நிரல்
ஓகஸ்ட் 18 21:48

திருச்சி சிறப்பு முகாமில் ஈழஅகதிகள் 15 பேர் தற்கொலை முயற்சி

(மன்னார், ஈழம்) இந்தியாவின் தமிழ்நாட்டு மாநிலத்தின் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனிச்சிறைக்சாலை எனப்படும் சிறப்பு முகாமில் தங்கியுள்ள ஈழ அகதிகள் 15 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். தூக்க மாத்திரை சாப்பிட்டும் வயிற்றை கத்தியால் கீறியும் தற்கொலை செய்ய முற்பட்டதால் சிறப்பு முகாமில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 15 பேரும் தற்போது திருச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வயிற்றில் கத்தியால் கீறியவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொவிட்-19 நோய்ப்பரவலைக் காரணம் கூறி தம்மீதான விசாரணைகள் இடம் பெறுவதில்லை என்றும் இதனால் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தித் தொடர் போராட்டங்களை ஈழ அகதிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
ஓகஸ்ட் 17 21:40

வேகமாகப் பரவும் கொவிட் 19- இயல்பாகவே முடங்கிய கொழும்பு

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் கொவிட் நோய்ப்பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் தாங்களாகவே வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். பொது முடக்கம் இல்லாதபோதும் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு நகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது. கோட்டை. புறக்கோட்டை வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. போக்குவரத்துச் சேவைகளும் செயலிழந்துள்ளன. நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு வரையான 24 மணி நேரத்தில் கொவிட் தொற்றால் 171 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஓகஸ்ட் 17 21:21

யாழ் பொன்னாலை மேற்கில் படையினர் மக்கள் மீது தாக்குதல்

(யாழ்ப்பாணம், ஈழம்) வடமாகாணம் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பொன்னாலைப் பிரதேசத்தின் மேற்கில், மக்களின் வீடுகளுக்குள் புகுந்து இலங்கை ஒற்றையாட்சி அரசின் படையினர் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதல் மற்றும் மக்களை அச்சுறுத்தியமை தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓகஸ்ட் 16 21:25

அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் சுமந்திரனுடன் பேச்சு நடத்திய பீரிஸ், வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்பு

(மன்னார், ஈழம்) இலங்கை தீவின் அனைத்துப் பகுதிகளும் கொவிட்-19 நோய் தொற்றினால் ஏற்படும் இறப்புகள் மற்றும் டெல்டா பிறழ்வு ஆகியவற்றினால் பொது மக்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வரும் நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்களின் பதவிகளில் மாற்றங்களைச் செய்துள்ளது. இன்று திங்கட்கிழமை 16ஆம் திகதி அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. மூத்த அமைச்சர்களான பேராசிரியர் ஜீ. எல் . பீரிஸ், ஹெகலிய ரம்புக்வெல, தினேஷ் குணவர்த்தன, பவித்திரா வன்னியராச்சி, டளஸ் அழகபெரும, காமினி லொகுகே மற்றும் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
ஓகஸ்ட் 15 23:11

திங்கட்கிழமை முதல் இரவுநேர ஊரடங்குச் சட்டம் அமுல்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் கொவிட் 19 நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாளை திங்கட்கிழமை இரவு 10 மணி முதல் அதிகாலை நான்கு மணிவரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. முழு நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கை மருத்துவர் சங்கம் உள்ளிட்ட சுகாதார சேவைகள் சங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தவொரு நிலையில், இரவு நேர ஊரடங்குச் சட்டம் மாத்திரமே அமுல்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. இதேவேளை, கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாட அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டாபயவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஓகஸ்ட் 14 22:07

கொவிட்-19 மரணம் நாளுக்கு நாள் அதிகரிப்பு- இரண்டு நாட்களில் 315 பேர் உயிரிழப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் கொரோனா தொற்றால் கடந்த இரண்டு நாட்களில் 315 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை 160 பேரும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை 155 பேரும் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, கொவிட் நோய்ப் பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொது முடக்கம் அல்லது ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். இலங்கை மருத்துவர் சங்கம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், தாதியர் சங்கம் உள்ளிட்ட சுகாதாரச் சேவைகள் சங்கம் நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதியுடன் சந்தித்துப் பேசியிருந்தது. இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.
ஓகஸ்ட் 13 08:26

ஏழாவது சந்தேக நபராக முன்னாள் அமைச்சர் றிஸாத் பதியூதீன்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு சினமன்ட் கிரான்ட் ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பாக கொழும்பு கோட்டை நீதிமன்றில் ஏலவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் ஏழாவது சந்தேக நபராக முன்னாள் அமைச்சர் றிஸாத் பதியூதீன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கொழும்பு கோட்டை நீதிமன்றுக்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் (சீ.ஐ.டீ ) தெரிவித்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்பிரல் மாதம் 24ஆம் திகதி அதிகாலை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கொழும்பில் வைத்து முன்னாள் அமைச்சர் றிஸாத் பதியூதீனும் அவர் சகோதரர் றியாஜ் பதியூதீனும் கைது செய்யப்பட்டனர்.
ஓகஸ்ட் 12 21:44

வேமாகப் பரவும் கொவிட். நேற்று மட்டும் 156 பேர் மரணம்- முழுமையாக முடக்குமாறு கோரிக்கை

(மன்னார், ஈழம்) இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் வேகமாகப் பரவும் கொவிட் நோய் தொற்றைக் கட்டுப்படுத்தி தினமும் நிகழும் பொது மக்களின் உயிரிழப்பைத் தடுப்பதற்கு கடுமையான பயணக்கட்டுப்பாடு அல்லது முழுமையான ஊரடங்கு பிரகடனத்தை உடன் அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் பல தரப்பினரும் தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலையில் இது தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் அலட்சியப் போக்கில் செயல்படுவதாக கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கம் நாட்டை முழுமையாக முடக்காவிட்டால் தாம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிடும் என இலங்கைத் தாதிமார் சங்கத்தினர் இலங்கை அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் கொவிட் வைரஸால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஓகஸ்ட் 11 23:06

கோட்டாபய ராஜபக்சவைப் பதவியில் அமர்த்திய ஆனந்த தேரர் ஆட்சி மாற்றத்தைக் கோருகிறார்

(மன்னார், ஈழம்) கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்குப் பாடுபட்டவரும் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர், ஆட்சி மாற்றம் அவசியமென வலியுறுத்தியுள்ளார். இலங்கை மக்கள் ராஜபக்சவின் ஆட்சியின் வெறுப்படைந்துள்ளதால், ஆட்சி விரைவில் கவிழ்க்கப்படுமென்றும் தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், ராஜபக்ச குடும்பத்தைக் கடுமையாக விமர்சித்த முருத்தெட்வே ஆனந்த தேரர், அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாகவும் கண்டித்தார்.
ஓகஸ்ட் 11 21:01

சுமந்திரன்-பீரிஸ் பேச்சுவார்த்தையில் அமெரிக்க-பசில் நகர்வு என்ற குட்டு மேலும் வெளிக்கிறது

(யாழ்ப்பாணம், ஈழம்) அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் இலங்கை ஒற்றையாட்சி ராஜபக்ஷ அரசின் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரீசுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி ம. ஆ. சுமந்திரனின் சந்திப்பு கடந்த புதன்கிழமை (04 ஓகஸ்ட்) நடைபெற்றது என்ற விடயத்தை சுமந்திரனுடன் நெருங்கிய உறவைப் பேணும் மூத்த ஊடகவியலாளர் ந. வித்தியாதரன் வெளியிடும் காலைக்கதிர் நாளேட்டில் ''இனி இது இரகசியம் அல்ல'' என்று மின்னல் எனும் பெயரில் அவரே எழுதும் பத்தியில் புதன்கிழமையன்று (11 ஓகஸ்ட்) குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பக்கம் இந்த நகர்வு என்றால் பேரம்பேசல் எனும் நாணயத்தின் மறுபக்கம் என்ன என்ற புவிசார் அரசியற் கேள்விக்கான பதில்களும் ஊகங்களும் வலுத்துள்ளன.