நிரல்
ஜன. 18 16:49

ஈழத்து இசைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் இசைவிழா

(வவுனியா, ஈழம்) இலங்கைத் தலைநகர் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் இசை விழா எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. மூன்று நாட்களும் மாலை ஐந்து மணிக்கு ஆரம்பமாகி இரவு எட்டு மணி வரை விழா நடைபெறவுள்ளது. பிரபலமான ஈழத்துச் சங்கீதக் கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ள இந்த நிகழ்வில் சிறப்பு விருதுகளும் வழங்கப்படவுள்ளன. முதல் நாள் அமர்வுக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் ஆ.குகமூர்த்தி தலைமை தாங்கவுள்ளார். சங்கத்தின் இலக்கியக் குழுச் செயலாளர் மு.சி.ஸ்ரீதயாளன் வரவேற்புரை நிகழ்த்துவார்.
ஜன. 17 23:13

சஜித் பிரேமதாச அணி ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகித் தனித்துப் போட்டியிடவுள்ளது.

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசில் அவ்வப்போது ஆட்சி அமைத்து வரும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக கொழும்பு அரசியல்த் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022 ஆம் ஆண்டுவரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவி குறித்து எதுவுமே பேச வேண்டாமென்று ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக கட்சியின் தலைமை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியிருந்தனர். ஆனாலும் எந்த இணக்கமும் ஏற்படவில்லை.
ஜன. 17 17:12

பொங்கு தமிழ் நிகழ்வின் 19 ஆம் ஆண்டு நிறைவு- யாழ் பல்கலைக்கழக வளாகத்தில்

(யாழ்ப்பாணம், ஈழம்) வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தை அங்கீகரிக்கும் பொங்கு தமிழ் நிகழ்வின் 19 வருட நிறைவு நிகழ்வு யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபிக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வையடுத்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளை முன்வைத்த பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. ஈழத் தமிழ் மக்களின் சுதந்திர தாயகத்துக்கான அடிப்படை அபிலாசைகளையும் நியாயங்களையும் சர்வதேசத்துக்கு ஒரே குரலில் தமிழ் மக்கள் வெளிப்படுத்திய தளமாக பொங்கு தமிழ் நிகழ்வு அமைவதாகக் கூறப்பட்டுள்ளது.
ஜன. 16 22:02

குருநாகல் மருத்துவமனை வைத்தியர் ஷாபி மீது மீண்டும் விசாரணை

(வவுனியா, ஈழம்) இலங்கையில் ஏப்பிரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பத்தில் இருந்து மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சென்ற நவம்பர் மாதம் 16 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் சிங்களக் கடும்போக்கு அமைப்புகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக விசாரணைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த மே மாதம் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்ட குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவப் பிரிவு வைத்தியர் முகமட் ஷரபி சிஹாப்தீன் குற்றமற்றவர் என்று குருநாகல் நீதிமன்றத்தில் பொலிஸாரால் கூறப்பட்டுப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
ஜன. 15 23:19

இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரம் இலங்கையின் மனித உரிமை மீறல் பிரச்சினையாக மாற்றப்படுகிறது

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத் தமிழ் மக்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தை வெறுமனே இலங்கை மக்களின் மனித உரிமை மீறல் பிரச்சினையாகவும், இலங்கையின் ஜனநாயக உரிமைக்கான போராட்டமாகவும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் மாற்றியமைத்து வருகின்றன. கோட்டாபய ராஜபக்ச சென்ற 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அதாவது ராஜபக்ச குடும்பம் மீண்டும் அதிகாரத்துக்கு வந்த பின்னர் இவ்வாறான செயற்பாடுகளில் இந்த நாடுகள் தீவிரமாக ஈடுபடுகின்றன. கோட்டாபய ராஜபக்ச பதவியேற்று இரண்டு வாரங்களில் இந்தியா சென்றிருந்தபோது புதுடில்லியில் வைத்து ஈழத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான பேச்சுக்களைப் பேச வேண்டிய அவசியமேயில்லை என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
ஜன. 14 22:26

காணாமல் போயிருந்த கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு

(மட்டக்களப்பு, ஈழம் ) நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல்போன கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் சின்னத்தம்பி மோகன்ராஜ் இன்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவுப் பகுதியில் மாணவனின் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா மாவட்டம் அக்கரபத்தனை, ஹோல்புறுக் பகுதியைச் சேர்ந்த 21 வயதான மோகன்ராஜ், கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் பிள்ளையார் கோயிலடியில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் இருந்து இரவு உணவு அருந்துவதற்காகச் சென்று கொண்டிருந்தபோதே கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை காணாமல்போயிருந்தார்.
ஜன. 13 15:29

கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனைக் காணவில்லை

(வவுனியா, ஈழம்) கிழக்கு பல்கலைக்கழக இரண்டாம் வருட மருத்துவபீட மாணவன் காணாமல் போயுள்ளதாக மாணவனின் தந்தை அக்கரப்பத்தனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இலங்கையின் மலையகப் பிரதேசமான அக்கரப்பத்தனை கோல்புறுக் பகுதியைச் சேர்ந்த 21 வயதான சின்னத்தம்பி மோகன்ராஜ் என்ற மாணவனே காணாமல் போயுள்ளதாக அவருடைய தந்தை சின்னத்தம்பி முறைப்பாடு செய்துள்ளார். சென்ற பத்தாம் திகதி வெள்ளிக்கிழமை கோயிலுக்குச் செல்வதாக தன்னுடன் கல்விகற்கும் சக மாணவன் ஒருவருக்குக் கூறிவிட்டு பல்கலைக்கழக விடுதியில் இருந்து சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லையென முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
ஜன. 13 11:52

முல்லைத்தீவு உடையார்கட்டுப் பிரதேசத்தில் இருவர் கைது

(முல்லைத்தீவு, ஈழம் ) இலங்கைக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் வடமாகாணம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டுப் பிரதேசத்தில் இரண்டு குடும்பஸ்த்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து சென்ற குற்றத் தடுப்புப் பிரிவின் விசேட பொலிஸ் குழுவினரே இவர்கள் இருவரையும் கைது செய்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் கிழக்கு மாகாணம் திருகோணமலையில் வெடிமருந்துப் பொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பாகவே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு புதுக்குடியிருப்புப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளது.
ஜன. 12 23:05

அத்துரலியே ரத்தன தேரர் சமர்ப்பித்த முஸ்லிம்கள் தொடர்பான பிரேரணைக்குக் கடும் எதிர்ப்பு

(திருகோணமலை, ஈழம்) இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் விவாகம், விவாகரத்துத் தொடர்பான இஸ்லாமிய மார்க்கத்துக்குரிய தனியார் சட்டத்தை நீக்குவது தொடர்பாக மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் இலங்கை நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்பித்துள்ளார். சென்ற எட்டாம் திகதி புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தத் தனிநபர் பிரேரணை முஸ்லிம் மக்களின் பாரம்பரிய அடிப்படை உரிமைகளை மறுதலிப்பதாக அமைந்துள்ளது என்று முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், உலமாக்கள் முஸ்லிம் புத்திஜீவிகள் உள்ளிட்ட அனைவரும் கூறியு்ள்ளனர் கடும் எதிர்ப்பும் வெளியிட்டுள்ளனர்.
ஜன. 12 12:07

யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இணைந்து தேடுதல்

(யாழ்ப்பாணம், ஈழம்) வடமாகாணம் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தில் இலங்கை விசேட அதிரடிப்படையினர், இலங்கைப் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதல் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 தொடக்கம் ஆறு மணி வரை தேடுதல், சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வடக்குக்- கிழக்குப் பிரதேசங்கள் உள்ளிட்ட இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் தேடுதல் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இலங்கைத் தேசிய பாதுகாப்பை மையப்படுத்தியே தேடுதல், சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாக இலங்கைப் பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.