செய்தி: நிரல்
ஜூலை 28 14:44

வடக்கு தையிட்டியில் மகாபோதி - இராணுவம் ஒத்துழைப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் காணிகள் அபகரிக்கப்பட்டு வடக்கு - கிழக்குத் தாயகப் பகுதிகளில் புத்த விகாரைகள், புத்ததாதுக் கோபுரங்கள், மகாபோதி அமைப்பது போன்ற செயற்பாடுகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் அதுவும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மைத்திரி - ரணில் அரசாங்கம் பதவியேற்ற நாளில் இருந்து கொழும்பை மையப்படுத்திய அதிகாரத்துடன் பௌத்த பிக்குமார் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக முல்லைத்தீவு - நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் திருகோணமலை கன்னியா ஆகிய ஈழத் தமிழர்களின் பாரம்பரிய சைவ ஆலயங்கள் இருந்த இடத்தில் விகாரை புத்தாதுக் கோபுரம் அமைக்கும் செயற்பாடுகளில் முரண்பாடுகள் ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்றிருந்தது.
ஜூலை 28 10:21

மணலாறில் 1036 ஏக்கர் சுவீகரிப்பு - விவசாய நிலங்களை சரணாலயமாக மாற்றும் வனஜீவராசிகள் திணைக்களம்

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், வடக்கு - கிழக்கு மாகாணங்களை பௌதீக ரீதியாக இணைக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நில அபகரிப்பு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முப்பத்து ஐந்து வருடங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கிராமத்திலிருந்து விரட்டப்பட்டிருந்த தமிழ் விவசாயிகள், மீண்டும் 2012 ஆம் ஆண்டு தங்களுடைய கிராமங்களுக்குத் திரும்பி வந்திருந்தபோது, விவசாயம் செய்யக்கூடிய தமது தாழ்நிலப் பகுதிகளை சிங்களக் குடியேற்றவாசிகளிடம் இழந்ததுடன் அதற்கு நீர்ப்பாசனம் செய்யும் நீரேரிகளையும் இழந்துள்ளனர்.
ஜூலை 27 13:39

வவுனியாவில் தங்கவைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அகதிகள் ஒரு தொகுதியினர் சுயவிருப்பில் வெளியேற்றம்

(வவுனியா, ஈழம்) இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான நீர்கொழும்பில் தங்கியிருந்த நிலையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அகதிகளின் ஒரு தொகுதியினர் மீண்டும் நீர்கொழும்பு நலன்புரி முகாமுக்கு திரும்புவதாக புனர்வாழ்வு நிலையம் தெரிவித்துள்ளது. பல்வேறு சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழர் தாயகமான வடமாகாணத்தில் இலங்கை அரசாங்கத்தினால் ஒரு சில தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் ஆதரவுடன் குறித்த வெளிநாட்டு அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
ஜூலை 26 23:19

மயிலிட்டித் துறைமுகத்தில் சிங்கள மீனவர்களின் ஆதிக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை இராணுவத்திடம் இருந்து பொது மக்களிடம் கையளிக்கப்பட்ட யாழ்ப்பாணம் - மயிலிட்டித் துறைமுகம் நூற்று ஐம்பது மில்லியன் ரூபாய்கள் செலவில் புனரமைப்புச் செய்யப்பட்டுகின்றது. ஆனால் இந்தத் துறைமுகத்தின் பயன்பாடுகள் சிங்கள மீனர்வகளுக்கே அதிகமான நன்மைகளை ஏற்படுத்துமென மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கம் கூறுகின்றது. மயிலிட்டிப் பிரதேசத்தில் பொது மக்களுக்குச் சொந்தமான மேலும் பல ஏக்கர் காணிகள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையில் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டாலும் பிரதேச மீனர்கள் அதனை முழுமையாகப் பயன்படுத்த முடியாத ஆபத்தான நிலைமை ஏற்படுமென மீனவர்கள் சங்க உப தலைவர் துரைசிங்கம் வினோத்குமார் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
ஜூலை 26 22:49

ஜப்பான் - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

(வவுனியா, ஈழம்) இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் போட்டிகள் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையுடன் ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இலங்கைப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன, (Ruwan Wijewardene) ஜப்பான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கேஹன்ஜி ஹரதா (Kenji Harada) ஆகிய இருவரும் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனளர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளிடையேயும் தற்போது காணப்படும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் தன்மைகள் மேலும் அதிகரிக்கப்படுமென ருவான் விஜயவர்தன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஜூலை 26 15:13

ஒட்டுசுட்டானில் கல் அகழ்வு- வாவெட்டி மலை சூறையாடல்

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழ் பேசும் மக்களது தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை அரசின் ஆதரவுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் நில அபகரிப்புத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இறுதிப் போரினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றான ஒட்டுசுட்டான் வாவெட்டி மலையில் மேற்கொள்ளப்படும் கல் அகழ்வு நடவடிக்கையினால் குறித்த பகுதி முழுமையாக அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளததாகப் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
ஜூலை 25 23:27

சம்பந்தன் உரையாற்றியபோது எவருமே சபையில் இருக்கவில்லை

(மட்டக்களப்பு, ஈழம்) இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட புதிய அரசியல் யாப்பை உடனடியாகக் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தியும் சர்வதேச நாடுகளுக்கு மைத்திரி- ரணில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கோரியும் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்த சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றபோது, சபையில் மூன்று உறுப்பினர்கள் மாத்திரமே இருந்ததாக நாடாளுமன்றச் செய்தியாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர். இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.45க்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிரேரணையைச் சமர்ப்பித்து சுமார் 72 நிமிடங்கள் உரையாற்றினார். ஆனால் சபையில் அரசாங்கத் தரப்பில் அமைச்சர்கள் உள்ளிட்ட எந்தவொரு உறுப்பினர்களும் இருக்கவேயில்லை.
ஜூலை 25 21:51

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுமா? புதிய வரைபு தயார்

(வவுனியா, ஈழம்) ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயற்படும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் அழுத்தங்களின் பின்னரான சூழலில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் அரசியல் யாப்பில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக வேறு புதிய சட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென்றே அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் புதிய விதிகள் அடங்கிய ஆரம்ப நகல் சட்டமூலம் அமைச்சரவையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படுமென ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. முழுமையான வரைபு விரைவில் பூர்த்தியாகுமென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜூலை 25 15:08

ஐ.நா நிபுணர் சந்திப்பு- செயலாளரைப் பதவி நீக்குமாறு மைத்திரி உத்தரவு

(மட்டக்களப்பு, ஈழம்) கொழும்புக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையிடும் நிபுணர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல், (Clement Nyaletsossi Voule) இலங்கையின் உயர் நீதிமன்ற நீதியரசர், ஜயந்த ஜயசூரிய, நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள ஆகியோரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்த வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளர் அகமட் ஜவாத் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளார். உடனடியாக மேலதிக் செயலாளர் பதவியில் இருந்து விலக்குமாறு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. நீதித்துறை நீதியரசர்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென இலங்கை நாடாளுமன்றச் சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்றுப் புதன்கிழமை உத்தரவிட்டிருந்தார்.
ஜூலை 24 23:24

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி அலைந்த மற்றுமொரு தாயார் முல்லைத்தீவில் உயிரிழப்பு

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கையில் மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், போரின் இறுதி நாட்களில் அரச படையினரிடம் சரணடைந்த ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்ட நிலையிலும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணப்படாத நிலையில் இலங்கைக் கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தனது மகனைத் தேடி அலைந்த மற்றுமொரு தாயார் உயிரிழந்துள்ளார். கடந்த 1 வருடத்துக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் போராட்டத்தில் பங்கேற்று வந்த முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலையைச் சேர்ந்த செபமாலைமுத்து திரேசம்மா என்பவரே மாரடைப்புக் காணமாக இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.