நிரல்
ஒக். 09 23:47

வெற்றியடைந்த மறு நாள் சிறையில் உள்ள இராணுவத்தினர் விடுவிக்கப்படுவர்- கோட்டா அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள், இராணுவச் சிப்பாய்கள் அனைவரையும் அடுத்த நாள் விடுதலை செய்யவுள்ளதாக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இன்று புதன்கிழமை தெரிவித்தார். அவருடைய முதலாவது தேர்தல் பிரச்சாரம் அனுராதபுரத்தில் இன்று மாலை இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் இலங்கை இராணுவத்தினரைப் பலப்படுத்தினார். ஆனால் 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசாங்கம், இலங்கை இராணுவத்தை சர்வதேச அரங்கில் காட்டிக்கொடுத்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.
ஒக். 09 10:10

கோட்டாபயவின் குடியுரிமைப் பிரச்சினை- மனுத் தாக்கல் செய்த இருவருக்கும் கொலை மிரட்டல்

(வவுனியா, ஈழம்) இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமைச் சர்ச்சை தொடர்பாக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த சட்டத்தரணி காமினி வியாங்கொட, (Gamini Viyangoda) பேராசிரியர் சந்ரகுப்த தேனுவர (Prof. Chandraguptha Thenuwara) ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜகபக்சவுக்கு எதிராக எழுத்தாணை மனுத்தாக்கல் (Certiorari writ) செய்த இருவருக்கு எதிராகவும் சமூக ஊடகங்கள் மூலமாக அவதூறு விளைவிப்பதாகவும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காமினி வியாங்கொட, சந்ரகுப்த தேனுவர ஆகிய இருவரும் நேரடியாகச் சென்று இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளனர்.
ஒக். 09 06:09

கல்விச் செயற்பாடுகளில் குறைபாடுகள்- மட்டக்களப்பு வாகரை மாணவர்களின் அவலம்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் கல்வி அமைச்சு கிழக்கு மாகாணப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதில் உரிய கவனம் செலுத்துவதில்லை என்று பெற்றோர் குறை கூறுகின்றனர். கட்டட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியத் தேவைகள் இருப்பதாகவும் அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லை எனவும் பெற்றோர் ஆசிரியர்கள் கூறுகின்றனர். கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் வாகரை கதிரவெளி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கையைத் தொடருவதற்கு போதுமான கட்டட வசதிகளின்றிப் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். கடந்த காலத்தில் கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அனைத்து பாடசலைகளின் பௌதீக வளங்கள் போரினால் பாதிக்கப்பட்டன.
ஒக். 08 22:50

பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம்- அரசாங்கம் பதிலில்லை

(முல்லைத்தீவு, ஈழம்) வடமாகாணம் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளவுக்குள் விகாரை அமைத்து சர்ச்சையை ஏற்படுத்திய மேதாலங்கார கீர்த்தி தேரரின் உடலை ஆலயத்தின் தீர்த்தக் கேணியடியில் தகனம் செய்தமை தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் விசேட கூற்று ஒன்றை வெளியிட்டார். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ் கந்தராஜா சபை ஒத்திவைப்புப் பிரேரணை ஒன்றையும் சமர்ப்பித்து விவாதித்தார். ஆனால் அரசாங்கத்தரப்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக மாத்திரமே சபையில் இருந்தார். வேறு எந்த அமைச்சர்களும் சபையில் இருக்கவில்லை. எதிர்த்தரப்பிலும் ஆனந்த அழுத்கமகே என்ற மகிந்த தரப்பு உறுப்பினரைத் தவிர வேறு எவரும் ஆசனங்களில் இருக்கவில்லை.
ஒக். 07 23:01

இரண்டு தமிழர்கள் மூன்று முஸ்லிம் உட்பட 35 பேர் போட்டி

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் முப்பத்து ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். வேட்பு மனுத் தாக்கல் இன்று திங்கட்கிழமை முற்பகல் இடம்பெற்றது. பிரதான கட்சிகளின் வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்து உரையாடினர். மூன்று முஸ்லிம் வேட்பாளர்களும் இரண்டு தமிழ் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மகிந்த ராஜபக்சவின் சகோதரரான சமல் ராஜபக்ச, குமார் வெல்கம, ஜயந்த லியனகே, மஹிபால ஹேரத், பஷர் சேகு தாவூத் ஆகியார் கட்டுப் பணம் செலுத்தினாலும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை.
ஒக். 06 22:44

அதிபர் நியமனத்தில் தமிழ் பேசும் சமூகத்திற்கு அநீதி- பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு

(மட்டக்களப்பு, ஈழம்) கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் சமூகத்திற்கான பாடசாலை அதிபர் நியமனத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் உயர் அதிகாரிகளின் திட்டமிடப்பட்ட செயற்பாடுகளினால் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட அதிபர்களில் ஒருவர் நா.நரேந்திரன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்திருந்தார். அண்மையில் வெளியாகிய கடந்த அதிபர் தரம் 111 க்கான நியமனத்தில் தமிழ் மொழியில் இருப்பவர்கள் ஐநூற்றிப் பத்துப் பேருக்கான நேர்முகப் பரீட்சைக்கான தகுதிகாண் கிடைத்திருந்தது. ஆனால் நூற்றி 60 பேர் தான் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது பெரும் அநீதியென அவர் கூறினார். இதனால் அதிபர் சேவைக்கு எதிர்பார்த்திருந்த பலரும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் கூறினார்.
ஒக். 06 18:36

செஞ்சோலைக் குடும்பங்களை வெளியேறுமாறு உத்தரவு

(கிளிநொச்சி. ஈழம்) வடமாகாணம் கிளிநொச்சி மலையாளபுரம் பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டிருந்த செஞ்சோலையைச் சேர்ந்த ஐம்பத்தி நான்கு குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு கரைச்சிப் பிரதேச செயலகம் அறிவுறுத்தியுள்ளது. இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழ் செயற்படும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் கிளை அலுவலகத்தின் ஆலோசணைக்கு அமைவாகவே கரைச்சிப் பிரதேச செயலகம் உத்தரவிட்டுள்ளது. செஞ்சோலையில் சிறுவர்களாக இருந்து வளர்ந்து பின்னர் குடும்பமாகிய பிள்ளைகளே குறித்த பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டிருந்தனர். ஆனால் 15.10.2019 க்கு முன்னர் குறித்த பிரதேசத்தில் இருந்து வெளியேற வேண்டுமென கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அங்கு வாழும் செஞ்சோலைப் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.
ஒக். 05 13:50

யாழ் கோட்டையில் விகாரை- இலங்கை இராணுவம் முயற்சி

வடக்குக் கிழக்கு தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள் புத்தர் சிலை வைத்தல். விகாரை கட்டுதல் போன்ற செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்களும் சிவில் அமைப்புகளும் இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் காணி அபகரிப்பு, புத்தர் சிலை வைத்தல் போன்ற பௌத்த சிங்கள மயமாக்கல் செயற்பாடுகள் நிறுத்தப்படவில்லையென மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்தநிலையில் யாழ்ப்பாணம் கோட்டையில் நிலை கொண்டிருக்கின்ற இராணுவத்தினர் புதிதாக புத்த விகாரையொன்றை அமைப்பதற்கு இரகசியமாக நடவடிக்கை எடுத்துள்ளமை தெரியவந்துள்ளது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
ஒக். 04 22:40

சவுதி அரேபிய நிதியில் கிளிநொச்சியில் பள்ளிவாசல் திறப்பு

(கிளிநொச்சி. ஈழம்) போரினால் வடக்கு மாகாணத்தில் இருந்து வெளியேறிய முஸ்லிம் மக்கள் மீளவும் குடியமர்ந்து வரும் நிலையில், தமது பிரதேசங்களில் இருந்த பள்ளிவாசல்களையும் செப்பனிட்டு வருகின்றனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சிப் பிரதேசங்களில் குடியமரும் முஸ்லிம் மக்களுக்குரிய உதவிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் கிளிநொச்சி நகரில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்று புதிதாக இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இன்று பகல் 12.30க்கு இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பழய கட்டடத்திற்குப் பின்புறமாக அமைந்துள்ள பள்ளிவாசல்2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் படிப்படியாக அபிவிருத்தி செய்யப்பட்டு இன்று புதிய பள்ளிவாசலாகத் திறக்கப்பட்டுள்ளது.
ஒக். 04 18:24

கோட்டபாயவின் இலங்கைக் குடியுரிமை சட்டவலுவுடையது- கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இலங்கை ஒற்றையாட்சி அரசின் குடியுரிமையைப் பெற்றுக்கொண்ட முறை சட்டத்திற்கு மாறானது எனவும் குடியுரிமையை உடனடியாக ரத்துச் செய்யுமாறு கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது. இலங்கை ஒற்றையாட்சி அரசின் அரசியலமைப்பின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் கையொப்பத்தோடு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் பெறப்பட்ட இலங்கைக் குடியுரிமை சட்டவலுவுடையதெனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்டதும் கொழும்பில் வெடிகொழுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்யப்பட்டது. வீதியால் சென்றவர்களுக்கு இனிப்புப் பண்டங்களும் வழங்கப்பட்டன. நீதிமன்ற வளாகத்தில் பெருந்திரளான சிங்கள மக்கள் கூடியிருந்தனர்