நிரல்
ஒக். 21 20:29

விசாரணைகளில் இருந்து இராணுவத்தைக் காப்பாற்றவுள்ளதாகக் கூறுகிறார் கோட்டாபய ராஜபக்ச

(வவுனியா, ஈழம்) ஆட்சி அமைத்தவுடன் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகி இருக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கும் நீதியைக் கொடுக்கவுள்ளதாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியல் தேவைகளுக்காகவும் சர்வதேச நிறுவனங்களின் அழுத்தங்களினாலும் இலங்கை இராணுவத்தினரை மைத்திரி- ரணில் அரசாங்கம் காட்டிக்கொடுத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையின் தேசிய பாதுகாப்புத் திட்டங்களை அமுல்படுத்தவுள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். அம்பாந்தோட்டை பெலியத்த பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு கூறினார்.
ஒக். 19 22:56

மட்டக்களப்பு ஆண்டான்குளம், கட்டுமுறிவுக் கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை

(மட்டக்களப்பு, ஈழம்) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப்பிரிவில் உள்ள கிராமங்கள் அனைத்தும் கடந்தகாலப் போர் நடவடிக்கைகளின் போது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இதில் எல்லைக்கிராமமான கட்டுமுறிவு கிராமத்தை முன்னேற்றுவதற்கு இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஆட்சியாளர்கள் எவரும் கவனம் செலுத்தவில்லையென ஆலய தலைவர் தெய்வேந்திரன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கட்டுமுறிவுக் கிராம சேவகர் பிரிவில் வாழ்ந்த மக்கள் போரினால் பல தடவைகள் இடம்பெயர்ந்து தமது சொத்துக்களை இழந்துள்ளனர்.
ஒக். 19 22:29

நிமல்ராஜன் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பில்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இலங்கைப் படையினரோடு சேர்ந்து இயங்கும் ஆயுதக் குழு ஒன்றினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமல்ராஜனின் 19 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் இன்று சனிக்கிழமை மாலை இந்நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 2000 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 19 ஆம் திகதி நிமலராஜன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஒக். 19 14:54

கரியாலை நாகபடுவான் தமிழ்க் கலவன் பாடசாலையின் அவலம்

(கிளிநொச்சி. ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் கல்வி அமைச்சு வடக்குக் கிழக்கு மாகாணங்களில் கல்விச் செயற்பாடுகளில் கவனம் செலுத்துவதாகக் கூறப்படுகின்றபோதும் போரினால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் அபவிருத்தி செய்யப்படுவதில்லையென பெற்றோர் ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வடமாகாணம் கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் போதிய வசதிகள் இல்லையென்றும் வளப்பற்றாக்குறை காணப்படுவதாகவும் பெற்றோர் ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஓர் பாடசாலைக்கு இருக்க வேண்டிய பல்வேறு பௌதீக வளங்களை குறித்த பாடசாலை இழந்துள்ளது. கிராமப்புற பாடசாலை என்பதால் புறக்கணிக்கப்பட்டுள்ளதா எனும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஆசிரியர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவிக்கின்றனர்
ஒக். 18 16:36

கண்ணிவெடி அகற்ற ஜப்பான் தூதரகம் நிதியுதவி

(கிளிநொச்சி. ஈழம்) வடக்குக் கிழக்குப் பகுதியில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் கட்டம் கட்டமாக இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக போர் நடைபெற்ற வன்னிப் பிரதேசத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் கட்டம் கட்டமாக இடம்பெறுகின்றன. கிளிநொச்சி முகமாலைப் பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் மனிதநேய பணியில் ஈடுபட்டு வரும் சார்ப் மற்றும் கலோ நிறுவனங்கள் சமீபகாலமாக நிதிநெருக்கடியை எதிர்நோக்கியிருந்தன. இதனால் கண்ணிவெடி அகற்றும் பணிகளும் தாமதமடைந்தன. இந்த நிலையில் கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகம் குறித்த இரு நிறுவனங்களுக்கும் நிதி வழங்க முன்வந்துள்ளது.
ஒக். 17 16:00

வாக்குறுதிகளை வழங்கித் தடம் புரண்ட தமிழ்க் கட்சிகள் ஆவணத்துக்குப் பொறுப்புக் கூறுமா? ஆய்வாளர் நிலாந்தன்

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியினால் தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து கலந்துரையாடி ஆவணம் ஒன்றைத் தாயரித்துக் கையொப்பமிட்டமை முன்னேற்றகரமான அம்சம் என்று சிவில் சமூகச் செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளருமான எம் நிலாந்தன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்துள்ளார். ஆனாலும் கடந்த காலங்களில் தேர்தல் விஞ்ஞாபனங்களில் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகளில் இருந்து தடம்புரண்ட இந்தக் கட்சிகள், இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளவற்றை தொடர்ச்சியாகப் பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் நிலாந்தன் வலியுறுத்திச் சொன்னார்.
ஒக். 17 09:41

இலங்கையின் இறைமை பிரிக்கப்படாது- தேர்தல் விஞ்ஞாபனம் விரைவில் என்கிறார் மங்கள

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஆதரவுகளைத் தெரிவித்து செய்திகள், செய்திக் கட்டுரைகளை வெளியிட்டு வரும் சிங்கள நாளிதழ்கள் தமிழ்க் கட்சிகள் ஆதரவு வழங்குவதற்காக முன்வைக்கும் கோரிக்கைகளை கடும் இனவாதமாகச் சித்தரித்து வருகின்றன. வடக்குக் கிழக்குப் பகுதிகளில் உள்ள சிங்களக் கிராமங்கள், விகாரைகளை இல்லாமல் செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள நாளிதழில் பிரசுரமான செய்திகளை கட்சியின் மூத்த உறுப்பினர் அமைச்சர் மங்கள சமரவீர மறுத்துள்ளார். இலங்கையின் இறைமை பிரிக்கப்படாதென்றும் கூறினார்.
ஒக். 16 15:54

இலங்கைக் குடியுரிமை விவகாரம்- ரிட் மனுத் தாக்கல் செய்ய ஆலோசனை

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் இலங்கை குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி மீண்டும் ரிட் மனுத் தாக்கல் (Writ) செய்யப்படவுள்ளதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் செயற்பாட்டாளரான காமினி வியங்கொட கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். இலங்கை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது. பல சிவில் அமைப்புகள் தம்மோடு இணைந்து இந்த மனுவைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் காமினி வியங்கொட தெரிவித்தார். சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பாக பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, காமினி வியங்கொட ஆகியோர் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு சென்ற நான்காம் திகதி நிராகரிக்கப்பட்டிருந்தது.
ஒக். 15 17:59

அரசியல் விடுதலைக்கான சமஸ்டி ஆட்சியைக் கோரியுள்ளோம்- சுரேஸ் பிரேமச்சந்திரன் விளக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) திம்புக் கோட்பாட்டின் அடிப்படையிலான ஒரு உடன்பாட்டை எட்ட முடியாமல் போனமைக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிடிவாதமே காரணம் என்று ஈபிஆா்எல்எப் கட்சியின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளார். கலந்துரையாடல்களில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தாங்கள் வெளியேற்றவில்லை என்றும் அவர்கள் தாமாகவே வெளியேறினார்கள் எனவும் அவர் கூறினார். ஆவணத்தில் கையொப்பமிட்ட ஐந்து தமிழ்க் கட்சிகளும் ஒரு குழுவாகச் சென்று கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் இந்த முயற்சி வெற்றிபெறுமா இல்லையா என்பதைத் தற்போதைக்கு கூற முடியாதென்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் கூறினார்.
ஒக். 14 23:25

ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான ஆவணத்தில் ஐந்து தமிழ்க் கட்சிகள் கைச்சாத்திட்டன

இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களிடம் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்கும் நோக்கில் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டு ஆவணம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் தொடர் முயற்சியினால் இடம்பெற்ற கலந்துரையாடல்களின்போது எட்டப்பட்ட பொது இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே கூட்டு ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டு இன்று திங்கட்கிழமை மாலை கையொப்பமிடப்பட்டுள்ளது. இன்று ஐந்தாவது தடவையாக நடத்தப்பட்ட பேச்சுக்களின் முடிவில், இன்று மாலை 6.30க்கு பொது இணக்கப்பாட்டு ஆவணத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.