நிரல்
மே 09 22:39

மத அடிப்படைவாதம் அச்சுறுத்தல் - கத்தோலிக்க ஆயர்கள் மன்றம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்கள் மன்றம் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து உரையாடியுள்ளது. கொழும்பு புஞ்சிபொரளையில் உள்ள பேராயரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. வடக்கு - கிழக்கு உட்பட பன்னிரண்டு மறை மாவட்டங்களின் ஆயர்களும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலைமை குறித்தும் எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்களைத் தடுப்பது தொடர்பாகவும் ஆயர்கள் மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடியுள்ளனர். கிறிஸ்தவ பாடசாலைகளை எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பிக்க முடியுமென ஆயர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் உரிய பாதுகாப்பு இல்லையெனவும் தெரிவித்துள்ளனர்.
மே 09 10:35

அமெரிக்க, இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் இலங்கையில் ஆலோசனை

(யாழ்ப்பாணம், ஈழம் ) எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்த போன்ற நகரங்களில், குண்டு வெடிக்கும் அபாயம் உள்ளதென்று தகவல் கிடைத்துள்ளதாக பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று புதன்கிழமை மாலை இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இலங்கைப் பாதுகாப்பு உயர் அதிகாரிகள், இது தொடர்பாகத் தன்னிடம் கூறியதாகவும் இந்த ஆபத்துத் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்த வேண்டுமெனவும், சரத் பொன்சேகா வலியுறுத்தினார். உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்கள், ஹோட்டல்களில் குண்டுவெடிக்கவுள்ளதாக இந்தியப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்ததை, 15 தடவைகள் இலங்கைப் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஹேமசிறி பெர்ணான்டோ ஜனாதிபதி மைத்திரியிடம் கூறியிருந்தார்.
மே 08 15:19

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் கந்தசாமி நியமனம்

(வவுனியா, ஈழம்) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் இ.விக்னேஸ்வரன் திடீரென பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான தகுதி வாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானியில் உயர்கல்வி அமைச்சர் கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மே 08 14:58

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும் பிணை வழங்க மறுப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகியோருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பிணை மனு யாழ் நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் இன்று புதன்கிழமை இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் படி இரு மாணவர்களும் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதால், இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் அது குறித்து பரிசீலிக்கின்றது. எனவே யாழ் நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்க முடியாதென நீதவான் பீற்றர் போல், நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மே 08 10:17

தூதுவர் றொபேட் ஓ பிளேக் கோட்டாபய ராஜபக்சவை பாராட்டினார்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை அமெரிக்காவின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் றொபேட் ஓ பிளேக் (Robert O. Blake) பாராட்டியுள்ளார். சீனாவை மையப்படுத்திய தெற்காசியாவை நோக்கிய அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையும் இலங்கைக்கான அதன் அர்த்தமும் என்ற தொனிப்பொருளில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்திருந்தபோது தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்காகத் தொழிற்றிறன் உள்ள உயர்மட்டக்குழுவை அமைத்திருந்தார். அவ்வாறான தகுதியுடைய தொழிற்றிறனுள்ள உயர்மட்டக்குழு, தற்போதைய சூழலில் இலங்கைக்கு அவசியமென அவர் வலியுறுத்தினார்.
மே 07 23:45

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளான கொழும்புக் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆராதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காலை ஏழு மணிக்குத் திறக்கப்பட்ட ஆலயம், இரவு ஏழு மணிக்கு மூடப்பட்டது. இலங்கைக் கடற்படையினரால் தற்காலிகமாகப் புனரமைக்கப்பட்டுள்ள அந்தோனியார் ஆலயம், இன்றிலிருந்து தினமும் குறிக்கப்பட்ட சில மணித்தியாலங்கள் ஆராதனைகள் இடம்பெறும் என்றும், பூஜைகள் தற்போதைக்கு இடம்பெறாதெனவும் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஆலயத்திற்கு வரும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படுமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஆலய நிர்வாகம் கோரியுள்ளது.
மே 07 15:22

ஸஹ்ரான் ஹாசீம் தமிழ்நாட்டுக்குத் தப்பிச் சென்றாரா? இலங்கை இராணுவம் கூறுகின்றது

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் இலங்கைத் தலைவர் ஸஹ்ரான் ஹாசீமுக்குச் சொந்தமான, கொழும்பு தெமட்டகொடை மஹவில கார்டினில் அமைந்துள்ள மூன்று அடுக்குமாடிகளைக் கொண்ட ஆடம்பர வீட்டை இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பேற்றுள்ளது. குறித்த வீட்டில் உயிரத்த ஞாயிறன்று பிற்பகல் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, இலங்கைப் பொலிஸார் மூன்று பேர் கொல்லப்பட்டனர். சோதனை நடவடிக்கையின்போதே தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த ஆடம்பர வீட்டை இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தற்காலிகமாக தமது தேவைகளுக்காகப் பயன்படுத்தவுள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளனர்.
மே 06 16:14

யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் தற்காலிகமாகப் பதவி நீக்கம் - மைத்திரியின் செயலகம் கடிதம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, தமிழர் தாயகப் பகுதிகளெங்கும் இராணுவமயமாகக் காட்சியளிக்கின்றது. இவ்வாறானதொரு சூழலில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை இராணுவத்தால் தேடுதல் நடத்தப்பட்டு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், கொழும்பு நிர்வாகத்தினால் தற்காலிகமாகப் பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக உயர்மட்டத் தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளன.
மே 06 15:18

நீர்கொழும்பு வன்முறையில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு - ரணில்

(யாழ்ப்பாணம், ஈழம் ) கொழும்பின் புறநகர் பகுதியான நீர்கொழும்பு பலகத்துறைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையின் போது, பொதுச் சொத்துக்களுக்கும் தனியார் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக நஷ்டஈடு வழங்குமாறும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். சேதவிபரங்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்குமாறு ரணில் விக்கிரமசிங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் தேசிய கொள்கைகள், பொருளாதார நடவடிக்கைகள், மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சின் கீழ் சேதங்கள் பற்றிய மதிப்பீடுகள் செய்யப்படவுள்ளன.
மே 06 15:13

திட்டமிட்டுப் பறிக்கப்படும் தமிழ்நாட்டவர்களின் வேலைவாய்ப்புகள் - தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்

(சென்னை, தமிழ்நாடு) சமீபகாலமாக, தொடர்வண்டித் துறை உள்ளிட்ட பல இந்திய மைய அரசு நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில், தமிழ்நாட்டவர்களுக்குரிய இடங்கள் வடநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2019 மே 3 அன்று, திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறைப் பணிமனையை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தியது. அப்போராட்டத்தையொட்டி, சமூக வலைத்தளங்களில் "தமிழக வேலை தமிழருக்கே" மற்றும் TamilnaduJobsForTamils ஆகிய குறிச்சொற்களை (Hashtag) முன்னிறுத்தித் தொடர்ந்த பரப்புரையின் பயனால் இந்திய அளவில் பேசு பொருளாகியும் உள்ளது. ஏனைய மாநிலங்கள் 1986 முதலே மண்ணின் மைந்தர்களுக்கு வேலையை உறுதிப்படுத்தும் சட்டம் இயற்றியுள்ளார்கள் என்றும் தமிழ்நாடு அரசு இதுவரை ஏன் செய்யவில்லை என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டது.