நிரல்
மே 18 16:29

அரசியல் விடுதலையை உணர்த்தி நிற்கும் நினைவேந்தல் நிகழ்வு

(முல்லைத்தீவு) ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையைக் கோரி நிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் திருகோணமலை தென்கையிலை ஆதின முதவர் தவத்திரு அகத்தியர் அடிகளார், அருட்தந்தை லியோ அடிகளார் ஆகிய இருவரும் முன்னிலை வகித்தனர். சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் நிகழ்வில் பங்கேற்றினர். உணர்வுபூர்வமாக இடம்பெற்ற நிகழ்வில், போரில் கொல்லப்பட்டவர்களை நினைகூர்ந்து உறவினர்கள் கதறி அழுதனர்.
மே 18 11:01

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

(வவுனியா, ஈழம்) முதன் முறையாக இந்த ஆண்டு கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது. கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதிவியில் இருந்து விலகுமாறு கோரி, ஒரு மாதத்திற்கும் மேலாகக் கொழும்பு காலிமுகத்திடலில் போராடி வரும் இளைஞர்கள், இந்த நினைவேந்தல் நிகழ்வை நடத்தியுள்ளனர். சிங்கள இளைஞர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலதரப்பினரும் நிகழ்வில் பங்குகொண்டனர். காலிமுகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வில் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
மே 17 22:10

மகிந்தவுக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர்கள் இருவர் கைது

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் முன்னாள் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நீண்டகாலமாக அமைச்சர்களாகவும் பதவி வகித்திருந்தனர். காலி முகத் திடலில் தொடர்ச்சியாக இடம்பெறும் போராட்டத்தில் பங்குகொண்டிருந்த இளைஞர்களைத் திட்டமிட்டுத் தாக்கிய குற்றச்சாட்டில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மே 16 22:34

பாரிய பொருளாதார நெருக்கடி- ரணில் எச்சரிக்கை

(வவுனியா, ஈழம்) இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மக்கள் தியாகங்களைச் செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டுமெனவும் ரணில் விக்கிரமசிங்க கேட்டுள்ளார். 2022ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் இரண்டாயிரத்து 300 பில்லியன் ரூபா வருமானம் இருப்பதாகக் காண்பிக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் அதன் உண்மை வருமானம் ஆயிரத்து 600 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டிருக்கின்றது. 2022ம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் செலவீனம் மூவாயிரத்து 300 பில்லியன் ரூபா என்று காண்பிக்கப்பட்டிருந்தாலும் அரசாங்கத்தின் முழுமையான செலவீனம் 4000 பில்லியன் ரூபா எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
மே 16 13:45

இன அழிப்பு விசாரணை, சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

(யாழ்ப்பாணம், ஈழம்) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது வெறுமனே போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூருவது மாத்திரமல்ல. முப்பது ஆண்டுகால அகிம்சைப் போராட்டத்திலும் அதற்கு அடுத்த முப்பது வருடகால போரிலும் கொல்லப்பட்ட அத்தனை உயிர்களின் தியாகத்திலும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதற்கான சர்வதேச ஏற்பாடாகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அமைதல் வேண்டும். சுனாமி பேரலையில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருதல் என்பது பொது நிகழ்வு. ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு என்பது ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கானது. தமிழ் இன அழிப்புப் பற்றிய சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை ஒருமித்த குரலாக முன்வைக்க வேண்டிய கூட்டு நினைவேந்தலாகும்.
மே 15 20:26

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மைத்திரி ஆதரவு

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவின் தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதென, முன்னாள் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. ஆதரவு வழங்குவது தொடர்பான கடிதம் ஒன்றை மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ளார். ஆதரவு வழங்குவதோடு, அரசாங்கத்தின் பொருளாதார செயற்பாடுகள் அனைத்துக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மே 13 13:57

சிங்கள பௌத்த தேசத்துக்குள் எழும் மோதல்கள், ஒற்றையாட்சி மரபின் தொடர்ச்சிக்கு உரமூட்டுகின்றன

(கிளிநொச்சி, ஈழம்) ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கைகள் சர்வதேச மட்டத்தில் அதிகளவு பேசப்பட்டு முக்கியத்துவம் பெறுகின்ற ஒவ்வொரு காலகட்டத்திலும், சிங்கள பௌத்த தேசம் ஏதோவொரு வகையில் தன்னை மீளக் கட்டமைக்கின்றது. பௌத்த தேசிய அரசியல் தலைவர்களிடையே வேறுபாடுகள் இருந்தாலும், இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் விடயத்தில் உடன்பாடாகிவிடுகின்றனர் என்பதற்கு கோட்டாபாய ராஜபக்ச முன்னிலையில், ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியேற்றமை மாத்திரம் உதாரணமல்ல. 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பமான காலத்தில் இருந்து அந்த உதாரணங்களைக் காணலாம்.
மே 12 15:50

இலங்கைக் கடற்படை தலைமன்னார் கடலில் ரோந்து நடவடிக்கை

(மன்னார், ஈழம்) தமிழர் தாயகமான வட மாகாணத்தின் மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள கரையோரப் பிரதேசங்கள் மற்றும் தலைமன்னாருக்கும் இந்தியாவிற்கும் இடையிலான மணல் தீடைகளில், இலங்கை கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் மிகக்கடுமையான பொருளாதார நிலை காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமிழகத்திற்கு தப்பிச் செல்லும் நிலையிலேயே அதனை கட்டுப்படுத்த கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூர்மைச் செய்தித் தளத்திற்கு மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
மே 12 12:03

ரணில் பிரதமராகப் பதவியேற்ற பின்னரும் தொடரும் போராட்டங்கள்

(வவுனியா, ஈழம்) பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்தபோதும், கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்கள் கொழும்பில் தொடருகின்றன. இன்று வியாழக்கிழமை மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்தபோது, கொழும்பு கொள்பிட்டியில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். கோட்டாபய ராஜபக்ச மாத்திரமல்ல ரணில் விக்கிரமசிங்கவும் வீட்டுக்குப் போக வேண்டும் என்றும் மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு பிரதமரகப் பதவியேற்க முடியுமென்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கேள்வி எழுப்பினர்.
மே 11 17:11

புதிய பிரதமரை நியமித்து அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக அறிவித்தார் கோட்டாபய ராஜபக்ச

(வவுனியா, ஈழம்) கொழும்பில் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் வன்முறைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த ஒரு வாரத்துக்குள் புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் உரையாடிய பின்னரே கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார். இன்று புதன்கிழமை இரவு அரச தொலைக்காட்சியில் விசேட உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ச, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையில் உள்ள சில அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்குப் பாரப்படுத்த 19 ஆவது திருத்தச் சட்டத்தை மீளவும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.