நிரல்
ஜூலை 23 14:12

றிஷாத் பதியூதீனின் மனைவி உட்பட மூவர் கைது

(வவுனியா, ஈழம்) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கைத்தொழில் வாணிப அமைச்சருமான றிஷாத் பதியூதீனின் மனைவி உட்பட மூவர் வெள்ளிகிழமை அதிகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியூதீனின் கொழும்பில் உள்ள இல்லத்தில் பணிபுரிந்த நுவரெலியா மாவட்டத்தின் டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி இஷாலினி தீ காயங்களினால் மரணமடைந்தமை மற்றும் அச்சிறுமி மீதான பாலியல் சீண்டல்கள் தொடர்பில் கொழும்பு பொரளைப் பொலிஸார் தீவிர புலன் விசாரணைகள் மேற்கொண்டுவரும் நிலையிலேயே றிஷாத் பதியூதீனின் மனைவி அவரின் சகோதரர் மற்றும் டயகம பகுதியைச் சேர்ந்த வேலைவாய்ப்பு முகவர் ஆகிய மூவர் பொரளை பொலிஸாரினால் 23 ஆம் திகதி வெள்ளி அதிகாலை கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூலை 22 23:55

தமிழ் சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்பார்வை செய்ய விசேட குழு நியமனம்

(வவுனியா, ஈழம்) நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பில் உள்ள வீட்டில் பணியாற்றிய மலையகத்தைச் சேர்ந்த தமிழ்ச் சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய சிறப்புக் குழுவொன்று இன்று வியாழக் கிழமை நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் இந்தக் குழுவை நியமித்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் திலீப பீரிஸ் தலைமையிலான குழுவை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் நியமித்துள்ளார்.
ஜூலை 20 23:20

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 91 வாக்குகளினால் தோல்வி

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கத்தின் எரிசக்தி அமைச்சர் உதயன் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 91 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரேரணைக்கு எதிராக 152 வாக்குகளும் ஆதரவாக 81 வாக்குகளும் பெறப்பட்டன. இன்று செவ்வாய்க்கிழமை இந்தப் பிரேரணை தொடர்பான விவாதம் நடைபெற்றுப் பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி ஆகிய கட்சிகளுடன் இணைந்து ரணில் விக்கிரமசிங்கவும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.
ஜூலை 19 22:25

எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்துள்ள பிரேரணை தோற்கடிக்கப்படும்- அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கைத் தீவில் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டதைக் கண்டித்து எரிபொருள் சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் தோற்கடிக்குமென ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அதிகாரபூர்வமாக இன்று திங்கட் கிழமை அறிவித்துள்ளது. இந்தப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென அரசாங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுஜனப் பெரமுனக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.
ஜூலை 18 23:05

சிங்களக் கட்சிகளின் உள்ளக முரண்பாடுகள்

கோட்டாபய மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையமாகக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் உள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான திஸாநாயக்கா, பொதுஜனப் பெரமுன அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ளார். மூத்த உறுப்பினராக இருந்தும் தனக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை என்றும் இது பழிவாங்கும் செயல் என கொழும்பில் சென்ற வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
ஜூலை 18 22:53

தலைமன்னார் ஐந்தாவது மணல் தீடையில் கரையொதுங்கிய சடலம்

(மன்னார், ஈழம்) இலங்கையின் வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் கடல் பரப்பில் உள்ள ஐந்தாவது மணல் தீடையில் கரையொதுங்கிய சடலத்தை நீதிமன்ற உத்தரவின்படி மீட்டதுடன் அதனை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கையளித்துள்ளதாகத் தலைமன்னார் பொலிஸார் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த 16 ஆம் திகதி வெள்ளிக் கிழமை காலை கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், தலைமன்னார் கிராமத்திற்கு அருகில் கடல் நடுவே உள்ள ஐந்தாம் மணல் தீடையில் கரையொதுங்கிய நிலையில் சடலமொன்றினை கண்டுபிடித்தனர். இந்த நிலையில் குறித்த சடலம் தொடர்பில் இலங்கை கடற்படையினர் தமக்கு தகவல் வழங்கியதாக தலைமன்னார் பொலிஸார் கூர்மை செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தனர்.
ஜூலை 17 22:00

மன்னாரில் கடற்றொழிலாளர்கள் கொவிட் தடுப்பூசி ஏற்ற வேண்டுமென பணிப்பு

(மன்னார், ஈழம்) மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த முப்பது வயதிற்கு மேற்பட்ட மீனவர்கள் அனைவரும் கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே எதிர்காலத்தில் கடற்றொழிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வினோதன் தர்மராஜன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். மன்னார் மாவட்ட மீனவர்கள் இந்திய நாட்டு மீனவர்களுடன் இலகுவாக தொடர்புபடும் சாத்தியங்கள் அதிகம் உள்ளது. இந்திய நாட்டில் பரவிவரும் திரிபடைந்த கொரோனா வைரஸ் அந்த நாட்டு மீனவர்கள் மூலம் இலங்கை மீனவர்களுக்கும் தொற்றும் அபாய நிலையும் காணப்படுகிறது.
ஜூலை 16 00:20

புதுக்குடியிருப்பில் போர்க்கால ஆட்லறி ஷெல்

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கைத்தீவில் இறுதி யுத்தம் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த 14ஆம் திகதி புதன்கிழமையன்று மண்ணில் புதையுண்ட நிலையில் ஆட்டிலறி ஷெல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த ஆட்டிலறிக் குண்டு மிகப் பெரிய அளவில் காணப்பட்டதுடன் சுமார் 250 கிலோ நிறையுடையதாக இருக்கலாம் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஜூலை 14 21:02

மன்னாரில் கத்தோலிக்க ஆலயங்கள் மீது கல்வீச்சு

(மன்னார், ஈழம்) வட மாகாணம் மன்னார் நகரில் கடந்த மூன்று நாட்களில் ஆறு கத்தோலிக்கச் சிற்றாலயங்கள் மீது கல் வீச்சுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு அவை சேதமாக்கப்பட்டுள்ளது தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாக மன்னார் ஆயர் இல்லம் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது. மன்னார் நகரில் உள்ள குறித்த ஆறு சிற்றாலயங்கள் மீது கடந்த திங்கள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய தினங்களில் அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த கல் வீச்சினால் அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கவசங்கள் உடைந்து நொறுங்கியுள்ளதுடன் வேறு சிறிய சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக மன்னார் ஆயர் இல்லத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 14 20:44

இந்திய மருத்துவக் கழிவுகள். கரையோரப் பிரதேசங்கள் மாசடைவதாக முறைப்பாடு

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்திய நாட்டு மருத்துவக் கழிவுகள் மற்றும் அங்கு பயன்படுத்தப்பட்ட ஏனைய பாவனைப் பொருட்களின் வெற்றுப் பிளாஸ்ரிக் கொள்கலன்கள் உட்பட பல கழிவுப் பொருட்கள் இலங்கையின் வட பகுதிக் கரையோரங்களில் தொடர்சியாகக் கரையொதுங்கி வரும் நிலையில் குறித்த கழிவுப்பொருட்கள் தமது மீன்பிடி வலைகளில் சிக்குவதினால் தாம் தினமும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக வட பகுதி தமிழ் மீனவர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.