செய்தி: நிரல்
ஜன. 11 09:47

மைத்திரி, விமல், டளஸ் புதிய கூட்டணி

(வவுனியா, ஈழம்) விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை, அநுர பிரியதர்சன யாப்பா அணி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைத்துள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நோக்கமாகக் கொண்டு இந்த அரசியல் கூட்டணி புதன்கிழமை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கூட்டணிக்கான அங்குராட்பன நிகழ்வு புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்தப் புதிய கூட்டணி, நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஹெலிகொப்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன. 05 21:00

ரணிலுடன் சம்பந்தன், செல்வம், சுமந்திரன், சித்தார்த்தன் சந்திப்பு

(வவுனியா, ஈழம்) வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகாரங்களைச் செயற்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய விடயங்களை ஆராய்ந்து எதிர்வரும் பத்தாம் திகதி பதிலளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை மாலை ஐந்து மணிக்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடத்திய சந்திப்புத் தொடர்பாக சுமந்திரன் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.
ஜன. 04 10:19

ரணில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சந்திப்பார்- விக்கி அணி பதில் இல்லை

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வியாழக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சந்திப்பில் பங்குபற்றவுள்ளனர். வடக்கு மாகாண உறுப்பினர்களைச் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்த ரணில் விக்கிரமசிங்க சென்ற மாதம் சர்வ கட்சி மாநாட்டைக் கூட்டியிருந்தார். இந்த நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தனியாகச் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
ஜன. 03 08:39

மின் பாவனையாளர்கள் கையெழுத்துப் போராட்டம்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் மின்சார கட்டணம் அதிகரிப்புத் தொடர்பாகப் பல்வேறு எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளதால், மின் பாவனையாளர்கள் சங்கம் அறுபத்து ஒன்பது இலட்சம் பாவனையாளர்களின் கையெழுத்தை சேகரிக்கும் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், புதிய வர்த்த மானி அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். இலங்கையில் மின்சார சபை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் வைத்தியசாலை ஆகிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்தே விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
ஜன. 02 22:29

களனிப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைது

(மட்டக்களப்பு, ஈழம்) களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கலும் முதன்நாயக்க மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதி டில்ஷன் ஹர்ஷன ஆகிய இருவரும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விசாரணைக்காக தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு முதலில் அழைப்பு விடுக்கபட்டது. அழைப்பை ஏற்று இரண்டு மாணவர்களும் தலங்க பொலிஸ்நிலையத்திற்கு இன்று நண்பகல் சென்றனர். பல மணி நேர விசாரணையின் பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஜன. 01 22:29

அமெரிக்க இருநூற்று நாற்பது மில்லியன் டொலர்களை 2022 இல் வழங்கியது- தூதுவர் விளக்கம்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியினால் கடந்த 2022 ஆம் ஆண்டு அமெரிக்கா வழங்கிய நிதியுதவிகள் தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் விளக்கமளித்துள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் இலங்கைக்கு இருநூற்று நாற்பது மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதியுதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளதாக ருவிற்றர் தளத்தில் அறிவித்துள்ளார். இது தொடர்பாக விளக்கமளித்துள்ள கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், அடிப்படை உணவுப் பாதுகாப்பு, மாணவர்களுக்கான மதிய உணவு, விவசாயிகளுக்கு உரம் போன்றவற்றுக்கே உதவியளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
டிச. 29 21:43

கடன் வழங்கும் நாடுகளிடம் இருந்து எழுத்துமூல உறுதிமொழிகள் இல்லை

(வவுனியா, ஈழம்) சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மேலும் தாமதமடைவதற்குச் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு இழுபறி மாத்திரம் காரணம் அல்லவென அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. இலங்கைக்கு நிதியுதவி வழங்கத் தயாராக இருப்பதாகக் கடன் வழங்கும் சில நாடுகள் கூறுகின்றன. ஆனாலும் இதுவரையும் கடன் வழங்குநர்கள் முறைப்படியோ அல்லது எழுத்துபூர்வமாகவோ உறுதியளிக்கவில்லை என்றும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிச. 27 23:16

கட்டணம் உயர்த்தப்படவில்லையானால் மின் தடை மேலும் அதிகரிக்கப்படும்- அமைச்சர் காஞ்சன

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவு முழுவதிலும் குறைந்தது எட்டு மணிநேர மின் தடை ஏற்படுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தால் குறைந்தளவு மணி நேரம் மாத்திரமே மின் தடை ஏற்படும் எனவும் அமைச்சர் கூறினார். நாளாந்த மின்வெட்டைக் குறைக்கும் வகையில், மின்சார சபையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டும். இல்லையேல் மின்வெட்டு நேரத்தை மேலும் ஆறு மணி நேரமாக அதிகரிக்க வேண்டும். தற்போது இரண்டு மணி நேர மின்வெட்டு மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மின்சாரசபை நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
டிச. 21 23:57

ஜனவரி மாதம் முதல் பத்து மணிநேர மின்சார வெட்டு

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடி நீடித்து வரும் நிலையில், இலங்கையில் மின்சாரத் தடையும் ஏற்படவுள்ளது. டிசெம்பர் மாதம் முப்பத்து ஒராம் திகதிக்குப் பின்னர், இலங்கைத்தீவு முழுவதிலும் பத்து மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளர். இதனால் இலங்கைதீவு முழுவதும் செயலிழக்க நேரிடும் என்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத் தலைவர் நிஹால் வீரரத்ன திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.
டிச. 19 22:36

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்தத் திட்டம்

(வவுனியா, ஈழம்) மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்த திட்டமிடப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் சிறப்புப் பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் பிரேரணை நிறைவேற்றப்பட முன்னர் மாகாணங்களுக்கான எல்லை மீள் நிர்ணய சபை தமது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டுமென ஆணைக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.