செய்தி: நிரல்
ஏப். 21 21:05

கட்சித் தலைவர்கள் கூட்டம்- நிறைவேற்று அதிகாரத்தை ரத்துச் செய்வது குறித்து ஆராய்வு

(வவுனியா, ஈழம்) கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலக வேண்டுமென வற்புறுத்தி, கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தலைமையில் இடம்பெற்றது. தற்போதைய பொருளாதார மற்றும் விலைவாசி உயர்வு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. ஆனால் முடிவுகள் எதுவுமே எடுக்கப்படவில்லை. நாளை வெள்ளிக்கிழமை முக்கியமான முடிவுகளை அறிவிக்கவுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்தக் கூட்டத்தில் கூறியிருந்தார்.
ஏப். 20 08:34

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டுக்கு நாடாளுமன்றத்தில் கண்டனம்

(வவுனியா, ஈழம்) ரம்புக்கனையில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கொல்லப்பட்ட இளைஞனுக்கு நீதி வேண்டி இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுலோகங்களைக் கைகளில் ஏந்தியிருந்தனர். கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்குச் செல்ல வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நடத்திய எதிர்ப்பு போராட்டத்தினால் சபை நடவடிக்கைகள் பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
ஏப். 19 21:54

ரம்புக்கனையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி பன்னிரெண்டுபேர் படுகாயம்

(வவுனியா, ஈழம்) கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலக்குவதற்கான போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில். இன்று கேகாலை மாவட்டம் றம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டும் மேலும் நான்குபேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. மேலும் 12 பேர் காயமடைந்து அருகிலுள்ள அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருட்களின் விலைகள் கட்டுப்பாடின்றி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரம்புக்கனையில் ரயிலை வழிமறித்துப் போராடியபோதே பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
ஏப். 18 22:40

நிறைவேற்று அதிகாரங்களைக் குறைக்க கோட்டா இணக்கம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் நிறைவேற்று அதிகாரமுறையில் உள்ள குறிப்பிடத்தக்க அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்குப் பாரப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் புதிய நகல் சட்டவரைபு ஒன்றைச் சமர்ப்பித்து ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பது தொடர்பாக ஆராயப்பட்டதாக நாடாளுமன்றத் தகவல்கள் கூறுகின்றன.
ஏப். 17 22:49

போராட்டம் கொழும்பு காலிமுகத் திடலில் தொடருகின்றது

(வவுனியா, ஈழம்) அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் கொழும்பு காலிமுகத்திடலில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், இன்று அம்பாந்தோட்டையில் மாபெரும் மக்கள் பேரணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரணி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பை வந்தடையவுள்ளது. காலிமுகத் திடலில் நடைபெறும் போராட்டம், அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகளின் தலையீடுகள் இல்லாமல் நடைபெறுவதால். இந்தப் பேரணி கொழும்பு நகருடன் முடிவடைந்துவிடுமென ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
ஏப். 14 00:01

கொழும்பு மைய அரசியலை ஆரம்பித்துள்ள கஜேந்திரர்கள்

(வவுனியா, ஈழம்) சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கைச்சாத்திட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு கொழும்பில் அறிவித்துள்ளது. முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று புதன்கிழமை காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து குறித்த பிரேரணைக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர்.
ஏப். 11 23:09

இலங்கைத்தீவில் அரச மருத்துவமனைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

(வவுனியா, ஈழம்) வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில் இயங்கும் அரச வைத்தியசாலைகளில் ஐந்து வகையான உயிர்காக்கும் மருந்துகளுக்கும், 180 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவ தொழிற்சங்கங்கள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளன. வெளிநாடுகள் உடனடியாக உதவி செய்ய வேண்டுமெனவும் மருத்துவ தொழிற் சங்கங்கள் அவசர அழைப்பு விடுத்துள்ளன. மருந்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் உடனடியாகப் பகிரங்கமாக அறிவித்து உதவி வழங்கும் நாடுகளிடம் அவசர உதவி கோருமாறும் இலங்கை மருத்துவர் சங்கம் உள்ளிட்ட மருத்துவ தொழிற் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
ஏப். 10 22:23

வடக்குக் கிழக்கில் இருந்து மேலும் பல தமிழர்கள் இந்தியாவில் தஞ்சம்

(வவுனியா, ஈழம்) இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவி விலகவேண்டும் எனக்கோரியும், இலங்கைத்தீவின் தென்பகுதி முழுதும் இரவு பகலாக நடைபெறும் மாபெரும் எதிர்ப்பு ஆர்பாட்ட பேரணிகள் தமிழர் தாயகப்பகுதிகளிலும் பெரும் எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த சில தினங்களாக யாழ்பாணம், வவுனியா மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மேற்படி எதிர்ப்பு பேரணிகள் பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க முடியாது இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தமிழகத்திற்கு படகுகள் மூலம் தப்பிச் செல்லும் அவலமும் நடந்து வருகின்றது
ஏப். 08 22:05

கொழும்பில் கோட்டாவுக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள்

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமன அரசாங்கத்துக்கு எதிராகக் கொழும்பில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. பத்தரமுல்லயில் உள்ள நாடாளுமன்றத்துக்கு முன்பாகப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலகமடக்கும் பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். மாணவர்களும் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக எதிர்ப்புக் கோசங்களை எழுப்பினர். கொள்பிட்டி லிப்ரன் சுற்றுவட்டத்துக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டது.
ஏப். 06 21:23

ஹர்சா டி சில்வாவை தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்கவும்

(வவுனியா, ஈழம்) ஹர்சா டி சில்வாவை தற்காலிக ஜனாதிபதியாக நியமித்துத் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலக வேண்டுமென பாடசாலை மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.