நிரல்
செப். 16 11:07

இணுவில் பகுதியில் கொள்ளையிட்ட இராணுவச் சிப்பாய் கைது

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகம் வடமாகாணத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவம் பெருமளவில் குவிக்கப்பட்டிருப்பதாகத் தமிழ்ப் பிரநிதிநிதிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஆனாலும் குற்றச் செயல்கள் குறையவில்லை. அத்தோடு அங்கு இடம்பெறுகின்ற குற்றச் செயல்கள், வன்முறைகளின் பின்னணியில் இலங்கை இராணுவம் இருப்பதாக இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தனர். இந்த நிலையில், யாழ்ப்பாணம் இணுவில் பிரதேசத்தில் வீட்டிலிருந்தவர்களைத் தாக்கி கொள்ளையிட்ட சந்தேகத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செப். 15 21:39

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தை மூடுமாறு கோரிப் போராட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசு கொழும்பை மையமாகக் கொண்டு உருவாக்கிய காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் (Office on Missing Persons) (OMP) யாழ்ப்பாணக் கிளையை மூடிவிடுமாறு வலியுறுத்தி இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக முதலில் நினைவு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
செப். 14 18:00

இந்திய- இலங்கைக் கடற்படை கூட்டுப் பயிற்சி

(வவுனியா, ஈழம்) இந்தியா இலங்கை ஆகிய நாடுகளின் கடற்படையினர் இணைந்து அவ்வப்போது மேற்கொண்டு வரும் கூட்டுப் பயிற்சி இந்த ஆண்டு ஏழாவது தடவையாகவும் இடம்பெற்றுள்ளது் (SLINEX 2019) என்ற பெயரிலான கூட்டுப் பயிற்சி இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்தியக் கடற்படைத் தளத்தில் கடந்த ஏழாம் திகதி ஆரம்பமாகி சென்ற வியாழக்கிழமை நிறைவடைந்துள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சியில் இலங்கைக் கடற்படையின் சிந்துரால, சுரனிமல ஆகிய போர்க் கப்பல்கள் பங்குபற்றியிருந்ததாக இலங்கைக் கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சுமார் முந்நூறு இலங்கைக் கடற்படையினர் கூட்டுப் பயிற்சியில் இணைந்து கொண்டதாகவும் இலங்கைக் கடற்படையினர் கூறியுள்ளனர்.
செப். 13 23:37

மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு தமிழர்கள் கொலை- ஜனாதிபதி சட்டத்தரணியிடம் விசாரணை

இலங்கைத் தீவின் தலைநகர் கொழும்பில் உள்ள தெஹிவளை, கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களில் இருந்து ஐந்து தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு தமிழர்களைக் கடத்தி சென்று கப்பம் பெற்றுக் கொண்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோவிடம் ஐந்து மணித்தியாலம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தக் கடத்தல் கொலைச் சம்பவம் தொடர்பாக இலங்கையின் முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவை விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரே இன்று வெள்ளிக்கிழமை சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோவிடம் விசாரணை நடத்தினர்.
செப். 13 16:34

ஜனாதிபதித் தேர்தல் அல்ல- அமெரிக்கச் சீனப் போட்டி, விஜயதாச கூறுகிறார்

(வவுனியா, ஈழம்) இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்கா சீனா ஆகிய இரு நாடுகளுமே போட்டியிடவுள்ளதாக மகிந்த ராஜபக்சவைத் தலைவராகக் கொண்ட ஸ்ரீலங்காப் பொதுஜன பெரமுனக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த ஜனாதிபதித் தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சிக்கும் இடையிலான போட்டியாக அமையாது எனவும் அமெரிக்காவும் சீனாவும் இலங்கையில் களம் அமைக்கும் போட்டியாகவே அமையுமெனவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியோடு இணைந்து செயற்பட்டு வரும் விஜேயதாச ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.
செப். 13 15:31

ரணில்- சஜித் இணக்கமில்லை- கட்சியின் மத்தியகுழு தீர்மானிக்கும்!

(வவுனியா, ஈழம்) ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதமாச ஆகியோரிடையே சரியான இணக்கம் ஏற்படவில்லையெனக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக கட்சியின் மத்திய குழுவே இறுதி முடிவெடுக்குமென சஜித் பிரேமதாசவிடம் கூறியதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ்க் கட்சிகளை சஜித் பிரேமதாச சந்திக்கவுள்ளார்.
செப். 12 23:16

மகாவலி அபிவிருத்தி- முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள்

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழர் தாயகமான வடமாகாணம் முல்லைதீவு மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னரான காலத்திலும் அதற்குப் பின்னரும் கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருநாட்டுகேணிப் பிரதேசங்களில் பூர்வீகமாக வாழ்ந்த ஈழத் தமிழர்களின் காணிகளில் சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கை ஒற்றையாட்சி அரசின் கொழும்பு நிர்வாகத்தின் கீழ் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருவதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை முறையிடப்பட்டுள்ளது. இந்தக் கிராமங்களில் வாழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.
செப். 12 16:37

படையினர் அபகரித்துள்ள காணிகளைக் கையளிப்பது குறித்து உரையாடல்

வடமாகாணத்தில் உள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இலங்கை இராணுவத்தினர் சுவீகரித்துள்ள காணிகளை மீண்டும் பொது மக்களிடம் கையளிப்பதற்கான கலந்துரையாடல்கள் இன்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய, வன்னி படைகளின் கட்டளை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அத்துடன் உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்காந்தராசா ஆகியோரும் பங்குகொண்டனர்.
செப். 11 21:46

முகமாலை வடக்கில் மனித எலும்புகள், எச்சங்கள் மீட்பு

(கிளிநொச்சி. ஈழம்) வடமாகாணம் கிளிநொச்சி முகமாலை வடக்குப் பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் இன்று புதன்கிழமை இடம்பெற்ற மீட்புப் பணியின்போது மனித எலும்புகள், எச்சங்கள் சிலவற்றைக் கண்டெடுத்துள்ளனர். கண்ணிவெடி அகழ்வுப் பணியில் ஈடுபடும் சர்வதேசத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் வழமைபோன்று இன்றும் அகழ்வுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே நண்பகல் அளவில் மனித எலும்புகள், எச்சங்களைக் கண்டதாகத் தெரிவித்தனர். பளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. பிற்பகல் அளவில் சம்பவ இடத்துக்கு வந்த இலங்கைப் பொலிஸார் மனித எச்சங்கள் மீட்க்கப்பட்டமை தொடர்பாகக் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டனர். மீட்கப்பட்ட மனித எச்சங்களையும் பார்வையிட்டனர்.
செப். 10 23:07

சுயாட்சி வழங்க முடியாது. ஜே.பி.வி வேட்பாளர் கூறுகிறார்

(மட்டக்களப்பு, ஈழம்) வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு சமஸ்டித் தீர்வை வழங்க முடியாதென மக்கள் விடுதலை முன்னணியெனப்படும் ஜே.வி.பியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்கா தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி என்ற இயக்கத்தில் அங்கம் வகிக்கும் பொது அமைப்புக்கள், சிறிய கட்சிகள மற்றும் கல்வியாளர்கள் எனப் பலர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று மக்களைச் சந்தித்து உரையாடியிருந்தனர். அதன்போது வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைந்த சுயாட்சி முறையை ஜே.வி.பி வழங்குமெனக் கூறியிருந்தனர். இதனால் அதன் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறும் கேட்டிருந்தனர்.