நிரல்
பெப். 03 22:21

இராணுவத்தின் சோதனை நடவடிக்கை, ஏ-9 வீதியில் பயணிகள் அவதி

(வவுனியா, ஈழம்) வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் சோதனை, தேடுதல் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் ஏ-9 வீதியில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளினால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்குவதாக முறையிடப்பட்டுள்ளது. ஆனையிறவு, மாங்குளம், புளியங்குளம், ஓமந்தை ஆகிய பகுதிகளில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுப் பேருந்துகள், பயணிகளிடத்தில் இராணுவத்தினர் சோதனை செய்கின்றனர். பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்தும் பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
பெப். 02 23:14

நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடு- சஜித் தலைமையில் புதிய அரசியல் அணி குறித்த பேச்சுக்கள் தீவிரம்

(கிளிநொச்சி, ஈழம்) நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய அரசியல் அணி வெற்றிபெறுமென்றும் அதற்குரிய வகையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்றும் பங்காளிக் கட்சிகள் தெரிவித்துள்ளன. கொழும்பிலுள்ள சஜித் பிரேமதாஸவின் வாசஸ்தலத்தில் இன்று நண்பகல் இடம்பெற்ற கூட்டத்தில் புதிய அரசியல் கூட்டணிக்கான இறுதிக்கட்ட பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளதாகப் பங்காளிக் கட்சிகள் கூறுகின்றன. புதிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழு கடந்த வாரம் இணக்கம் தெரிவித்திருந்தது. ஆனால் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது முடிவை அறிவிக்கவில்லை.
பெப். 01 22:32

அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தோடு ஒப்பந்தம் கைச்சாத்தாகுமா?

(வவுனியா, ஈழம்) அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபன (Millennium Challenge Cooperation) (MCC) ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இந்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுக்கே இடமில்லையென்று ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களின் போது கூறியிருந்தது. ஆனால் தற்போது அது குறித்த கலந்துரையாடல்கள் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணர்த்தன உள்ளிட்ட வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளோடு இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது. அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இது தொடர்பாக வெளிப்படையாக மறுப்புத் தெரிவித்திருந்தாலும் உயர்மட்ட அதிகாரிகள் குழு ஒன்றை நியமித்திருப்பதாகவே உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
ஜன. 31 22:57

மகிந்த புதுடில்லி செல்வார்- உடன்படிக்கைகள் குறித்து ஆராய்வார்

(வவுனியா, ஈழம்) மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்று முதன் முறையாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஏழாம் திகதி இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாக கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கோட்டாபய ராஜபக்ச சென்ற நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்குச் சென்றிருந்தார். புதுடில்லியில் பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட பலரைச் சந்தித்திருந்தார். இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவும் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். பொருளாதார உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மகிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.
ஜன. 30 10:47

நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் சிங்கள அரசியல் கட்சிகள்

(வவுனியா, ஈழம்) இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடு முயற்சிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்துள்ளனர். எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படுமென அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நேற்று முன்தினம் காலிப் பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கூறியிருந்தார். இதனையடுத்தே அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை எதிர்வரும் ஏப்பிரல் மாதம் இறுதிவாரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாக இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. ஆனாலும் திகதி அறிவிக்கப்படவில்லை.
ஜன. 29 22:33

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய மார்ச் மாதம் கலைப்பார்- அமைச்சர் தினேஸ்

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை நாடாளுமன்றத்தை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி கலைத்துப் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவாரென வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை காலிப் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார். பலமான நாடாளுமன்றம் ஒன்று அவசிமயமாகும். 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றமே தற்போதும் உள்ளது. இதன் காரணத்தால் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியினால் பலமான அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை. எனவே ஏப்பிரல் மாதம் அறுதிப் பொரும்பான்மையுள்ள நாடாளுமன்றத்தை அமைக்கவுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.
ஜன. 28 23:06

சுதந்திர தினத்தைப் பகிஸ்கரிக்கவும்- காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர் சங்கம்

(கிளிநொச்சி, ஈழம்) எதிர்வரும் பெப்ரவரி மாதம் நான்காம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசின் எழுபத்து இரண்டாவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை பகிஸ்கரிக்குமாறு இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இறுதிப் போரில் இலங்கைப் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகள, கணவன்மார்; தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி அரசு இதுவரை கவனம் செலுத்தவில்லை. இந்த நிலையில் புதிதாகப் பதவியேற்றுள்ள கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்தி அரசாங்கம் சுதந்திர தினத்தைக் கொண்டத் தயார்படுத்தி வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
ஜன. 27 22:02

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல்- மக்கள் மத்தியில் குழப்பம்

(மட்டக்களப்பு, ஈழம் ) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மட்டக்களப்பு ஊடக மையத்தைச் சேர்ந்த சில ஊடகவியலாளர்கள் மரண அச்சுறுத்தல்களை எதிர்நோகியுள்ளனர். அலுவலகத்திற்குள் வீசப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்தில் மரண அச்சுறுத்தல் எனக் கூறப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை அனைத்துத் தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்படும் உயிர் அச்சுறுத்தலாகவே கருதுவதாகவும் ஒன்றியம் இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜன. 27 13:02

கிளிநொச்சி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விகாரைக் கோபுரத்தில் கலசம் வைக்கும் நிகழ்வு

(கிளிநொச்சி, ஈழம்) வடமாகாணம் கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட வளாகத்தில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு அதன் கோபுரத்தில் பௌத்த கலசம் வைக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை 6.15க்கு இடம்பெற்றுள்ளது. அனைத்து சமயங்களுக்கும் சம அளவிலான உயரத்தைக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் அமைப்பதற்கு ஒரு ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் பௌத்த விகாரை மிகப் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. சிங்கள மாணவர்களின் எற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கொழும்பில் இருந்து சென்ற பௌத்த குருமாரும் கலந்துகொண்டனர்.
ஜன. 26 21:52

தாயகப் பிரதேசத்தில் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம் உருவாகியது

வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுக்கும் நோக்கில் தமிழ் மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரியார், யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆகியோரின் தலைமையில் குறித்த மன்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கதீற்றல் விதியில் உள்ள யாழ் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் துறைசார்ந்த பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், பொருளியலாளர்கள், கல்வியாளர்கள், தொழில்சார் நிபுணர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.