நிரல்
ஜூன் 07 22:48

வாக்கு மூலங்கள் தவறுகளை வெளிப்படுத்துவதாக மைத்திரி சீற்றம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களை, இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் விசாரணைக்கு அனுமதிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்துள்ளது. அந்தத் தெரிவுக்குழுவின் இரண்டாம் கட்ட விசாணை நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இரண்டு கட்ட விசாணைகளிலும் தற்போது பதவியில் இருக்கும் இலங்கை இராணுவப் புலனாய்வாளர்கள், பாதூகாப்பு உயர் அதிகாரிகள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் வாக்கு மூலங்களை வழங்கியுள்ளனர். மேலும் பல புலனாய்வாளர்கள் வாக்கு மூலமளிக்கவுள்ளனர்.
ஜூன் 06 22:34

மகாநாயக்கத் தேரர்களின் கோரிக்கையை நிராகரிக்கும் முஸ்லிம்கள்

(யாழ்ப்பாணம், ஈழம்) மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளுமாறு பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்குப் பௌத்த மகாநாயக்கத் தேரர்கள் விடுத்துள்ள அழைப்பை பரிசீலனை செய்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றக் கட்டடத்தில் இன்று வியாழக்கிழமை அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களோடும் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படாத உறுப்பினர்கள் மாத்திரமே அமைச்சுப் பொறுப்பை ஏற்க வேண்டுமென மகாநாயக்கத் தேரர்கள் கூறியமை தொடர்பாக ஆராயப்பட்டதென்றும் விரைவில் மகாநாயக்கத் தேரர்களைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஜூன் 06 00:07

முஸ்லிம் உறுப்பினர்களுக்கு மகாநாயகத் தேரர்கள் அழைப்பு!

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் மக்களும் முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளிட்ட அமைச்சர்கள், முஸ்லிம் அதிகாரிகள் ஆகியோர் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் நான்கு நாட்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தினால் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தமது பதவிகளில் இருந்து சென்ற திங்கட்கிழமை விலக நேரிட்டது. ஆனாலும் தற்போது பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்க வேண்டுமென கண்டி மகாநாயக்கத் தேரர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் கேட்டுள்ளதாக அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன.
ஜூன் 05 12:27

தியாகி பொன் சிவகுமாரனின் 45 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் அனுட்டிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத்தமிழ் மக்களது விடுதலைக்காக முதன்முதலில் நஞ்சருந்தி வீரச்சாவடைந்த தியாகி பொன் சிவகுமாரனின் 45 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் உரும்பிராய் பொதுச்சந்தைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள அவரது நினைவுச் சிலைக்கு முன்பாக முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து உரும்பிராய் வேம்படி மயானத்தில் உள்ள நினைவுத் தூபியிலும் அஞ்சலி வணக்கம் இடம்பெற்றது. நினைவேந்தலின் போது முதலில் அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஈகைச்சுடரை தியாகி பொன் சிவகுமாரனின் சகோதரி ஏற்றிவைத்த பின்னர் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜூன் 04 11:10

அமெரிக்கப் பாதுகாப்பு ஒப்பந்தம் - கிளார்க் கூப்பரின் வருகை

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையுடன் அமெரிக்கா செய்யவுள்ள பாதூகாப்பு ஒப்பந்தத்துக்கு எதிராக மகாநாயக்க தேரர்களும் சிங்கள அரசியல்வாதிகள் பலரும் குரல் எழுப்பியுள்ள நிலையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், அரசியல் இராணுவ விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் கிளார்க் கூப்பர் (R. Clarke Cooper) கொழும்புக்கு வருகை தந்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்த்தனவைச் சந்தித்த கிளார்க் கூப்பர், உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைத் தாக்குதல் தொடர்பாகவும் அதன் பின்னரான நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடியதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் திருத்தங்களைச் செய்வது குறித்தும் பேசப்பட்டதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கூறுகின்றது.
ஜூன் 03 14:57

கிஸ்புல்லா, அசாத்சாலி பதவி விலகல் - உண்ணாவிரதம் நிறுத்தம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கொழும்பை மையப்படுத்திய மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதங்களைக் கையளித்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவும் இன்று திங்கட்கிழமை காலையும் மைத்திரியுடன் நடத்தப்பட்ட பேச்சின் பின்னர் தமது பதவி விலகல் கடிதங்களைக் கையளித்தாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதுவரை அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகவில்லை. ஆனாலும் மைத்திரியின் ஒற்றையாட்சி அதிகாரத்தின் கீழ் பதவி வகித்த இரண்டு ஆளுநர்களும் பதவி விலகியுள்ளனர்.
ஜூன் 03 10:39

நான்காவது நாளாக அத்துரலியே ரத்தன தேரரின் போராட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கொழும்பை மையப்படுத்திய மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரைப் பதவியில் இருந்து விலக்கமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் இன்று திங்கட்கிழமை நான்காவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில ஈடுபட்டு வரும் அத்துரலியே ரத்தன தேரரின் உடல் நிலை பலவீனமடைந்துள்ளதாக இன்று அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். கண்டியில் இன்று வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சிங்கள வர்த்தகர்கள் அனைவரும் அத்துரலியே ரத்தன தேரருக்க ஆதரவு வழங்கியுள்ளனர்.
ஜூன் 02 22:25

சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயப் பிரச்சினைக்குத் தீர்வு- நிர்வாகிகள் நியமனம்

(யாழ்ப்பாணம், ஈழம்) யாழ்ப்பாணம் - கொடிகாமம் வரணி வடக்குப் பிரதேசத்தில் உள்ள சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் பல ஆண்டுகளாக இடம்பெற்று வரும் சமூக ஒடுக்குமுறைப் பிரச்சினைகளுக்குத் சுமூகமான முறையில் தீர்வு காண்பது தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அனைத்துச் சமூகங்களும் ஆலயத் திருவிழாக்களில் பங்கெடுத்து தமிழ் மக்கள் என்ற அடையாளத்துடன் செயற்படுவதற்குரிய தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள், ஆலயத் திருவிழாவை நடத்துவது தொடர்பான விடயங்கள் ஆகியவற்றைக் கையாள்வதற்கு ஏற்ற பரிபாலன சபை ஒன்றுக்கான நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உறுப்பினர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
ஜூன் 01 22:26

ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழ் ஊடகத்துறைக்கு எதிரான அடக்குமுறை அச்சுறுத்தல் ஆரம்பிக்கப்பட்டு இன்று 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழநாடு பத்திரிகை காரியாலயம் 1981 ஆம் ஆண்டு யூன் மாதம் 1ஆம் திகதி அதிகாலை எரிக்கப்பட்டமை ஊடகத்துறையின் இருண்ட யுகமாகும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான கோரிக்கைகளை ஈழநாடு பத்திரிகை முதன்மைப்படுத்தி செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தது. இலங்கையில் கொழும்பில் இருந்து பத்திரிகைகள் வெளிவந்த காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகை தமிழர்களின் அரசியல் உரிமை விடயத்தில் மிக முக்கிமான பங்கு வகித்திருந்தது.
ஜூன் 01 22:08

பௌத்த பிக்குமார் உண்ணாவிரதம் - மைத்திரி, ரணில் மௌனம்

(யாழ்ப்பாணம், ஈழம்) அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கொழும்பை மையப்படுத்திய மேல்மாகாண ஆளுநர் அசாத்சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் கிஸ்புல்லா ஆகியோரை உடனடியாகப் பதவி விலக்குமாறு கோரி இலங்கையின் தலைநகர் கொழும்பு, கண்டி ஆகிய பிரதேசங்களில் பௌத்த குருமார் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுழற்சி முறையில் பௌத்த பிக்குமார் கலந்துகொள்கின்றனர். கண்டியில் நேற்று வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், இன்று சனிக்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருக்கின்றார். நூற்றுக்கும் அதிகமான பௌத்த குருமார் தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக சுழற்சி முறையில் பங்குபற்றி வருகின்றனர்.