செய்தி: நிரல்
ஏப். 07 15:52

பாரம்பரியக் காணிகளை இலங்கை இராணுவம் தொடர்ந்து அபகரிக்க முடியாது- சிவாஜிலிங்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) யாழ்ப்பாணம் மிருசுவில் எழுதுமட்டுவாழ் பகுதியில் இலங்கை இராணுவம் நிலைகொண்டுள்ள தனியார் காணியை நிரந்தரமாகவே சூறையாடும் நோக்கில் கடந்த திங்கள் மேற்கொள்ளப்பட்ட நில அளவை அப்பகுதி மக்களின் எதிர்ப்பு போராட்டத்தினால் கைவிடப்பட்டதாகவும் மீண்டும் அப்பகுதியை நில அளவை செய்ய இராணுவம் முற்பட்டால் மக்கள் அதற்கும் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பர் என யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். தமிழர்களின் பாரம்பரியக் காணிளை இராணுவம் அபகரிக்க அனுமதிக்க முடியாதென்றும் அவர் கூறினார்.
ஏப். 06 09:06

வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஆயர் இராஜப்பு ஜோசப்பின் இறுதி நிகழ்வில் பங்குபற்றவில்லை

(மன்னார், ஈழம் ) ஆயர் இராயப்பு ஜோசப் தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத ஒருவர் என்றும் தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஆயருடைய பணிகளைத் தொடர்வோம் எனவும் கூறிச் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். சென் செபஸ்தியார் பேராலயத்தில் ஆயர் இராஜப்பு யோசப்பின் புகழுடல் அடக்கம் செய்யப்பட்ட சமாதியில் நின்று சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது. வேலன் சுவாமிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் இவ்வாறு சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இன அழிப்பு என்பதை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தி ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அகிம்சை வழியில் முன்னெடுத்த ஆயர் இராஜப்பு ஜோசப் நினைவாக அவருடைய உருவச் சிலை ஒன்றும் மன்னார் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஏப். 04 23:01

மன்னார் இளைஞர்கள் இருவர் இராமேஸ்வரத்தில் கைது

(மன்னார், ஈழம் ) இலங்கையில் இருந்து பாக்கு நீரிணையூடாக இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனைக் கரையைச் சென்றடைந்த இரண்டு தமிழ் இளைஞர்களை இராமேஸ்வரம் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில் இலங்கைப் பொலிஸாரும் தேசிய புலனாய்வு பிரிவினரும் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கின் அடம்பன் பகுதியில் குறித்த இளைஞர்கள் தொடர்பில் விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்துள்ளதாக அடம்பன் பொலிஸ் வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தன.
ஏப். 04 20:48

மன்னார் ஒல்லாந்தர் கோட்டையைச் சூழவுள்ள மக்களை வெளியேற்ற உத்தரவு

(மன்னார், ஈழம் ) வட மாகாணம் மன்னார் நகரில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டையைச் சூழவுள்ள பகுதியில் குடியிருக்கும் பொது மக்களையும் அப்பகுதியில் நிலை கொண்டுள்ள பொலிஸாரையும் வெளியேற்றி அங்கு அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலையும் அகற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கைத் தொல் பொருட்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவபாலன் குணபாலன் கூர்மைச் செய்தித்தளத்திற்கு தெரிவித்தார்.
ஏப். 03 10:06

ஆயர் இராஜப்பு ஜோசப்பின் புகழுடல் செபஸ்தியார் பேராலயத்தில் திங்கட்கிழமை நல்லடக்கம்

(மன்னார், ஈழம் ) வட மாகாணம் மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் அவர்களின் இறுதி சடங்கு நாளை மறுதினம் திங்கட்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறவுள்ளது. திருப்பலியுடன் ஆரம்பித்து அனைத்து ஆராதனைகளின் நிறைவில் ஆயரின் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி எப். எல். இமானுவேல் பெர்னாண்டோ கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். கொழும்பில் உள்ள இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்க்கம் ரஞ்ஜித் உட்பட இலங்கைத்தீவின் அனைத்து மறை மாவட்டங்களின் ஆயர்களும் கலந்துகொள்வார்கள் என்றும் ஆயர் இமானுவல் கூறினார்.
ஏப். 01 20:43

புகழுடல் அடக்கம் செய்யும் நாளில் நாடளாவிய துக்க தினம்- அடைக்கலநாதன் கோரிக்கை

(யாழ்ப்பாணம், ஈழம்) மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் இன்று மரணமடைந்த நிலையில் திங்கள் மாலை அன்னாரின் உடல் மன்னாரில் நல்லடக்கம் செய்யப்படுவதினால் அன்று நாடளாவிய துக்க தினமாக இலங்கை அரசாங்கம் பிரகடனப்படுத்த வேண்டும் எனும் கோரிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் முன்வைத்துள்ளதாக வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். இது தொடர்பான அவசரக் கடிதமொன்றை இலங்கை பிரதமருக்கு இன்று பிற்பகல் மின் அஞ்சல் மூலமாகவும் தொலைநகல் மூலமாகவும் தான் அனுப்பி வைத்துள்ளதாகவும் செல்வம் அடைக்கலநாநன் கூர்மைக்குத் தெரிவித்தார்.
ஏப். 01 17:40

ஆயர் இராயப்பு ஜோசப் காலமானார்- பெருமளவான மக்கள் சமய வேறுபாடின்றி கண்ணீர் வணக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழ் இன அழிப்பை சர்வதேசத்துக்குப் பகிரங்கமாகவும் துணிவோடும் வெளிப்படுத்திய இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் யாழ்ப்பாணம் திருச்சிலுவை கன்னியர்மருதமடு வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை காலை 6.30க்குக் காலமானார். தனது 80 ஆவது வயதில் காலமான ஆயர், மன்னார் மறை மாவட்டத்தின் இரண்டாவது ஆயராக 1992ம் ஆண்டு ஜூலை மாதம் ஆறாம் திகதி பாப்பரசரினால் நியமனம் செய்யப்பட்டார். மன்னார் மறை மாவட்ட ஆயராகத் தொடர்சியாக 24 வருடங்கள் பணியாற்றிய நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி தனது ஆயர் பணியிலிருந்து இவர் இளைப்பாறினார்.
மார்ச் 31 22:58

வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

(முல்லைத்தீவு, ஈழம் ) இலங்கை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ரணில்- மைத்திரி அரசாங்கத்தில் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போதைய ராஜபக்ச அரசாங்கத்தினால் கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கக்கோரி திங்கட்கிழமை காலை முல்லைத்தீவு மாவட்டத்திலும் மன்னார் மாவட்டத்திலும் குறித்த வீட்டுத்திட்டப் பயனாளிகளான தமிழ் மக்களினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் நகரில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தின் முன் நூற்றுக்கணக்கில் ஒன்று திரண்ட வீட்டுத்திட்ட பயனாளிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
மார்ச் 30 09:07

சுகாதாரத் தொண்டர்கள் 30 நாட்களாகத் தொடர் போராட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம்) வட மாகாணம் யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கடந்த 30 நாட்களாக சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் குறித்த போராட்டம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநரோ அல்லது மாகாண சுகாதார அமைச்சு சார்ந்த உயர் அதிகாரிகளோ உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்காததினால், சுகாதாரத் தொண்டர்கள் தொடர்ச்சியாக தமது போராட்டத்தைப் பல்வேறு கஸ்டங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர்.
மார்ச் 29 22:37

திருநெல்வேலி பாற்பண்ணைக் கிராமம் முடக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகம் வடக்கின் யாழ் மாநகரில் கொரோனா தொற்று மிக தீவிரமாகப் பரவி வரும் நிலையில் திருநெல்வேலி பாற்பண்ணைக் கிராமம் அபாயப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன் யாழ் கல்வி வலயத்திற்குள் உள்ள 104 பாடசாலைகளையும் இன்று திங்கள் தொடக்கம் ஒரு வாரத்திற்கு மூடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. யாழ் நகரில் நேற்றும் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நோய்த் தொற்று பரவாதிருக்க நகரின் வேறு சில பகுதிகளையும் இன்று திங்கள் கிழமை முடக்கும் அபாய நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.