செய்தி: நிரல்
செப். 30 21:52

மன்னாரில் படையினர் திடீர் சோதனை நடவடிக்கை

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் கடந்த 29ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் இராணுவத்தினரால் கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொவிட் - 19 நோய் தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்காக பல வாரங்களாக நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப் படுத்தல் ஊரடங்கு நாளை முதலாம் திகதி வெள்ளிக்கிழமை தளர்த்தப்படும் நிலையில் இலங்கை இராணுவத்தினரால் மன்னார் நகரில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளினால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செப். 29 22:18

மீண்டுமொரு தாக்குதலா? உரிய பாதுகாப்பை மேற்கொள்ளுமாறு பேராயர் இல்லம் வேண்டுகோள்

(யாழ்ப்பாணம், ஈழம்) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் போன்று மீண்டுமொரு தாக்குதல் இலங்கைத் தீவில் உள்ள தேவாலயங்கள் மீது நடத்தப்படுமென இலங்கைக் கடற்படை வெளியிட்ட அறிவிப்புத் தொடர்பாக அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பில் உள்ள பேராயர் இல்லம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வாறு வெளியிடப்பட்ட அறிவிப்புத் தவறானதென பின்னர் இலங்கைக் கடற்படைத் தலைமைப் பீடம் கூறியதோடு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் அது குறித்து மன்னிப்பும் கேட்டிருந்தது.
செப். 28 22:17

பதவி நீக்கத்துக்கு எதிராக கொழும்பு நீதிமன்றில் மனு

(மன்னார், ஈழம்) வட மாகாண ஆளுநரினால் பிரதேச சபை தவிசாளர் பதவியில் இருந்தும் பிரதேச சபை உறுப்புரிமையில் இருந்தும் தான் நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டு மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சாகுல் கமீட் முகம்மது முஜாகீர் கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் இன்று 28ஆம் திகதி செவ்வாய் மாலை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். புதிய தவிசாளர் தெரிவிற்கான விசேட அமர்வு நாளை புதன்கிழமை காலை மன்னார் பிரதேச சபை செயலகத்தில் நடைபெறவுள்ள நிலையில் முன்னாள் தவிசாளரால் மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செப். 28 20:19

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு நாளை

(மன்னார், ஈழம்) வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு நாளை 29 ஆம் திகதி புதன்கிழமை மாகாண உள்ளூராட்சித் திணைக்கள ஆணையாளர் தலைமையில் நடைபெறவுள்ளது. மன்னார் பிரதேச சபையின் தவிசாளராகப் பணியாற்றிய சாகுல் கமீட் முகம்மது முஜாகீர், அவரின் பதவியைத் துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் ஒழுங்கீனமாகச் செயற்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டில் வட மாகாண ஆளுநரினால் கடந்த 14 ஆம் திகதி தவிசாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதுடன் பிரதேச சபை உறுப்புரிமையிலும் இருந்து நீக்கப்பட்டார்.
செப். 27 22:31

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்படாது

(மன்னார், ஈழம்) தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படாதென கொவிட் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும் சுகாதார விதிமுறைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்குமெனவும் மாகாணங்களுக்குகிடையிலான போக்குவரத்துத் தடை உத்தரவுகள் நீக்கப்படாதெனவும் அவர் கூறினார். ஒக்டோபர் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தனிமைப்படுததல், ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோரின் எண்ணிக்கை குறைக்கப்படுமெனவும் சவேந்திர சில்வா கூறினார்.
செப். 26 10:05

ஐந்து மாவட்டங்களிலும் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு

(வவுனியா, ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் என்றுமில்லாதவாறு உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மேற்படி ஐந்து மாவட்டங்களில் உள்ள பல வர்த்தக நிறுவனங்கள் உணவுப் பொருட்கள் பால் மா வகைகள் உட்பட அத்தியாவசிய பண்டங்கள் பலவற்றை விலையேற்றத்தை கருத்தில்கொண்டு பதுக்கிவைத்துள்ள நிலையில் பொதுமக்கள் குறித்த பொருட்களை பெறமுடியாது திண்டாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செப். 25 20:21

மன்னாரில் திலீபனின் நினைவேந்தல்- பொலிஸாரின் தடையுத்தரவுக்கு நீதிமன்றம் மறுப்பு

இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் திலீபனின் நினைவு நாளான எதிர்வரும் 26 ஆம் திகதியன்று நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் அதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி பொலிஸார் தாக்கல் செய்த மனு தொடர்பில் எவ்வித தடை உத்தரவும் பிறப்பிக்காது பொலிஸாரின் கோரிக்கையை மன்னார் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. திலீபனின் நினைவு தினம் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளதாகவும் குறித்த நினைவு நாள் நிகழ்வுகளுக்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மன்னார் பொலிஸார் மன்னார் மாவட்ட நீதிமன்றில் இன்று 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை வழக்கொன்றை தாக்கல் செய்தனர்
செப். 24 22:34

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை கருத்தொன்றிக்கச் செய்யும் முயற்சி

(வவுனியா, ஈழம்) வடக்கு-கிழகுத் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசத்தில், தொகுதி ரீதியாகவும் தேசியப்பட்டியலூடாகவும் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இயன்றவரை ஒன்றிணைந்து ஈழத்தமிழர்களின் கூட்டு உரிமை சார்ந்த நிலைப்பாடுகளை முன்னெடுக்கச் செய்யும் நோக்கில் பொது வேலைத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அதி. வண. கலாநிதி கி. நோயெல் இம்மானுவேல், தவத்திரு அகத்தியர் அடிகளார் தென்கயிலை ஆதீனம் ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் இந்தப் புதிய முயற்சி ஆரம்பித்து வைக்கப்படுவதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னாரைச் சேர்ந்த அ. அன்ரனி றொமோள்சன் எனும் சட்டத்தரணியிடம் இந்தப் பொறுப்பைக் கையளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப். 24 22:09

கோயில் மோட்டை விவகாரம்- குழப்பத்தை உருவாக்கும் தேரர்

(மன்னார், ஈழம்) வட மாகாணம் மன்னார் மாவட்டதின் மடுப்பகுதியில் உள்ள கோயில் மோட்டை எனும் விவசாய காணிகளை மாகாண ஆளுநரின் உத்தரவில் அப்பகுதி மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மாகாணக் காணி நிர்வாகத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நிலையில் இலங்கை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கடந்த 22ஆம் திகதி புதனன்று திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டு குறித்த கோயில் மோட்டை விவசாயக் காணியை பார்வையிட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செப். 23 23:32

கொவிட் நோய்த் தாக்கம் குறைவடைவதாக சுகாதார அமைச்சு கூறுகிறது

(வவுனியா, ஈழம்) இலங்கைத் தீவில் கொவிட் நோய்த் தாக்கம் குறைவடைந்து வருவதாக இலங்கைச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையினால் நோய்ப் பரவல் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது என்றும் ஆனாலும் மக்கள் தொடர்ச்சியாகச் சுகாதார நடைமுறைகளைப் பேண வேண்டுமெனவும் சுகாதார அமைச்சர் கெகலிய ரம்புக்வெல கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.