நிரல்
நவ. 14 12:39

மகிந்த ராஜபக்ச மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 பேர் ஆதரவு - உறுதிப்படுத்தினார் ரணில்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றியென அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று காலை கூடிய இலங்கை நாடாளுமன்ற அமர்வின்போது இடம்பெற்ற வாய்மொழி மூலமான வாக்கெடுப்பின் போது இது உறுதியானது என தெரிவித்துள்ள இலங்கைப் பிரதமர் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக தாங்கள் வாக்களித்ததை எழுத்து மூலம் உறுதி செய்துள்ளனர் என சுட்டிக்காட்டினார்.
நவ. 14 10:47

இலங்கை நாடாளுமன்றம் நாளை வியாழக்கிழமை வரை ஒத்திவைப்பு

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கை உயர்நீதிமன்றம் நேற்றைய தினம் வழங்கிய தீர்ப்பை அடுத்து இன்று காலை கூடிய இலங்கை நாடாளுமன்றம் அங்கு நிலவிய அமைதியின்மையை அடுத்து சபாநாயகர் கருஜயசூரியவினால் நாளை வியாழக்கிழமை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என சபாநாயகர் அறிவித்துள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார். ஜேவிபியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் அஜித்பெரேரா லக்ஸ்மன் கிரியல்ல ஆகியோரும் இதனை உறுதிசெய்துள்ளனர்
நவ. 13 23:09

உயர் நீதிமன்றத் தீர்ப்பையடுத்து இலங்கைத் தேசிய பாதுகாப்புச் சபையைக் கூட்டினார் மைத்திரி- முப்படைத் தளபதிகள் பங்கேற்பு

(மட்டக்களப்பு, ஈழம்) நடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான இலங்கை உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைத் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டியுள்ளார். இன்றிரவு இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் இலங்கை முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியேர் கலந்துகொண்டதாக இலங்கை ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவை அடுத்து நாளை புதன்கிழமை முற்பகல் பத்து மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். கடந்த 4 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டு வெளியிட்டிருந்த இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தலின்படி நாடாளுமன்றம் நாளை கூடும் எனவும் சபாநாயரின் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
நவ. 13 19:03

மைத்திரியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை - நாளை நாடாளுமன்றம் கூடும் என்கிறார் ரணில்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து எதிர்வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்புக்கு இலங்கை உயர்நீதிமன்றம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மைத்திரியின் வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக சுமார் 20 இற்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இது தொடர்பான விசாரணை நேற்றுத் திங்கட்கிழமை முற்பகல் ஆரம்பித்தது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை நீண்ட விவாதத்திற்குப் பின்னர் இவ்வாறு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால உத்தரவுக்கு எதிராக வேறு இடையீட்டு மனுக்களை சமர்ப்பிப்பதற்கும் உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதியரசர் குழு அனுமதி வழங்கியுள்ளது.
நவ. 13 13:19

அரசியலமைப்புக்கு அமையவே மைத்திரி நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளதாக சட்ட மா அதிபர் நீதிமன்றத்தில் விளக்கம்

(கிளிநொச்சி, ஈழம்) அரசியலமைப்பில் இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்திற்கு அமையவே, ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளதாக சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாடாளுமன்றத்தை கலைக்கப்பட்டமைக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் நலின் பெரேரா, உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்ட மா அதிபர் இவ்வாறு விளக்கமளித்தார். இந்த மனுக்களை விசாரணை செய்ய உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் சட்டமா அதிபர் கூறியுள்ளார்.
நவ. 13 11:30

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கை முன்னறிவித்தலின்றி இடைநிறுத்தம்

(மன்னார், ஈழம்) மன்னார் சதொச மனித புதைகுழி அகழ்வுப் பணி நேற்று திங்கட்கிழமை முதல் மீணடும் எவ்வித முன்னறிவித்தல்களும் இன்றி இடை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 104 ஆவது நாளாக அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளை தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டிய அகழ்வு நடவடிக்கை எவ்வித முன்னறிவித்தலும் இன்றி இடம்பெறவில்லை. எதிர்வரும் இரு வாரங்களுக்கு அகழ்வு நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
நவ. 13 09:21

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு இன்று

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நேற்றைய தினம் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை முடிவு இன்று உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படவுள்ளது. இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக 17 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் நேற்று உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் சார்பிலும் சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள் சிலர் சார்பிலும் இந்த 17 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று மாலைவரை அதில் 13 மனுக்கள் விசாரணைகளுக்காக தயார் நிலையில் உயர் நீதிமன்ற பதிவாளரால் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டிருந்தன.
நவ. 12 22:06

அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

(வவுனியா, ஈழம்) இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு முரணானது எனக் குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இலங்கை ஒற்றையாட்சி உயர்நீதிமன்ற பரிசீலனை நாளை செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நவ. 12 18:17

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான உயர்நீதிமன்ற பரிசீலனை நாளை வரை ஒத்திவைப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு முரணானது எனக் குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இலங்கை ஒற்றையாட்சி உயர்நீதிமன்ற பரிசீலனை நாளை செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன கடந்த 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மனுக்கள் உள்ளிட்ட பன்னிரன்டு மனுக்கள் இன்று திங்கட்கிழமை காலை இலங்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை அவசர மனுக்களாக எடுத்து விசாரிப்பதற்கு இலங்கை உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.
நவ. 12 12:37

அமெரிக்காவின் கருத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர் சுப்ரமணியன் சுவாமி விமர்சனம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்ததை அமெரிக்கா கண்டித்ததனை இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர் சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை விமர்சிக்கும் வகையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தொன்றைப் பதிவிட்டுள்ளார்.