செய்தி: நிரல்
மே 13 14:22

வடமேல் மாகாணத்தில் காலவரையறையற்ற ஊரடங்கு

(வவுனியா, ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலையடுத்து குறிப்பிட்ட சில பிரதேசங்களில் தொடர்ச்சியாகப் பதற்றம் நிலவுகின்றது. இன்று திங்கட்கிழமை மாலை ஐந்து மணி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிலாபம், புத்தளம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடமேல் மாகணத்தில் காலவரையறையற்ற ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குருநாகல் - குளியாப்பிட்டியா, பின்கிரியா, டும்மலசூரியா, ஹெட்டிபொல, ரஸ்நாயக்கபுர, கொபேகன போன்ற பிரதேசங்களில் மாத்திரமே இன்று பிற்பகல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் திடீரெனப் பிறப்பிக்கப்பட்டிருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை சிலாபம் நகரில் வன்முறைகள் ஆரம்பித்ததால் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை நான்கு மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது.
மே 12 23:00

சிலாபத்தில் சிங்கள, முஸ்லிம் மோதல் - கட்டுப்பாட்டில் என்கிறது இலங்கைப் பொலிஸ்

(வவுனியா, ஈழம் ) இலங்கையின் வடமேல் மாகாணம் சிலாபம் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சிங்கள முஸ்லிம் இளைஞர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். முகநூலில் வெளியான பதிவு ஒன்றைத் தவறாகப் புரிந்து கொண்ட சிங்கள இளைஞர்கள் சிலர் சிலாபம் நகரில் உள்ள வர்த்தகர் ஒருவருடன் தர்க்கம் புரிந்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு இலங்கைப் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். இலங்கை முப்படையினரும் சிலாபம் நகரில் குவிக்கப்பட்டனர். பிற்பகலில் இருந்து நாளை திங்கட்கிழமை அதிகாலை நான்கு மணி வரையும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மே 12 15:13

அமெரிக்காவில் திலக்மாரப்பன உரையாடல்- சீனா செல்கிறார் மைத்திரி

(யாழ்ப்பாணம், ஈழம் ) உயிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்பையடுத்து எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை இலங்கையின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் அமெரிக்காவில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ள நிலையில், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை திங்கட்கிழமை சீனாவுக்குச் செல்லவுள்ளார். ஆசிய நாகரீகங்களின் உரையாடல் மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை பீஜிங்கில் நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் உரையாற்றுவதற்காகவே மைத்திரிபால சிறிசேன சீனாவுக்குச் செல்கிறார். 47 ஆசிய நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள், பிரமுகர்கள் உட்பட இருநூறுபேர் மாநாட்டில் கலந்துரையாடவுள்ளனர். அதேவேளை, மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் செவ்வாய்க்கிழமை சீன அதிபர் ஷி ஜின்பிங், சீனப் பிரதமர் லி கெகியாங் ஆகியோரை மைத்திரிபால தனித்தனியாகச் சந்திக்கவுமுள்ளார்
மே 11 22:00

நிரபராதியான முன்னாள் போராளி ஐந்து மாதங்களின் பின் விடுதலை

(மட்டக்களப்பு, ஈழம்) கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில், இலங்கைப் பொலிஸார் இருவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில், கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிரபராதியான முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர், கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற அஜந்தன் ஐந்து மாதங்களின் பின்னர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மே 10 23:02

ஒன்பது சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை - விசாரணை ஆரம்பம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறித்து இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தால் நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது. தற்கொலைத் தாக்குதல் நடத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட்டுக்குச் சொந்தமான, செப்புத் தொழிற்சாலையில் குண்டுகள் தயாரிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் அங்கு சோதனை நடத்தப்பட்டு அங்கு பணியாற்றிய ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். ஆனால் அந்த ஒன்பது பேரும் சில நாட்களிலிலேயே பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மே 09 22:39

மத அடிப்படைவாதம் அச்சுறுத்தல் - கத்தோலிக்க ஆயர்கள் மன்றம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்கள் மன்றம் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து உரையாடியுள்ளது. கொழும்பு புஞ்சிபொரளையில் உள்ள பேராயரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. வடக்கு - கிழக்கு உட்பட பன்னிரண்டு மறை மாவட்டங்களின் ஆயர்களும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலைமை குறித்தும் எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்களைத் தடுப்பது தொடர்பாகவும் ஆயர்கள் மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடியுள்ளனர். கிறிஸ்தவ பாடசாலைகளை எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பிக்க முடியுமென ஆயர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் உரிய பாதுகாப்பு இல்லையெனவும் தெரிவித்துள்ளனர்.
மே 09 10:35

அமெரிக்க, இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் இலங்கையில் ஆலோசனை

(யாழ்ப்பாணம், ஈழம் ) எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்த போன்ற நகரங்களில், குண்டு வெடிக்கும் அபாயம் உள்ளதென்று தகவல் கிடைத்துள்ளதாக பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று புதன்கிழமை மாலை இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இலங்கைப் பாதுகாப்பு உயர் அதிகாரிகள், இது தொடர்பாகத் தன்னிடம் கூறியதாகவும் இந்த ஆபத்துத் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்த வேண்டுமெனவும், சரத் பொன்சேகா வலியுறுத்தினார். உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்கள், ஹோட்டல்களில் குண்டுவெடிக்கவுள்ளதாக இந்தியப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்ததை, 15 தடவைகள் இலங்கைப் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஹேமசிறி பெர்ணான்டோ ஜனாதிபதி மைத்திரியிடம் கூறியிருந்தார்.
மே 08 15:19

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் கந்தசாமி நியமனம்

(வவுனியா, ஈழம்) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் இ.விக்னேஸ்வரன் திடீரென பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான தகுதி வாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானியில் உயர்கல்வி அமைச்சர் கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மே 08 14:58

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும் பிணை வழங்க மறுப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகியோருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பிணை மனு யாழ் நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் இன்று புதன்கிழமை இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் படி இரு மாணவர்களும் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதால், இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் அது குறித்து பரிசீலிக்கின்றது. எனவே யாழ் நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்க முடியாதென நீதவான் பீற்றர் போல், நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மே 08 10:17

தூதுவர் றொபேட் ஓ பிளேக் கோட்டாபய ராஜபக்சவை பாராட்டினார்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை அமெரிக்காவின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் றொபேட் ஓ பிளேக் (Robert O. Blake) பாராட்டியுள்ளார். சீனாவை மையப்படுத்திய தெற்காசியாவை நோக்கிய அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையும் இலங்கைக்கான அதன் அர்த்தமும் என்ற தொனிப்பொருளில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்திருந்தபோது தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்காகத் தொழிற்றிறன் உள்ள உயர்மட்டக்குழுவை அமைத்திருந்தார். அவ்வாறான தகுதியுடைய தொழிற்றிறனுள்ள உயர்மட்டக்குழு, தற்போதைய சூழலில் இலங்கைக்கு அவசியமென அவர் வலியுறுத்தினார்.