செய்தி: நிரல்
செப். 06 13:30

வரட்சியால் கிளிநொச்சியில் நன்னீர் மீன்பிடித் தொழில் பாதிப்பு

(கிளிநொச்சி, ஈழம் ) வடமாகாணத்தில் தொடர்ச்சியாக நிலவும் கடும் வரட்சியினால் விவசாயச் செய்கைகளும் நன்னீர் மீன்பிடி நடவடிக்கைகளும் பெரும் பாதிப்பை எதிர்நோக்குகின்றன. குறிப்பாகக் கிளிநொச்சியில் நிலவும் கடும் வரட்சியினால் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வரட்சி நிலை தொடருமானால் நன்னீர் மீன்பிடி முற்றாகப் பாதிக்கப்படுமென மீனவர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர். கடந்தகாலங்களில் இவ்வாறு மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு கடும் வரட்சி நிலவுவதால் நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவக்குடும்பங்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மீனவர்கள் ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்டவர்கள்.
செப். 05 22:19

மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சி தேர்தலில் போட்டியிடும்

(வவுனியா, ஈழம்) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடுமென கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். இந்தத் தகவலை கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்கா கொழும்பில் இன்றிரவு ஊடகங்களிடம் வெளியிட்டார். கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அறிவித்தல் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
செப். 05 10:27

வேட்பாளர் தெரிவு குறித்து ரணில் உரையாடல்- கூட்டமைப்போடும் சந்திப்பு

(வவுனியா, ஈழம்) ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிப்பது இல்லையென ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலைதீவுக்குச் சென்ற ரணில் விக்கிரமசிங்க கொழும்புக்குத் திரும்பிய நிலையில் கட்சியின் மூத்த உறுப்பினர்களை நேற்றுப் புதன்கிழமை சந்தித்துப் பேசியுள்ளார். கட்சிக்குள் பிளவுகள் எதுவுமே இல்லை என்றும் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் அறிவிப்பார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் காசிம் நேற்றுப் புதன்கிழமை கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். ஆனால் வேட்பாளர் யார் என்று அவர் கூறவில்லை.
செப். 04 16:20

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு மாதம் ஆறாயிரம்

(வவுனியா, ஈழம்) போரின்போதும் அதன் பின்னரான சூழலிலும் இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இலங்கை ஒற்றையாட்சி அரசின் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் மூலமாக பதவி செய்து ஏற்கனவே இல்லாமைச் சான்றிதழ் (Certificate of absence) பெற்ற உறவினர்களுக்கே முதலில் மாதம் ஆறாயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது. நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மாதம் ஆறாயிரம் ரூபா போதுமானதல்ல என்று பொது அமைப்புகளும் மனித உரிமைச் சட்டத்தரணிகளும் கூறியதுடன் இடைக்கால நிவாரணமாக ஆறாயிரம் ரூபா வழங்கப்படுவதற்கு எதிர்ப்பும் வெளியிட்டிருந்தனர்.
செப். 04 10:26

முள்ளிக்குளம் காணிகள் கையளிக்கப்படவில்லை- பிரஜைகள் குழு

(மன்னார், ஈழம்) தமிழ் பேசும் மக்களின் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களின் இருப்பிடங்கள், அவர்களின் காணிகளிலிருந்து படையினர் வெளியேறுவது தொடர்பாக இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று மன்னார் பிரஜைகள் குழு அதிருப்பதி வெளியிட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் முறையிட்டுள்ளதாக பிரஜைகள் குழு கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளது.
செப். 03 18:26

ஒற்றையாட்சி அரசின் புதிய அரசியல் யாப்பு- மைத்திரி- ரணில் மோதல்

(வவுனியா, ஈழம்) மைத்திரி- ரணில் அரசாங்கம் உருவாக்கிய புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சனைக்குத் தீர்வு இல்லை என்றும் வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சியோடு கூடிய அதிகாரப் பங்கீடுகள் பற்றிய பேச்சுக்களுக்கே இடமில்லை எனவும் தமிழ்த் தரப்பு இலங்கை அரசாங்கத்தின் மீது பகிரங்கமாகவே குற்றம் சுமத்தி வருகின்றது. இந்த நிலையில், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட புதிய அரசியல் யாப்பை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமே நடைமுறைப்படுத்தத் தடையாக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.மறுபுறத்தில் மைத்திரிபால சிறிசேனவே தடுத்ததாக ரணில் விக்கிரமசிங்கவும் அவர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் வடக்குக்-கிழக்குத் தாயகப் பிரதேசத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றது.
செப். 03 15:04

முல்லைத்தீவு, கிளிநொச்சியில் கடும் வரட்சி- குடிநீருக்குத் தட்டுப்பாடு

(கிளிநொச்சி, ஈழம் ) வடமாகாணம் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் நிலவும் கடும் வரட்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கோணாவில், அக்கராயன், காஞ்சிபுரம், தட்டுவன்கொட்டி, பூநகரி, கண்டாவளை, ஆகிய பகுதிகளிலேயே கூடுதலாக வரட்சி ஏற்பட்டுள்ளதாகவும் குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது. வரட்சியால் ஒன்பதாயிரத்தி 933 குடும்பங்களைச் சேர்ந்த 34,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கால் நடைகளும் குடிநீரின்றி தவிப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
செப். 02 23:23

காங்கேசன்துறைமுக அபிவிருத்தி- இந்தியா 45.7 மில்லியன் டொலர் உதவி

(வவுனியா, ஈழம்) இலங்கைத் தீவை நவீனமயப்படுத்துவதே இந்திய மத்திய அரசின் பிரதான நோக்கம் என்று கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் தெரிவித்தார். இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். குறிப்பாகக் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனை அபிவிருத்தி, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயப்படுத்தல், ருஹூனு பல்கலைக்கழகத்தில் பிரமாண்டமான கேட்போர் கூடமொன்றை அமைத்தல், அம்பாந்தோட்டை உள்ளிட்ட தென் பகுதியில் எழுபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மற்றும் விவசாயிகளுக்கு விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தல் இலங்கைத் தீவு முழுவதும் நவீன போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது போன்ற பணிகளை இந்தியா மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
செப். 02 20:51

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாது- உயர் நீதிமன்றம் அறிவிப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வடக்குக்- கிழக்கு உள்ளிட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டிருந்தார். குறிப்பாக மாகாணங்களுக்கான எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியுமா என்று இலங்கை உயர் நீதிமன்றத்திடம் மைத்திரிபால சிறிசேன சட்ட வியாக்கியானம் கோரி விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் மாகாணங்களுக்கான எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படாமல் ஜனாதிபதியால் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும் அறிவிப்பை வெளியிட முடியாதென உயர் நீதிமன்றம் அதிகாரபூர்மாக அறிவித்துள்ளது. மைத்திரிபால சிறிசேனவின் செயலாளர் உதய ஆர் செனவிரட்ன இது தொடர்பாக அறிக்கை ஒன்றை இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளார்.
செப். 01 23:09

தமிழர்களுக்கான வீடமைப்புத் திட்டங்களில் சிங்கள மரபுரிமைகள்

(மட்டக்களப்பு, ஈழம்) எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நியமிக்கப்படுவாரென எதிர்பார்க்கப்படும் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச, வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிங்கள பௌத்த மரபுரிமைகளை வெளிப்படுத்தி வீடமைப்புத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். தனது வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் மூலமாகவே இவ்வாறான சிங்கள மரபுரிமைகளை வெளிப்படுத்தி வருவதாக வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் மக்கள் கூறுகின்றனர். கம்முதாவ செமட்ட செவன என்று சிங்களத்தில் பெயரிடப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டத்தின் மற்றுமொரு பகுதி மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.