செய்தி: நிரல்
மார்ச் 16 19:53

தலைமன்னாரில் ரயில்-பஸ் கோரவிபத்து, பாடசாலைச் சிறுவன் பலி, 15 மாணவர் படுகாயம்

(மன்னார், ஈழம்) வடமாகாணம் மன்னார் மாவட்டம் தலைமன்னார் பியர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இரண்டு மனியளவில் நிகழ்ந்த பாரிய ரயில் பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் 15 பேர் உள்ளடங்கலாக இருபத்துமூவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மன்னார் நகரில் இருந்து பயணிகளுடன் தலைமன்னார் சென்ற தனியார் பஸ் வண்டி கொழும்பிலிருந்து தலைமன்னார் பியர் சென்ற பயணிகள் ரயிலுடன் தலைமன்னார் பியர் ரயில்வே நிலையத்துக்குச் சுமார் 150 மீற்றர் அண்மையாகவுள்ள கடவையில் மோதியது. பதினான்கு வயதுடைய தலைமன்னார் பியரைச் சேர்ந்த பி. தரூண் எனும் சிறுவன் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார்.
மார்ச் 15 12:33

மனித உரிமைப் பேரவையில் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும்

(வவுனியா, ஈழம்) ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக மேற்கொள்ளப்படும் தீர்மானத்திற்கு இந்திய மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்காகத் தனது முழுமையான ஆதரவை வழங்க முன்வரவேண்டுமென இந்திய தூதுவர் கோபால் பாக்லேயிடம் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை முன்னாள் வடமாகாண சபையின் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு கூறினார்.
மார்ச் 15 12:33

காணி ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதால் அலுவலகம் செயலிழந்தது

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் காணி சீர்திருத்த ஆணைக்குழு வட மாகாணத்தில் உள்ள தனது காணிகள் தொடர்பான கோவைகளை கடந்த திங்கள் யாழ் செயலகத்தில் இருந்து அனுராதபுரம் மாவட்டச் செயலகத்துக்கு எடுத்துச் சென்ற நிலையில், அலுவலகத்தின் செயற்பாடுகள் அனைத்தும் செயலிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. கொழும்பு பத்தரமுல்லையைத் தலைமையகமாகக் கொண்டுள்ள இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வட மாகாணத்திற்கான காரியாலயம் யாழ்ப்பாணத்தில் கடந்த 2012 ஜூன் மாதம் 18 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு யாழ் மாவட்ட செயலகத்தில் அது இயங்கி வருகிறது.
மார்ச் 13 20:37

ஆனையிறவில் உப்பு உற்பத்தி வீழ்ச்சி- கொரோனா நோய்ப்பரவல் காரணம்

(கிளிநொச்சி, ஈழம்) வட மாகாணம் கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனையிறவு உப்பளத்தில் கடந்த வருட உப்பு உற்பத்தி வீழ்ச்சியடைந்ததால், யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மற்றும் இலங்கைத் தீவின் பல பகுதிகளில் உப்புக்குத் தட்டுப்பாடு நிலை ஏற்பட்டதாக மாந்தை உப்பு நிறுவனத்தின் முகாமைத்துவ அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். கடந்த வருடம் நிலவிய கால நிலை மாற்றத்தினால் ஏற்பட்ட திடீர் மழை மற்றும் கொரோனா தொற்று அச்சத்தினால் ஆனையிறவு உப்பள ஊழியர்கள் பலர் பணிக்குச் சமூகமளிக்காமை ஆகிய காரணங்களினாலேயே உப்பு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டதாக மேற்படி உப்பள முகாமைத்துவ அதிகாரி கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.
மார்ச் 12 11:19

மன்னார் கூட்டுறவுச் செயலகக் கட்டடம் இடிபாடுகளுடன் காணப்படுவதாக முறைப்பாடு

(மன்னார், ஈழம்) வட மாகாணம் மன்னார் நகரின் நுழைவாயிலில் அமைந்துள்ள மாவட்டக் கூட்டுறவுச் செயலகக் கட்டிடம் கடந்த இரண்டு வருடங்களாக இடிபாடுகளுடன் காணப்படும் நிலையில் யாழ்ப்பாணத்தைத் தலைமையகமாக கொண்டுள்ள மாகாண சபை நிர்வாகம் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விசனம் தெரிவிக்கப்படுகிறது. கடந்த நான்காம் திகதி வியாழன் வட மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சாள்ஸ் தலைமையில் நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இது குறித்து ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மார்ச் 11 14:30

திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரி நிகழ்வுகள்- கொரோனா பாதுகாப்பு எச்சரிக்கை

(மன்னார், ஈழம்) மன்னாரில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இன்று வியாழன் மகா சிவராத்திரித் தினத்தை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் கடுமையான சுகாதார நடவடிக்கைகளுக்கு பக்தர்கள் உட்படுத்தப்படுவார்கள் எனச் சுகாதார அதிகாரிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். மேலும் சிவராத்திரித் தினத்தை முன்னிட்டு மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் நடைபெறும் பல அன்னதான நிகழ்வுகள் இம்முறை மட்டுப்படுத்தப்பட்டு இரண்டு மடங்களில் மட்டுமே அன்னதான நிகழ்வுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என மன்னார் சுகாதார அதிகாரிகள் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்
மார்ச் 10 09:28

மன்னார் மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது- பலருக்குக் கொரோனா

(மன்னார், ஈழம்) மன்னார் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் சுகாதார அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பஸார் பகுதியில் உள்ள மீன் சந்தை நேற்றுச் செவ்வாய் காலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மன்னார் பஸார் பகுதியில் உள்ள குறித்த மீன் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் சௌத்பார் சாந்திபுரத்தைச் சேர்ந்த 51 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 5ம் திகதி இரவு மன்னாரில் புகையிரதம் மோதி உயிரிழந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த அவரின் சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பீ. சீ. ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.
மார்ச் 09 13:52

சடலங்களை அடக்கம் செய்வதற்கு எதிராக ஏழாவது நாளாகவும் போராட்டம்

(கிளிநொச்சி, ஈழம்) கொரோனாவினால் மரணமடைபவர்களை கிளிநொச்சி இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை ஏழாவது நாளாக முன்னெடுக்கப்படுவதாக முழங்காவில் பங்குத் தந்தை வண.பிதா மடுத்தீன் பத்திநாதன் சற்று முன்னர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் கொரோனாச் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் அதன் தீர்மானத்தை ரத்துச் செய்து உத்தியோகபூர்வத் தகவலை வெளியிடும் வரை இரணைதீவு மக்கள் தமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனப் பங்குத்தந்தை வண.பிதா மடுத்தீன் பத்திநாதன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
மார்ச் 08 19:17

முஸ்லிம்களின் மதராஸா நிலையங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்

(கிளிநொச்சி, ஈழம்) தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் பொதுபல சேன இயக்கத்தைத் தடை செய்ய முடியாதென ராஜபக்ச அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் அறிவித்துள்ளார். பௌத்த பிக்குமாரை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் பொதுபலசேன இயக்கத்தைத் தடை செய்யுமாறு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரைக்கு அமைவாகவே பொதுபல சேனவைத் தடை செய்ய முடியாதென அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மார்ச் 07 13:24

உயிரிழந்த முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் இஸ்லாமிய முறைப்படி அடக்கம்

(மட்டக்களப்பு, ஈழம் ) பலத்த சர்ச்சைகள், பல இழுபறிகள் மற்றும் தொடர் போராட்டங்கள் நிபுணர்கள் பலரின் வாதப்பிரதி வாதங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்ந முஸ்லிம் ஜகுஸாக்கள் கிழக்கு மாகாணம் ஓட்டமாவடியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவின் காகித நகர் எனும் கிராமசேவையாளர் பிரிவில் மஜ்மா நகர் எனும் பகுதியில் உள்ள சூடுபத்தின சேனை எனும் பகுதியிலேயே மேற்படி ஐனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டதாகக் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.