செய்தி: நிரல்
பெப். 03 22:58

பொலிகண்டி நோக்கி பொத்துவில் பிரதேசத்தில் நடைபவனி ஆரம்பம்

(அம்பாறை, ஈழம் ) ஈழத் தமிழர் தாயகத்தின் பொத்துவில் பிரதேசத்தில் இருந்து பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று புதன்கிழமை ஆரம்பித்துள்ளது. கிழக்கு மாகாணம் அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் ஆரம்பித்த நடைபவனிப் போராட்டம், இன்று திருக்கோவில் பிரதேசத்தில் நிறைவடைந்துள்ளது. நாளை வியாழக்கிழமை அங்கிருந்து மீண்டும் ஆரம்பித்து வவுனியா மன்னார் வழியாக யாழ்ப்பாணம் பொலி கண்டிப் பிரதேசத்தில் நிறைவடையவுள்ளது. தமிழ்த்தேசியக் கட்சிகள், பொது அமைப்புகள், சமயத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த நடைபவனிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெப். 02 22:57

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்திற்கு முஸ்லிம் மக்கள் ஆதரவு

(மட்டக்களப்பு, ஈழம் ) ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான அடக்குமுறை மற்றும் சிங்களக் குடியேற்றங்கள், புத்தர் சிலை வைத்தல் போன்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும் எதிராக பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் நடைபவனிப் போராட்டத்திற்குப் பூரண ஒத்துழைப்பை முஸ்லிம் மக்கள் வழங்க வேண்டுமென அவர் கேட்டுள்ளார். நாளை புதன்கிழமை ஆரம்பித்து எதிர்வரும் ஆறாம் திகதி சனிக்கிழமை வரை போராட்டம் நடைபெறவுள்ளது.
ஜன. 30 14:41

பள்ளிமுனை மேற்கில் இலங்கைக் கடற்படையினர் காணி அபகரிப்பு

(மன்னார், ஈழம் ) மன்னார் மாவட்டத்தில் பள்ளிமுனை மேற்கு தமிழ் மக்களின் வீடுகளையும் காணிகளையும் ஆக்கிரமித்துள்ள கடற்படையினருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குகள் நடைபெறும் நிலையில் பாதிப்படைந்த மக்களுக்கு மாற்றுக்காணிகள் வழங்க மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதிப்பகுதியில் தமிழர் தாயகப் பகுதியில் ஏற்பட்ட கடும் யுத்த நிலை காரணமாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் குடும்பங்கள் தமது இருப்பிடங்களைவிட்டு இடம்பெயர்ந்திருந்தனர்.
ஜன. 20 21:53

நடந்ததென்ன? யாருடைய தவறு? விளக்குகிறார் சுரேஷ்

(வவுனியா, ஈழம்) எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த விவகாரங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கட்சிகள் கடந்த ஒரு மாதமாகக் கலந்துரையாடி ஆவணம் ஒன்றைத் தயாரித்திருந்தன. இந்த ஆவணத்தில் கையொப்பமிடுகின்ற சர்ச்சைகள் மற்றும் தேசியம், சுயநிர்ணய உரிமை போன்ற விடயங்களைச் சில கட்சிகள் கையாண்ட விடயம் தொடர்பாகப் பல்வேறு குற்றச்சாட்டுக்களும் நிலவுகின்றன. இவ்வாறானதொரு நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் நாளேட்டின் இனி - இது இரகசியம் அல்ல என்ற பத்தியில், முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஜன. 20 17:15

குருந்தூர் மலையில் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் புத்தர்சிலை வைத்தார் அமைச்சர் விதுர

(முல்லைத்தீவு, ஈழம் ) தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் சிங்கள மயமாக்கல் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக தமிழ்த்தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில், தமிழர் தாயகமான வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குருந்தூர் மலைப் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புடன் கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் கொழும்பில் இருந்து சென்று புத்தர் சிலையை அமைத்துள்ளதாகவும் பௌத்த அகழ்வு ஆராய்ச்சிப் பணிகள் அங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அமைச்சர்கள் வருவதற்காகக் குறித்த பகுதியில் உள்ள வீதிகள் அவசர அவசரமாக சீரமைக்கப்பட்டதென்றும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஜன. 15 21:38

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறவும் தயாரென ரெலோ எச்சரிக்கை

(மன்னார், ஈழம் ) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ இயக்கம் வெளியேறித் தனித்துச் செயற்படவும் தயாராக இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளன. கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடியும் என்ற எச்சரிக்கையை அதன் தலைவர் இரா. சம்பந்தனுக்குக் கடிதத்தின் மூலம் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமீபகாலச் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்தவொரு நிலையிலேயே, ரெலோ இயக்கம் இந்த முடிவுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிருப்தி பல காலமாக நீடித்திருந்தது எனவும், ஆனாலும் ஒரு சில தினங்களுக்கு முன்னரே எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதென்றும் கூறப்படுகின்றது.
ஜன. 10 15:15

முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம்) யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களினால் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இடிக்கப்பட்டமைக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழக வாசலில் கூடாரம் அமைத்துச் சுழற்சி முறையில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. திட்டமிடப்பட்டு இடிக்கப்பட்ட நினைவுத் தூபி மீளவும் அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியே தொடர் போராட்டம் இடம்பெறுகின்றது. நாளை திங்கட்கிழமை வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் முழுமையான கடையடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் இந்த அழைப்புக்கு தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் ஆதரவு வழங்கியுள்ளன.
ஜன. 06 21:26

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கோட்டாபயவுடன் மூடிய அறைக்குள் உரையாடல்

(வவுனியா, ஈழம்) கொழும்புக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் மூடிய அறை ஒன்றுக்குள் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகக் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருவரும் தனியாகவே பேசியதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன. கோட்டாபய ராஜபக்சவுடன் ஜெய்சங்கர் கலந்துரையாடினாரென ஜனாதிபதி செயலகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் என்னென்ன விடயங்கள் பேசப்பட்டது என்பது தொடர்பாக விரிவாகக் கூறப்படவில்லை. சமகால நிலமைகள் குறித்து இருவரும் பேசியதாக அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. நாளை வியாழக்கிழமை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஜெய்சங்கர் சந்திக்கவுள்ளார்.
ஜன. 04 09:25

இன அழிப்பு விசாரணையைக் கோர தமிழ்க் கட்சிகள் குழு அமைக்க முடிவு

(வவுனியா, ஈழம்) சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இலங்கையைக் கொண்டு செல்ல வேண்டும். அல்லது இலங்கை மீதான ஒரு சிறப்புத் தீர்ப்பாயத்தை உருவாக்க வேண்டுமென்று ஐ.நா செயலாளர் நாயகத்தையும் ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் மற்றும் மனித உரிமைச் சபையிடம் கூட்டாகக் கோரலாமெனத் தமிழ்த்தேசியக் கட்சிகள் அழுத்தம் காரணமாக முதற்கட்ட இணக்கம் கண்டுள்ளன. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளே இவ்வாறு முடிவு செய்துள்ளன. சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இலங்கையைக் கொண்டு செல்வதற்கான அறிக்கை ஒன்றைத் தயாரிப்பதற்கும் இந்தக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
டிச. 27 21:13

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொரோனா

(வவுனியா, ஈழம்) கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே உரிய அதிகாரிகள் மற்றும் தமிழ்க் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தும் முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படவில்லையெனவும் இந்த அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா தொற்றுக்கு இலக்காகலாமெனக் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரும் அறிக்கை ஒன்றின் மூலம் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் எந்தவொரு தமிழ்க் கட்சி உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்கவேயில்லையென உறவினர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.