நிரல்
ஒக். 05 21:42

கொட்டகலையில் இராணுவ முகாம்- பெயர்க்கல் நாட்டப்பட்டது

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் தீவிரமாக இடம்பெற்ற காலத்தில் கொட்டகலை பகுதியில் இராணுவ முகாம் ஒன்றை அமைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அங்கு 581 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்படுவதற்கான பெயர்க் கல் நாட்டப்பட்டுள்ளது. மலையகத் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் கொட்டகலைப் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள முகாமில் சுமார் 300 இராணுவத்தினர் தங்கவுள்ளதாகவும் இதனால் சுற்றுப்பறங்களில் உள்ள குடும்பங்களை வேறு இடத்திற்குச் செல்லுமாறும் இராணுவம் கூறியுள்ளது.
ஒக். 02 23:38

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும்- மகிந்த தேசப்பிரிய

(வவுனியா, ஈழம்) மாகாண சபைகளுக்கான தேர்தல்களை இந்த ஆண்டு நடத்த வேண்டுமென இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 19ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக சென்ற யூன் மாதம் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த வேண்டி ஏற்பட்டதால் மாகாண சபைகளுக்குரிய தேர்தல்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதென்றும் மகிந்த தேசப்பிரிய கூறினார். மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டிய அவசியம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எடுத்துக் கூறியுள்ளதாகவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
ஒக். 01 21:19

புலனாய்வுப் பொலிஸார் கண்காணிப்பதாக முறைப்பாடு

(வவுனியா, ஈழம்) போரின் போது இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்டடவர்கள் தொடர்பாகப் போராட்டம் நடத்தி வரும் உறவினர்கள், நண்பர்கள் இலங்கைப் புலனாய்வுத் துறையினரால் கண்காணிக்கப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது. தமிழர் தாயகமான வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்ட வலிந்துகாணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். நீதிகோரி முல்லைத்தீவில் போராட்டம் ஒன்றை நடத்தியதால் நேற்று முன்தினம் இரவு 8.45க்கு தனது வீட்டுக்கு வந்த புலனாய்வுத்துறை அதிகாரிகள் தமது போராட்டம் தொடர்பான தகவல்களைத் தன்னிடம் இருந்து பெற்றதாக மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
செப். 28 21:43

அடக்குமுறைக்கு எதிராக தாயகப் பிரதேசங்களில் கடையடைப்புப் போராட்டம்

(மட்டக்களப்பு, ஈழம் ) ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை ஒற்றையாட்சி அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்து இன்று திங்கட்கிழமை வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இடம்பெற்ற முழுமையான கடையடைப்புப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. பத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டத்தின்போது பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் செயழிந்தன. வர்த்தக நிலையங்கள், சந்தைகள் அனைத்தும் மூடப்படிருந்தன. இலங்கை இராணுவத்தின் எச்சரிக்கைகளுக்கு மத்தியில் போராட்டம் இடம்பெற்றது. வர்த்தக நிலையங்களைத் திறக்குமாறு இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்தபோதும், உரிமையாளர்கள் எவரும் அதற்குச் செவிசாய்க்கவில்லை.
செப். 27 20:58

13ஆவது திருத்தச் சட்டத்தையே புறக்கணித்த மகிந்த

இலங்கை ஒற்றையாட்சி அரசின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் மிலிந்தகொட உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் சிங்கள அரசியல் பிரதிநிதிகள் கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். இந்திய- இலங்கை நாடுகளின் உச்சி மாநாடு நேற்று முன்தினம் சனிக்கிழமை காணொளி மூலமாக நடைபெற்றது. இதன்போதே நரேந்திரமோடி பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியதாக இந்திய மத்திய வெளியுறவு அமைச்சக இந்தியப் பெருங்கடல் பிரிவு இணைச் செயலரளர் அமித் நரங் புதுடில்லியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
செப். 26 23:09

அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் பற்கேற்றனர்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை இலங்கை ஒற்றையாட்சி அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ்தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இன்று சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை நான்கு மணி வரை இடம்பெற்றது. இலங்கைப் படையினரின் பெரும் நெருக்குவாரங்கள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இடம்பெற்ற போராட்டத்தில் நூற்றுக்கனக்கான மக்கள் கலந்துகொண்டனர். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
செப். 25 10:34

‘அச்சாப்பிள்ளை’ அரசியல் நடத்தும் தமிழ்க் கட்சிகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்க் கட்சிகள் அல்லது தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அச்சாப்பிள்ளை அரசியலில் ஈடுபட்டு வருவதையே காண முடிகின்றது. அதாவது இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவாகச் செயற்பட்டுச் சிங்கள ஆட்சியாளர்களின் மனங்களையும் நோகடிக்காமல், அதேவேளை தமிழ்த் தேசிய அரசியலையும் தீவிரமாகப் பேசிக் கொண்டு சொத்துச் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு தம்மைத் தியாகிகளாகவும் வெளிப்படுத்த முற்படுகின்றனர். ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசின் யாழ் நீதவான் நீதிமன்றம் மேலும் 14 நாட்களுக்குத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
செப். 23 22:43

மன்னாரில் மன்னர்கால நாணயக் குற்றிகள் மீட்பு

(மன்னார்,ஈழம் ) ஈழத் தமிழர்களின் தாயகமான மன்னார் − நானாட்டான் பிரதேசத்தில் இருந்து மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட சுமார் 1904 நாணயக் குற்றிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட நாணயக் குற்றிகள் பாண்டிய மன்னர்களின் காலத்திற்கு சொந்தமானவையாக இருக்கலாம் மன்னார் செயலக தமிழ்த் தொல்லியல் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். மன்னார் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வடக்கு வீதியிலேயே மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயக் குற்றிகள் மற்றும் சட்டி, பாணை, ஓட்டுத் துண்டு போன்ற தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
செப். 23 22:03

கொழும்பில் தமிழ் இளைஞர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் படையினரால் வடக்குக் கிழக்கு மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் பல தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக போர்க்காலத்தின்போது கொழும்பில் தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட பதினொருபேர் வெள்ளைவானில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றது வருகின்றது. இந்த நிலையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விசாரணையின்போது எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இநத வழக்கை விசாரணை செய்து வந்த நீதிபதி ரங்க திஸாநாயக்கா இடமாற்றம் செய்யப்பட்டதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செப். 22 21:56

20ஆவது திருத்தச் சட்ட நகல் வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபு இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நகல் புதிய வரைபு தொடர்பாக அரசாங்கத்தரப்புக்குள்ளேயே கருத்து மோதல்கள் உருவாகியிருந்தன. ஆனாலும் நீதியமைச்சர் அலி சப்ரி அந்த நகல் வரைபை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவுடன் சமர்ப்பித்தார். தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்கு மத்தியில் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபு இன்று காலை சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தனவிடம் கையளிக்கப்பட்டது. அதேவேளை குறித்த நகல் வரைப்பு மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டுமெனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.