நிரல்
மே 12 15:50

இலங்கைக் கடற்படை தலைமன்னார் கடலில் ரோந்து நடவடிக்கை

(மன்னார், ஈழம்) தமிழர் தாயகமான வட மாகாணத்தின் மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள கரையோரப் பிரதேசங்கள் மற்றும் தலைமன்னாருக்கும் இந்தியாவிற்கும் இடையிலான மணல் தீடைகளில், இலங்கை கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் மிகக்கடுமையான பொருளாதார நிலை காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமிழகத்திற்கு தப்பிச் செல்லும் நிலையிலேயே அதனை கட்டுப்படுத்த கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூர்மைச் செய்தித் தளத்திற்கு மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
மே 11 17:11

புதிய பிரதமரை நியமித்து அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக அறிவித்தார் கோட்டாபய ராஜபக்ச

(வவுனியா, ஈழம்) கொழும்பில் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் வன்முறைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த ஒரு வாரத்துக்குள் புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் உரையாடிய பின்னரே கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார். இன்று புதன்கிழமை இரவு அரச தொலைக்காட்சியில் விசேட உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ச, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையில் உள்ள சில அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்குப் பாரப்படுத்த 19 ஆவது திருத்தச் சட்டத்தை மீளவும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
மே 10 11:09

கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் வன்முறை தொடர்கிறது- இதுவரை எழுவர் பலி, 220 பேர் காயம்

(வவுனியா, ஈழம்) கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைகளில் இதுவரை அரசியல்வாதிகள் உட்பட ஏழுபேர் கொல்லப்பட்டும் மேலும் இருநூற்று இருபது பேர் காயமடைந்தும் உள்ளனர். ஆனால், உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை தொடர்பாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. இதுவரை சுமார் முப்பத்தைந்து அரசியல்வாதிகளின் வீடுகள், அவர்களுடைய சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகக் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
மே 09 22:48

வன்முறையாளரைத் துணைக்கழைத்த ஆளுங்கட்சியின் கலகம் அரசியல்வாதிகளின் தற்கொலை அவலத்தில் முடிவு

(வவுனியா, ஈழம்) பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாட்களில் ஈழத்தமிழ்த் தேசம் மீது இன அழிப்புப் போரை நடாத்தியதாக ஈழத்தமிழர் தரப்புகளால் குற்றஞ்சுமத்தப்படும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இராணுவத்தை அன்று வழிநடாத்திய பாதுகாப்புச் செயலரும் தற்போது முப்படைகளின் கட்டளைத் தளபதியாகவுமுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதே இராணுவத்தை, இன்று பொருளாதார நெருக்கடியால் தென்னிலங்கையில் உருவாகியுள்ள கலகத்தை அடக்குவதற்கு கட்டவிழ்த்து விடுவது எப்போது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கலகம் அவலமாகியதன் உடனடி விளைவு மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி துறப்பாகியது. மொட்டுக்கட்சியினரின் வீடுகளும் எரிக்கப்பட்டுள்ளன.
மே 09 10:12

ஒற்றையாட்சியை பாதுகாக்க முற்படும் சட்டத்தரணிகள் சங்கம்- கேள்வி எழுப்பத் தயங்கும் தமிழ்ச் சட்டத்தரணிகள்

(முல்லைத்தீவு) பொருளாதார நெருக்கடி. விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைக் காணும் நோக்கில், சிங்களத் தலைமைகளை மையமாகக் கொண்ட இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம், மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக எழும் கேள்விகள், சந்தேகங்கள் குறித்துத் தமிழ்ச் சட்டத்தரணிகள் அமைதியாக இருக்க முடியாதென்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்க வேண்டுமென்ற பரிந்துரை மாத்திரம் தீர்வாகாது என்ற சட்ட வியாக்கியானங்களை வடக்குக் கிழக்குத் தமிழ்ச் சட்டத்தரணிகள் முன்வைக்க வேண்டும்.
மே 08 22:47

இடைக்கால அரசாங்கத்தை அமைக்கச் சட்டத்தரணிகள் சங்கம் முயற்சி- மகிந்த பதவி விலக மறுப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் மேற்கொள்ளும் முயற்சியை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம், பிரதமர் பதவிக்கு இணங்க முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ச விலகினால், ஜனாதிபதிப் பதவியை ஏற்கத் தயாராகவுள்ளதாகவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைக்கான உடனடித் தீர்வுக்குச் சர்வதேச நாணய நிதியம் அரசியல் ஸ்திரத்தன்மையை எதிர்பார்ப்பதாகவும் அதன் காரணத்தினாலேயே இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் இந்த முயற்சியைக் கையாண்டு வருவதாகவும் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
மே 06 23:22

போராட்டங்களை அடக்க அவசரகாலச் சட்டம் அமுல்

(வவுனியா, ஈழம்) அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால். இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் நலனைப் பாதுகாக்கவும் அத்தியாவசிய சேவைகளைப் பேணவும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது. அவசரகால சட்டம் நடைமுறையில் இருக்கும்போது ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்துவது தடைசெய்யப்படும். ஆகவே ஜனாதிபதியின் இந்த வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி மீளப் பெறவேண்டுமென கொழும்பில் உள்ள மனித உரிமை சட்டத்தரணிகள் கேட்டுள்ளனர்.
மே 05 22:17

நாடாளுமன்ற வளாகத்துக்கு முன்பாக மாணவர்கள்- பொலிஸார் மோதல்

(வவுனியா, ஈழம்) கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்குப்போ என்ற போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், நாடாளுமன்ற வாளாகத்துக்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள் இன்று இரவு வரை நடத்திய ஆர்ப்பாட்டத்தினால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சுமார் எட்டு மணி நேரமாக இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸாரும் மாணவர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். பொலிஸார் கம்பிகளினால் அமைத்த வேலிகளை உடைத்துக் கொண்டு மாணவர்கள் நாடாளுமன்ற வீதிக்குள் நுழைய முற்பட்டபோதே மோதல் ஏற்பட்டது. கம்பி வேலிகளை உடைத்துக் கொண்டு மாணவர்கள் நாடாளுமன்றத்திற்குச் செல்லும் முதலாவது வீதிக்குச் சென்றபோது பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.
மே 04 09:46

நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொள்ள முடியும் என்கிறார் அமைச்சர் தினேஸ்

(வவுனியா, ஈழம்) எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஆனால் நம்பிக்கையில்லா பிரேரணை மூன்று மொழிகளிலும் கையளிக்கப்பட வேண்டும் என்றும் குறைந்தது ஒருவாரம் அதனை வாசிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார். அது தொடர்பாக சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் இந்தக் கருத்தை அமைச்சர் வெளியிட்டார்.
மே 03 09:25

சஜித் அணிக்குள் முரண்பாடுகள் அதிகரிப்பு- எதிர்க்கட்சிகளின் பலவீனங்கள் தொடருகின்றன

(வவுனியா, ஈழம்) கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதிவியில் இருந்து விலக வேண்டுமெனப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையிலும் அரசாங்கம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலிலும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்குள் முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் மூத்த உறுப்பினர்கள் பலர் பங்குபற்றவில்லை.