செய்தி: நிரல்
டிச. 14 23:24

பொருட்கள் இறக்குமதி செய்யத் தற்காலிகத் தடை- பசில் அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கை மத்திய வங்கியில் அமெரிக்க டொலரின் இருப்புக் குறைவடைந்ததால், பொருட்கள் இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்துமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார். அந்நியச் செலவாணி 1.5.பில்லியன் டொலர்களாகக் குறைவடைந்ததால், அத்தியாவசியப் பொருட்களை அடுத்த இரண்டு வாரங்களுக்கு மாத்திரமே இறக்குமதி செய்ய முடியுமென இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் விஜேவர்த்தன கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கூறியிருந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் பசில் ராஜபக்ச இது பற்றிப் பிரஸ்தாபித்திருந்தார்.
டிச. 13 22:53

அரசாங்கத்தின் மீது பேராயர் பகிரங்கக் குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் எந்தவொரு முறையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் காரசாரமான தொனியில் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகளும் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் பொறுப்பான பதில் வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்ததாகவும் ஆனாலும் எதுவுமே நடக்கவில்லை என்றும் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் கூறினார்.
டிச. 10 19:45

அந்நியச் செலவாணி 1.5 பில்லியன் டொலர்களாகக் குறைந்தது

(யாழ்ப்பாணம், ஈழம்) தற்போதைய சூழலில் கையில் இருக்கும் இலங்கையின் அந்நியச் செலவாணி 1.5 பில்லியன் டொலர்களாகக் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டப்ளியூ.ஏ.விஜேவர்தன தெரிவித்துள்ளார். இன்னமும் இரண்டு வாரங்களுக்குப் போதுமான அந்நியச் செலவாணியே கையிருப்பில் உள்ளதென்றும் விஜேவர்த்தன கூறியுள்ளார். மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்து தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.
டிச. 08 14:22

பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் உள்ள பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று புதன்கிழமை நடைபெற்றது. உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் மற்றும் கொவிட் தொற்றுக் காரணமாக பேசாலை ஆலயத்தின் வருடாந்த பெருவிழா கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாத நிலையில் குறித்த பெருவிழா இன்று புதன்கிழமை மிக விமர்சையாக நடைபெற்றது. மேலும் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னான்டோ சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டார்.
டிச. 07 19:03

ரணில் கேள்வி- பசில் திடீரென டில்லிக்குச் சென்றது ஏன்?

(யாழ்ப்பாணம், ஈழம்) நிதியமைச்சர் பசில் ராஜபக்ச திடீரென இந்தியாவுக்குச் சென்றமைக்கான காரணம் என்னவென்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை வரவு - செலவுத் திட்டக் குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கேள்வி தொடுத்தார். வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, எந்தவொரு நிதி அமைச்சரும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதில்லை. ஆனால் இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முறையாக அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவுக்குச் சென்றிருக்கிறார்.
டிச. 06 10:08

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி

(வவுனியா, ஈழம்) வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்த்து அரசாங்கத்தின் பெரும்பான்மையை நிரூபிக்கப் பிரதமர் மகிந்த ராஜபக்ச கடும் முயற்சி எடுத்து வருவதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. விமல் வீரவன்ச, தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட ஆறு பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க, உள்ளிட்ட சில உறுப்பினர்களுடன் விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
டிச. 05 22:02

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்- இளைஞன் கைது

(மன்னார், ஈழம்) இலங்கைத்தீவில் கடந்த 2019ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நிகழ்ந்த தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கடந்த வியாழனன்று இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல ஹிங்குல்ல பகுதியைச் சேர்ந்த 25 வயது நபரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றது.
டிச. 05 11:07

முல்லைத்தீவுக் கடலில் மூன்று இளைஞர்கள் பலி

(முல்லைத்தீவு) வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு கடற்கரைக்கு வாகனம் ஒன்றில் வந்த மூன்று இளைஞர்கள் கடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென கடலில் மூழ்கியுள்ளனர். குறித்த மூவரையும் நீண்ட நேரமாக காணாத நிலையில் அவர்களுடன் கடலுக்குச் சென்ற புதுக்குடியிருப்பை சேர்ந்த யுவதி முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார், கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து அவர்களை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
டிச. 04 19:58

எயிட்ஸ் நோய் பரவும் ஆபத்துள்ளதாக எச்சரிக்கை

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திற்கும் இந்தியா தமிழ் நாட்டு பகுதிக்கும் இடையில் சட்டவிரோதக் கடல் வழி மூலமாக அடிக்கடி இந்தியாவிற்கு பயணிப்பவர்களினால் எச்.ஐ.வி நோய்த் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பாலியல் நோய் மற்றும் எச்.ஐ.வி விசேட வைத்திய அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை 2ஆம் திகதி நடைபெற்ற விசேட விழிப்புணர்வுக் கருத்தரங்கில் கலந்துகொண்டதன் பின் ஊடகங்களுக்கு தகவல் வழங்கியவேளையே அவர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.
டிச. 03 20:24

அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராகக் கையெழுத்துப் போராட்டம்

(மன்னார், ஈழம்) இந்திய மீனவர்களின் இழுவை படகுகள் இலங்கை கடல் பரப்பில் அத்துமீறி நுழைவதற்கு எதிராக ஒரு இலட்சம் கையெழுத்துகளை சேகரிக்கும் நடவடிக்கைகள் நேற்று வியாழக்கிழமை தொடக்கம் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அந்தோணி பெனடிட் குரூஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். வட மாகாணம் கடற்றொழில் இணையம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் அனுசரணையில் திரட்டப்படும் மேற்படி கையெழுத்துகள் கொண்ட மகஜர்கள் இலங்கை ஜனாதிபதி, கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மற்றும் சட்ட மா அதிபர் உட்பட அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அந்தோணி பெனடிட் குரூஸ் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.