செய்தி: நிரல்
ஓகஸ்ட் 18 08:29

தேசிய அரசாங்கம் அமைக்க ரணில் முடிவு- மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவையும் பெற ஏற்பாடு

(வவுனியா, ஈழம்) ஐக்கிய மக்கள் சக்தியையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவும் நோக்கமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருப்பதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது. சர்வகட்சி என்ற பெயரில் அரசாங்கத்தை அமைப்பதற்கு இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் இடமில்லையென இலங்கைச் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியிருந்தனர். அத்துடன் தேசிய அரசாங்கம் பற்றியே சட்டத்தரணிகள் சங்கமும் வலியுறுத்தியிருந்தது. இந்த நிலையில் மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்களையும் பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து உறுப்பினர்கள் பலரை உள்வாங்கித் தேசிய அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 17 21:20

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ராஜபக்ச அணி முரண்பாடு

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ராஜபக்சக்களை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி உறுப்பினர்கள் முரண்பட்டு வருவதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பலம் இல்லாத நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் ஆதரவுடன் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரச அதிகாரிகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கான பணிப்பாளர் சபை ஆகியவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும்போது முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
ஓகஸ்ட் 15 08:35

பொதுக் கடன் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நூற்று நான்கு தசம் ஆறு வீதமாக உயர்வு

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவின் புத்தளம் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையங்களில் உள்ள இரண்டு மின் உற்பத்திப் பிரிவுகள் செயலிழந்துள்ளதால் நாளை செவ்வாய்க்கிழமை முதல் மூன்று மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபை திங்கட்கிழமை அறிவித்துள்ளது. ஏற்கனவே ஐந்து மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு சில நாட்களுக்கு முன்னர் ஒருமணி நேரம் இருபது நிமிடங்களுக்கு மாத்திரமே மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையி;ல் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மூன்று மணிநேர மின்வெட்டு அமுல் செய்ய வேண்டியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
ஓகஸ்ட் 14 08:45

பாகிஸ்தான் கப்பலுடன் இலங்கைக் கடற்படை பயிற்சியில் ஈடுபடாதென அறிவிப்பு

(முல்லைத்தீவு) இலங்கைத்தீவின் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தந்துள்ள பி.என்.எஸ் தைமூர் எனப்படும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் இணைந்து இலங்கைக் கடற்படை போர் பயிற்சிகளில் ஈடுபடாதென இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது. சென்ற பன்னிரெண்டாம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்த குறித்த கப்பல் பதினைந்தாம் திகதி திங்கட்கிழமை இலங்கையில் இருந்து புறப்படவுள்ளது. இந்த நிலையில். குறித்த பாகிஸ்தான் கப்பலுடன் இலங்கைக் கடற்படை பயிற்சியில் ஈடுபடுமென செய்தி இணையத்தளங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் வெளியான செய்தியை இலங்கைக் கடற்படை மறுத்துள்ளது.
ஓகஸ்ட் 12 22:43

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர்- விக்னேஸ்வரன்

(வவுனியா, ஈழம்) போர்க்காலத்திலும் அதற்குப் பின்னரான சூழலிலும் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் நாற்பத்து ஆறு பேரை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோரைச் சந்தித்து உரையாடியபோது இவ்வாறு உறுதியளிக்கப்பட்டதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார். சிறைக் கைதிகள் தொடர்பாக முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவின் அறிக்கை கிடைக்கும் வரை காத்திருப்பதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தன்னிடம் கூறியதாகவும் விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஓகஸ்ட் 11 22:00

வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடு

(வவுனியா, ஈழம்) ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அடுத்த நான்கு மாதங்களுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் முப்பதாம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்னர் நிதியமைச்சராகப் பதவி வகித்திருந்த பசில் ராஜபக்ச தயாரித்த வரவு செலவுத்திட்டத்தை அப்போது ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச இடை நிறுத்தியிருந்தார். கடந்த மே மாதம் இரண்டு மாதங்களுக்கான வரவுசெலவுத் திட்டம் ஒன்றைத் தயாரித்து நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தையும் கோட்டாபய ராஜபக்ச பெற்றிருந்தார்.
ஓகஸ்ட் 09 10:12

எதிர்க்கட்சிகளின் கொழும்புப் பேரணி இராணுவக் குவிப்பு, கைது மற்றும் அச்சுறுத்தல் காரணமாக வெற்றியளிக்கவில்லை

(வவுனியா, ஈழம்) அரசாங்கத்துக்கு எதிராக செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் பெரியளவில் வெற்றியளிக்கவில்லை. கொழும்பு நகரை நோக்கிப் பேரணிகள் எதுவும் வரவில்லை. ஆங்காங்கே அரச ஊழியர்கள் சில பொது அமைப்புகள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு விகாரமாதேவி பூங்காவிற்கு முன்பாக ஆரம்பித்த பேரணி சுதந்திர சதுக்கத்தை வந்தடைந்தது. இரண்டாயிரத்துக்கும் குறைவானவர்களே பேரணியில் பங்குபற்றியிருந்தனர். பேரணி தொடர்பாக முன்னாள் இராணுவத்தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா நேற்றுத் திங்கட்கிழமை விடுத்த எச்சரிக்கையினால், இன்று செவ்வாயக்கிழமை கொழும்பு நகரில் கூடுதல் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஓகஸ்ட் 06 22:11

சர்வகட்சி நிர்வாக ஆட்சி முறைக்கு ரணில் இணக்கம்

(வவுனியா, ஈழம்) சர்வகட்சி நிர்வாக ஆட்சி முறைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார். சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களைச் சந்தித்த போது இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வகட்சி அரசாங்கம் என்ற வரையறைக்கு இணக்கம் காண முடியாத பட்சத்தில் சர்வகட்சி நிர்வாக ஆட்சிமுறையை அமுல்படுத்துவதில் பிரச்சினையில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இந்த ஆட்சிமுறைக்காக ஒன்றிணைந்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்தியிடம் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
ஓகஸ்ட் 04 22:42

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அகற்றப்படுகின்றன

(வவுனியா, ஈழம்) கொழும்பு காலிமுகத்திடல் போராட்ட தளத்திலிருந்து போராட்டகாரர்களை வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்ததையடுத்து குறிப்பிட்ட சில போராட்டக்காரர்கள் வெளியேறி வரும் நிலையில், பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலினால் மேலும் போராட்டக்காரர்கள் வெளியேற மறுத்துள்ளனர். நீதிமன்ற உத்தரவையடுத்துப் போராட்டக்காரர்கள் பலர் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். கூடாரங்களும் அகற்றப்பட்டு வந்தன. இந்த நிலையில். பொலிஸார் ஒலி பெருக்கியில் வெளியிட்ட அறிவிப்பினால் சீற்றமடைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்து வெளியேற மறுத்துள்ளனர்.
ஓகஸ்ட் 03 22:06

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணிலிடம் கோரிக்கை

(வவுனியா, ஈழம்) இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் காணி அபகரிப்புகளை நிறுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்துள்ளது. காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ரணில் விக்கிரமசிங்கவுடன் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவும் பங்குபற்றியிருந்தார். இச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணிநேரம் இடம்பெற்றது. கூட்டமைப்பு முன்வைத்த முக்கியமான சில கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கும் தெரிவித்தார். ஆனால் எந்த வகையான அரசியல் தீர்வு என்பது குறித்துச் சுமந்திரன் எதுவுமே தெரிவிக்கவில்லை.