நிரல்
ஜன. 10 23:08

சட்டவிரோத மண் அகழ்வைத் தடுக்க இலங்கை இராணுவம் தேவையென மக்கள் கோரினார்களா?

(கிளிநொச்சி, ஈழம்) வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுக்கள் இலங்கை இராணுவம், இலங்கைப் பொலிஸார் ஆகியோரின் ஒத்துழைப்புடன் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லாறு கிராமத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க இலங்கை இராணுவமே தேவையென கல்லாறு கிராமப் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பொலிஸாரைவிட இலங்கை இராணுவத்தினரே சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுக்களைத் தடுப்பார்கள் எனவும் கிராமப் பெண்கள் கேட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஜன. 09 21:42

இலங்கையைக் கூட்டாளியாக்க அமெரிக்கா முயற்சி- ஜே.வி.பி எச்சரிக்கை

(வவுனியா, ஈழம்) அமெரிக்காவுடன் இலங்கை செய்துள்ள ஒப்பந்தங்களை ரத்துச் செய்ய வேண்டும் எனவும் வேறு ஒப்பந்தங்கள் எதனையும் செய்ய வேண்டாமெனவும் ஜே.பி.வி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்ணாயக்கா, இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திவரும் போர் அதிகரித்ததன் காரணமாக இலங்கையின் பாதுகாப்பு பெரும் ஆபத்தில் உள்ளது என கருதுவதாகவும் மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி உறுப்பினர் பிமல் ரத்னாயக்க அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார். எனவே தற்போதைய சூழலை கருத்திற்கொண்டு அச்சுறுத்தலான ஒப்பந்தங்களை உடனடியாக இரத்து செய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜன. 09 11:22

ஊடகவியலாளர் நிலாந்தன் நீதிமன்றத்தில் முன்னிலையாகிப் பிணையில் விடுதலை

(மட்டக்களப்பு, ஈழம் ) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை செய்தியாக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிலையான சுதந்திர ஊடகவியலாளர் செ.நிலாந்தன் நேற்று இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டார். செங்கலடி பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களை ஊடகங்களில் செய்தியாக வெளியிட்டிருந்த குற்றச்சாட்டிலேயே நிலாந்தன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஜன. 08 22:44

கன்னியா வெந்நீரூற்றில் தாதுகோபுரம் அமைக்கும் விவகாரம்- இடைக்காலத் தடையுத்தரவு மேலும் நீடிப்பு

(திருகோணமலை, ஈழம்) கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஈழத்தமிழ் மக்களின் மரபுரிமைப் புனித பிரதேசமான கன்னியா வெந்நீரூற்றுத் தொடர்பான இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் பெப்ரவரி 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சுமார் இரண்டு மணி நேர விவாதத்தின் பின்னரே இடைக்காலத் தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19ம் திகதி திருகோணமலை சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
ஜன. 07 23:06

இந்தியாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் இலங்கை வழங்கிய உறுதிமொழி? சுமந்திரன் கேள்வி

(வவுனியா, ஈழம்) போரின் பின்னரான சூழலில் அதிகாரப் பரவலாக்கத்தின் மூலமாக தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் நிரந்தரத் தீர்வு வழங்கப்படுமென இந்திய மற்றும் சர்வதேச நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருந்ததாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் இலங்கை நாடாளுமன்றத்தில் கூறினார். இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் கருத்து வெளியிட்ட சுமந்திரன், இந்த உறுதிமொழி குறைந்தது மூன்று தடவை இந்தியாவிற்கு வழங்கப்பட்டது என்றும் கூறினார். அவற்றில் 13 ஆவது திருத்தமும் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை அடையும் நோக்கில் 13ஆவது திருத்தச் சட்டம் மேலும் கட்டியெழுப்பப்படும் எனவும் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.
ஜன. 06 23:23

ஜனாதிபதித் தேர்தல் முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கையில்லை- தேர்தல்கள் ஆணைக்குழு குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலின் போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் குறித்து இதுவரை நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படவில்லையென இலங்கை ஒற்றையாட்சி அரசின் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாமையினால் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களின்போது பாரிய சவால்களை எதிர்நோக்கவுள்ளதாகவும் மகிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.
ஜன. 06 15:26

அருட் தந்தை மேரி பஸ்தியன், பொதுமக்கள் கொல்லப்பட்ட நினைவு நாள்

(மன்னார், ஈழம் ) வடமாகாணம் மன்னார் மாவட்டத்திலுள்ள வங்காலைப் பிரதேசத்தில் 1985 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை மேரி பஸ்ரியன் மற்றும் அவரோடு சேர்த்துப் படுகொலை செய்யப்பட்ட சிறுவர்கள், பொது மக்கள் ஆகியோரை நினைவுகூரும் நாள் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இன்று காலை ஏழு மணியளவில் வங்காலைப் புனித ஆனாள் தேவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அமரர் மேரி பஸ்ரியன் அடிகளாரின் சிலைக்கு முன்பாக இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. பெருமளவு மக்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்ணாண்டோ, மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உட்பட அருட்தந்தையர்கள் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.
ஜன. 05 21:49

காணாமல் ஆக்கப்பட்டவரின் தந்தை உயிரிழந்தார். இதுவரை 56 பேர் மரணம்

(மன்னார், ஈழம் ) இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டு இதுவரை கிடைக்காத நிலையில் நீதிகோரிப் போராடிய தந்தையொருவர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார். வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் இடம்பெற்ற பல போராட்டங்களில் பங்கெடுத்துக், காணாமல் போன தனது மகனையும் ஏனைய பெற்றோர்களின் பிள்ளைகளைக், கணவன்மாரைக் கண்டறிந்து தருமாறு வலியுறுத்திக் குரல்கொடுத்து வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். மன்னார் ஓலைதொடுவாய் பகுதியைச் சேர்ந்த 73 வயதான சூசைப்பிள்ளை இராசேந்திரம் என்பவரே உயிரிழந்தவராவார். நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும் தனது மகனை மீட்கும் போராட்டத்தில் பங்குபற்றியிருந்ததாக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
ஜன. 04 23:06

கிளிநொச்சியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட ஐந்துபேர் கைது

(கிளிநொச்சி, ஈழம்) வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இலங்கைப் பொலிஸார், இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக மக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். அதற்கு எதிராக போராட்டங்களும் இடம்பெற்றிருந்தன. பொலிஸார் அந்தப் போராட்டங்களை மிக மோசமாகத் தாக்கித் தடுத்துமிருந்தனர். இந்த நிலையில் சட்டவிரோத அகழ்வு முயற்சி தொடர்பாக இலங்கை இராணுவத்தில் கப்ரன் தரத்தைச் சேர்ந்த மூன்றுபேர், சாதாரண சிப்பாய்கள் அடங்கலாக ஐந்துபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 29ம் திகதி 155ம் கட்டை பகுதியில் இவர்கள் வேறு சிலருடன் இணைந்து சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜன. 03 21:43

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் நிலாந்தனுக்கு அச்சுறுத்தல்

(மட்டக்களப்பு, ஈழம் ) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செல்வக்குமார் நிலாந்தன் கைது செய்யப்படலாமென ஒன்றியம் தெரிவித்துள்ளது. சுயாதீன ஊடகவியலாளர் நிலாந்தனின் வீட்டிற்கு நேற்று இரவு ஒன்பது மணிக்கு அவரைக் கைது செய்யச் சென்ற இலங்கைப் பொலிஸார், அங்கு அவர் இல்லாததால் அவருடைய குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்திச் சென்றுள்ளதாகவும் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அத்துடன் நிலாந்தனை ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் பொலிஸார் குடும்ப உறுப்பினர்களிடம் கூறியுள்ளனர். இரவு நேரத்தில் வீட்டுக்குச் சென்றமையினால் குடும்ப உறுப்பினர்கள் அச்சமடைந்துள்ளதாகவும் ஒன்றியம் தெரிவித்துள்ளது.