழமை அதிகாலை முதல் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். 62 வயதுடைய தமிழ் அரசியல் கைதியான தேவதாசன், தனக்கு வழங்கப்பட்ட ஆயுள்த் தன்டனைக்கு எதிராக கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு வசதியளிக்குமாறு கோரியே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
ஜூலை 15 11:09

மகாவலி அபிவிருத்தி- கொக்குத் தொடுவாய்க் காணிகள் அபகரிப்பு

(முல்லைத்தீவு, ஈழம்) வடமாகாணம் முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய்ப் பிரதேசத்தில் உப உணவுப் பயிர்ச் செய்கைக்காக வழங்கப்பட்ட சுமார் இருநூறு ஏக்கருக்கும் அதிகமான காணிகளை இலங்கை வன வளத் திணைக்களம் இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன் அபகரித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். 1981 ஆம் ஆண்டு இந்தக் காணிகள் வழங்கப்பட்டிருந்தன. கொக்குத் தொடுவாய் பிரதேசத்தில் உள்ள குஞ்சுக்குளம், கோட்டக்கேணி, குளத்துச் சோளகம், காயாவடிக் குளம் ஆகிய பகுதிகளில் உப உணவுப் பயிற்செய்கைக்காக வழங்கப்பட்ட காணிகளையே தற்போது தமக்குரியவையென கொழும்பில் உள்ள இலங்கை வன வளத் திணைக்கள் கூறுகின்றது.
ஜூலை 15 09:54

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை மைத்திரி வெளியிட வேண்டும்!

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படுவதை மேலும் தாமதிக்க முடியாதென இலங்கை சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு ஏலவே தெரிவித்திருந்தது. ஆனாலும் அது பற்றிய அறிவிப்புகள் எதுவும் இல்லாத நிலையில், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் இன்னமும் ஒன்றரை மாதத்திற்குள் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய அறிவிப்பை மைத்திரிபால சிறிசேன வெளியிட வேண்டும் என்றும், இல்லையேல் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவே வெளியிடுமெனவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
ஜூலை 14 14:50

பாரதிபுரம் மக்களுக்கு வீட்டுத் திட்டம் இதுவரை இல்லை

(கிளிநொச்சி. ஈழம்) வடமாகாணம் கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில், வெள்ளம். வறட்சி போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டபோதும் இதுவரை எதுவுமே கிடைக்கவில்லையென பாதிக்கப்பட்ட மக்கள் முறையிட்டுள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டிருந்த வீட்டுத் திட்டம் இதுவரை வழங்கப்படவில்லையென மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். தற்போது கடும் வறட்சி நிலவுவதாகவும் மக்கள் கூறுகின்றனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் கிராம சேவையாளர் பிரிவில், கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின்போது 157க்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.
ஜூலை 13 23:55

ரிசாட் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்க எதிர்ப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் கண்டி மகாநாயக்கத் தேரர்கள். பௌத்த குருமார் ஆகியோரின் கடும் அழுத்தங்கள் காரணமாக தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்கவுள்ளனர். ஆனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிசாட் பதியுதீன் மீண்டும் அமைச்சராகப் பதவியேற்க அனுமதிக்கக் கூடாதென்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் கோரியுள்ளனர். இலங்கை நாடாளுமன்றத்தில் அரசாங்கத் தரப்பின் பின்வரிசை ஆசனங்களில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஜூலை 13 22:10

நாவற்குழி விகாரை இலங்கை இராணுவ ஒத்துழைப்புடன் திறப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகம் வடமாகாணம் யாழ்ப்பாணம் நாவற்குழிப் பிரதேசத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் அனுமதியோடு இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புடன் கட்டி முடிக்கப்பட்ட பௌத்த விகாரை இன்று சனிக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டது. புதிய விகாரைக்கான புனிதத் தந்தம் குருநாகல் நெவகெட செல்கிரி விகாரையில் இருந்து ஊர்வலமாக (பெரகரா) எடுத்துவரப்பட்டது. சென்ற பன்னிரெண்டாம் திகதி காலை எட்டு மணிக்கு குருநாகலில் ஆரம்பித்த ஊர்வலம், நேற்று வெள்ளிக்கிழமை இரவு அனுராதபுரம் தூபாராம சைத்திய விகாரையை சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து இன்று சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு ஆரம்பித்த ஊர்வலம் மாலை ஐந்து மணிக்கு நாவற்குழியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சம்புத்தி சுமண விகாரையை வந்தடைந்தது.
ஜூலை 12 23:22

முஸ்லிம் உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பர்

(மட்டக்களப்பு, ஈழம்) கண்டி மகாநாயக்கத் தேரர்கள், பௌத்த பிக்குமார் ஆகியோரின் கடுமையான அழுத்தங்களையடுத்து அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் உறுப்பினர்கள், மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்கவுள்ளனர். இலங்கை ஒற்றையாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பாக முஸ்லிம் உறுப்பினர்களோடு உரையாடியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முஸ்லிம் பிரதிநிதிகளோடு உரையாடி அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் முன்னர் வகித்திருந்த அதே அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதென முஸ்லிம் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களையடுத்து முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.
ஜூலை 12 17:27

மைத்திரி உத்தரவு- கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் புத்த தாதுக் கோபுரம்

(திருகோணமலை, ஈழம்) தமிழ் பேசும் கிழக்கு மாகாணம் திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று அமைந்துள்ள பிரதேசத்தில் பௌத்த பிக்குமார் புத்த தாதுகோபுரம் ஒன்றை அமைப்பதற்கு இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் கீழ் செயற்படும் இலங்கைத் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் தீவிரமாக ஈடுபடுகின்றனர். ஈழத்தமிழ் மக்களின் பாரம்பரியப் பண்பாட்டுப் பிரதேசமான கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் பிள்ளையார் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. 1817 ஆம் ஆண்டு இந்த ஆலயம் உருவாக்கப்பட்டதாக சைவ சமய ஆய்வாளர் திருச்செல்வம் கூறுகின்றார். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வைகாசி மாதம் அமைச்சர் மனோ கணேசனின் கொழும்பு அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் திருச்செல்வம் அந்த வரலாற்று ஆதாரங்களை உறுதிப்படக் கூறியிருந்தார்.