செய்தி: நிரல்
ஜூலை 19 16:11

ஜனாதிபதித் தெரிவுக்கு மூவர் போட்டி- சஜித் விலகினார்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில், புதன்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பில் மூன்பேர் போட்டியிடுகின்றனர். தற்போது பதில் ஜனாதிபதியாகவுள்ள ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்காபொதுஜன பெருமனக் கட்சியின் மூத்த உறுப்பினர் டளஸ் அழகபெரும ஜே.வி.பி எனப்படும் மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா ஆகியோர் போட்டியிடவுள்ளனர். செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வேட்புமனுத் தாக்கலில், நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவாத்தாட்சி அதிகாரியாகச் செயற்பட்டார்.
ஜூலை 17 23:34

ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பு- நால்வர் போட்டி

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் எட்டாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் இருபதாம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கு நான்கு உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினர் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ஜே.வி.பி என்படும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரே போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஜூலை 15 23:03

ஜனாதிபதிப் பதவிக்கு ரணிலை எதிர்த்து சஜித், டளஸ் போட்டியிட முடிவு

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதிப் பதவிக்குக் கடும் போட்டி நிலவுகின்றது. ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியான நிலையில், எதிர்வரும் 20 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ள வாக்கெடுப்பின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வாக்களிக்குமென அதன் செயலாளர் சாகர காரியவன்சம் வெள்ளிக்கிழமை பிற்பகல் தெரிவித்திருந்தார். ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் சார்பில் மூத்த உறுப்பினர் டளஸ் அழகபெருமாவை வேட்பாளராக நிறுத்தவுள்ளதாக பெரமுனக் கட்சியின் தலைவர் பேராசிரியர் பீரிஸ் வெள்ளிக்கிழமை மாலை அறிவித்திருந்தார்.
ஜூலை 13 23:19

நாடாளுமன்றத்தை முற்றுகையிட போராட்டக்காரா்கள் முயற்சி- பொலிஸாருடனான் மோதலில் 45 பேர் காயம்

(வவுனியா, ஈழம்) கொழும்பில் இன்று நள்ளிரவுவரை தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத்திற்கு அருகாக உள்ள சபாநாயகரின் இல்லத்தைக் கைப்பற்ற முற்பட்டபோது பெரும் மோதல் ஏற்பட்டது. சுமார் 45 பேர் காயமடைந்து கொழும்புத் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி முப்படைனரும் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர். கலகமடக்கும் பொலிஸார் கண்ணீர்புகைக் குண்டுத் தாக்குதல்களையும் நீர்த்தாரைப் பிரயோகத்தையும் மேற்கொண்டபோதும், போராட்டக் குழு எதிர்த்து நின்று முன்னோக்கிச் செல்கின்றது.
ஜூலை 12 15:15

சிங்கள - பௌத்த தேசிய சக்தி, ராஜபக்ச குடும்பத்திடம் இல்லாமல் போனதாலேயே துரத்தப்பட்டதாக மார் தட்டுகிறார் ஓமல்பே தேரர்

(கிளிநொச்சி, ஈழம்) சிங்கள, பௌத்த அதிகாரத்தை எவராலும் இல்லாதொழிக்க முடியாது. அது நிலையானது என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் செவ்வாய்க்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிங்கள,பௌத்த அதிகாரம் நிலையானது. என்பதே யதார்த்தமான உண்மையும்கூட என்று கூறிய தேரர், சிங்கள, பௌத்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியே கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததாகவும், அதனாலேயே அவரைப் பதவி விலக வைப்பதற்குச் சிங்கள, பௌத்த சக்திகள் முன்னின்று செயற்பட்டதாகவும் தெரிவித்தார். ராஜபக்ச குடும்பம் பயன்படுத்திய சிங்கள, பௌத்ததேசிய சக்தி இத்துடன் முடிந்துவிட்டதாகவும் தேரர் கூறினார்.
ஜூலை 12 11:48

போராட்டம் நடத்திய இளைஞர் குழுக்களிடையே மோதல், பொலிஸார் ஒருவர் உயிரிழப்பு- அலரிமாளிகைக்குள் சம்பவம்

(வவுனியா, ஈழம்) கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி போராட்டம் நடத்தி வரும் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் சுமார் பத்துப்பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தார் ஒருவர் சிகிச்சை பலனின்றிப் பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பிரதமரின் அலரி மாளிகையில் தங்கியுள்ள போராட்டக்குழுக்களே மோதலில் ஈடுபட்டதாகவும் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் பெண் ஒருவரின் கழுத்து வெட்டப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். செவ்வாய்க்கிழமை அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்களுக்கும் போராட்டக்குழுவின் மற்றுமொரு பகுதியினருக்குமிடையே மோதல் இடம்பெற்றதாகச் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்தனர்.
ஜூலை 10 23:52

காத்திருக்க முடியாதென போராட்டக்குழு அறிவிப்பு- பிரதமர் பதவியில் இருந்து விலக ரணில் கூறும் காரணம்

(வவுனியா, ஈழம்) கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதிப் பதவியில் உடனடியாக விலக வேண்டும். எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை வரை காத்திருக்க முடியாதென காலிமுகத் திடல் போராட்டக்குழு அறிவித்துள்ளது. ஒன்பதாம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற போராட்டம் மற்றும் அதன் பிரகடனத்தின் பிரகாரம் கோட்டாபய ராஜபக்ச உடனடியாக விலக வேண்டுமெனவும் கேட்டுள்ளனர். எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை பதவி விலகுவதாக கோட்டாபய ராஜபக்ச சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தனவுக்கு அறிவித்திருந்தார். இந்த நிலையிலேயே உடனடியாகப் பதவி விலக வேண்டுமென போராட்டக்குழு அறிவித்துள்ளது.
ஜூலை 09 22:38

பதவி விலகவுள்ளதாக கோட்டாபய சபாநாயகருக்கு அறிவித்தார்- சர்வகட்சிக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றம்

(வவுனியா, ஈழம்) போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமரின் அலரி மாளிகை போன்றவற்றை முற்றுகையிட்டுக் கைப்பற்றியுள்ளதால், எதிர்வரும் புதன்கிழமை 13 ஆம் திகதி ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலகவுள்ளதாக கோட்டாபய ராஜபக்ச சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தனவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். இத் தகவலை சபாநாயகர் சனிக்கிழமை இரவு ஊடகங்களுக்கு அறிவித்தார். சுமார் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள், சனிக்கிழமை காலை கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையையும் காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தையும் முற்றுகையிட்டு பிற்பகல் கைப்பற்றினர். ஆனால் கோட்டாபய ராஜபக்ச அங்கிருக்கவில்லை. அவர் ஏலவே அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடமொன்றுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது.
ஜூலை 08 22:02

சனிக்கிழமை போராட்டத்தை அடக்க ஊரடங்குச் சட்டம் அமுல்- மாணவர்களின் பேரணி மீது பொலிஸார் தாக்குதல்

(வவுனியா, ஈழம் ) வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் நாளை சனிக்கிழமை இரவு வரை தொடர்ச்சியாக நடைபெறவிருந்த போராட்டத்தைத் தடுக்க இலங்கைப் பொலிஸ் தலைமையகம் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது. கொழும்பு களனி பல்கலைக்கழகங்களுக்கு முன்பாக வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆரம்பித்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேரணி, புறக்கோட்டை, கோட்டை பிரதேசங்கள் ஊடாக ஜனாதிபதி மாளிகையை நோக்கி வந்தபோது பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதல்களை நடத்தினர். அதனையும் பொருட்படுத்தமால் இரவு ஏழு மணிக்கு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாசலை அண்மித்த தூரத்தில் மாணவர்கள் வந்தபோது, கலகமடக்கும் பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளையும் நீர்த்தாரைகளையும் மாணவர்கள் மீது பிரயோகித்தினர்.
ஜூலை 07 22:27

கொழும்பில் இராணுவம் குவிப்பு- போராட்டங்களைத் தடுக்க அரசாங்கம் கடும் முயற்சி

(வவுனியா, ஈழம்) கொழும்பில் ஒன்பதாம் திகதி சனிக்கிழமை அரசாங்கத்துக்கு எதிராகக் நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்தை பொலிஸ், மற்றும் இராணுவத்தினரைப் பயன்படுத்தித் தடுக்க முற்பட்டால் போராட்டம் வெடிக்குமென தொழிற்ச் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஜனாதிபதிப் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலக வேண்டுமென வலியுறுத்தி கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாகவும், காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும் நடைபெறவுள்ள போராட்டத்தினால், பொதுமக்கள் பாதிக்கப்படவுள்ளதாக் குறிப்பிட்டு அந்தப் போராட்டத்தைத் தடுக்குமாறு கோரி கோட்டைப் பொலிஸார் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அந்த மனுவை கொழும்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.