நிரல்
டிச. 04 15:23

புதிய பிரதமரை நியமிக்க மைத்திரி முயற்சி- ஆனால் ஏற்க முடியாதென ஐக்கிய தேசியக் கூறுகின்றது

(வவுனியா, ஈழம் ) மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகிக்க முடியாதென கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில். புதிய பிரதமரை நியமிக்கும் விவகாரத்திலும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. ஐக்கியதேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணி, ரணில் விக்கிரமசிங்கவை மாத்திரமே பிரதமராக நியமிக்க முடியும் என உறுதியாகக் கூறியுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஒருவரை பிரதமராக நியமித்து ஐக்கியதேசிய முன்னணியின் ஆதரவையும் பெற ஜனாதிபதி மைத்திரி முற்படுகின்றார்.
டிச. 04 00:22

நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின் பின்னரும் ரணிலைப் பிரதமராக்க முடியாது என்கிறார் மைத்திரி- சட்டமா அதிபருடன் ஆலோசனை

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கை நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களும் கையொப்பமிட்டுக் கொடுத்தாலும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களிடம் கூறியுள்ளார். மகிந்த பிரதமராகப் பதவி வகிக்க முடியாதென கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்றுத் திங்கட்கிழமை வழங்கிய இடைக்காலத் தீர்ப்பையடுத்து ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்கள் திங்கட்கிழமை இரவு மைத்திரிபால சிறிசேவைச் சந்தித்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
டிச. 03 19:32

நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க முடியாதென மகிந்த அறிக்கை - சஜித்தைப் பிரதமராக்கும் மைத்திரியின் முயற்சி மீண்டும் தோல்வி

(மன்னார், ஈழம்) பிரதமராக பதவி வகிக்க முடியாதென கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடை உத்தரவை ஏற்க முடியாதென்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். தீர்ப்புக்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் மகிந்த கூறியுள்ளார். இடைக்காலத் தீர்ப்புத் தொடர்பாக மகிந்த இன்று திங்கட்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கை குறித்து ரணில் தரப்பு எதுவும் கூறவில்லை. இந்த நிலையில் இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி மேலும் நீடித்துச் செல்லுகின்றது.
டிச. 03 15:46

மகிந்த பிரதமராகவும் 49பேர் அமைச்சர்களாவும் செயற்பட கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை

(யாழ்ப்பாணம், ஈழம் ) மகிந்தராஜபக்ச பிரதமராகவும் அவருடை 49 அமைச்சர்களும் தொடர்ந்து பதவி வகிப்பதற்கும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி உறுப்பினர்கள் 122 பேர் இணைந்து கடந்த 23 ஆம் திகதி தாக்கல் செய்த ரிட் மனுவை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற பிரதம நீதியரசர பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டனர். கடந்த 30 ஆம் திகதி முதலாவது விசாரணை இடம்பெற்றது. இன்று திங்கட்கிழமை இரண்டாவது விசாரணை இடம்பெற்றபோது இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகிந்த தொடர்ந்தும் பிரதமராகப் பதவிவகிப்பார் என சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை கூறியிருந்தனர்.
டிச. 02 21:14

வவுனியாவில் அனுமதி பெறாது சிங்களவர்கள் வியாபார நிலையம் அமைத்துள்ளமை தொடர்பில் அதிருப்தி

(வவுனியா, ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் இலங்கை அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட இனஅழிப்புப் போரைத் தொடர்ந்து ஈழத்தமிழ் மக்களது பூர்வீக நிலங்களும் திட்டமிடப்பட்ட முறையில் சூறையாடப்பட்டுவரும் நிலையில் வவுனியா - யாழ்ப்பாணம் ஊடான ஏ9 வீதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்கள் சட்டத்திற்கு முரணான வகையில் கடை அமைத்து வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதேச மக்கள் உட்பட சட்டத்திற்கு அமைவான முறையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் வர்த்தகர்களும் விசனம் வெளியிட்டுள்னர்.
டிச. 02 16:25

பிரதமர் நியமனத்தில் ஜனாதிபதி மைத்திரியுடன் ரணில் தரப்புக்கு இணக்கம் ஏற்படவில்லை - தொடரும் இழுபறி

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்ந்தும் நீடித்துச் செல்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று ஞாயிற்றுக்கிழமை ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி சந்திப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க முடியாதென மைத்திரிபால சிறிசேன மீண்டும் கூறியுள்ளார். இதனால் மைத்திரியைச் சந்திப்பில் பயனில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார். அதேவேளை, பெரும்பான்மை அதிகாரங்கள் இல்லாத நிலையில் கூட பல நாடுகளில் அரசாங்கங்கள் செயற்படுவதாக மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். அரசியல் நெருக்கடி குறித்து அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
டிச. 02 09:51

தொண்டைமானாறு - இடைக்காடு பிரதேசங்களை இணைக்கும் வீதியை உடனடியாக புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை

(யாழ்ப்பாணம், ஈழம்) யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு பகுதியையும் அச்சுவேலி - இடைக்காடு பிரதேசத்தையும் இணைக்கும் வீதியை மூடி கடல் நீர் தேங்கி நிற்பதனால் கடும் நெருக்கடிகளுக்கு ஆளாவதுடன் உயிராபத்தை எதிர்நோக்குவதாக அந்தப் பகுதியால் பயணிப்போர் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினர். தற்போது பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில் கடும் மழையை அடுத்து கடல் நீர் பெருக்கெடுத்துள்ளதால் கடந்த சில நாட்களாக இந்த நிலை நீடிப்பதாக மக்கள் விசனம் வெளியிட்டனர்.
டிச. 01 21:22

மாலைதீவு முத்தரப்பு ரோந்துப் பயிற்சியின் பின்னர் இந்தியக் கரையோர ரோந்துக் கப்பல்கள் இலங்கைக்கு வருகை

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து அமைச்சரவையை மாற்றியது முதல் தொடர்ச்சியாக நீடித்து வரும் அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகள் கடுமையாக அக்கறை செலுத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்தியக் கரையோர ரோந்துக் கப்பல்களான சி.ஜி.எஸ் சமர் (CGS Samar and Aryaman) மற்றும் அரய்மன் ஆகிய கப்பல்கள், கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளன. இந்திய, இலங்கை, மாலைதீவு முத்தரப்பு ரோந்துப் பயிற்சி மாலைதீவிலுள்ள டோஸ்டி கடற்பகுதியில் கடந்த 25ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை நடைபெற்றது. அதன் பின்னர் இந்தியாவின் இந்த ரோந்துக் கப்பல்கள், கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளன.
டிச. 01 06:30

அதிகாரங்களை செயற்படுத்த முடியாத நிலையில் முறைகேடு இடம்பெற்றமை எவ்வாறு?

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் அதிகாரத்தின் கீழான மாகாண சபைகளுக்கான 13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரங்களை செயற்படுத்த முடியாத நிலையில் அல்லது அதிகாரங்கள் தட்டிப் பறிக்கப்படும் நிலையில் ஆட்சிக்காலத்தை வடமாகாண சபை நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில் மாகாணசபையின் மகளிர் விவகார அமைச்சினால் 320 இலட்சம் ரூபா நிதி முறைகேடான முறையில் செலவழிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மூவர் அடங்கிய விசாரணைக்குழு ஒன்றையும் ஆளுநர் அமைத்துள்ளார். முன்னாள் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆளுநரிடம் முன்வைத்த எழுத்து மூலமான குற்றச்சாட்டை அடுத்தே இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளதாக ஆளுநர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நவ. 30 17:04

வவுணதீவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இலங்கைப் பொலிஸார் இருவரில் ஒருவரின் கை துண்டிப்பு - விசாரணை தொடர்கிறது

(மட்டக்களப்பு, ஈழம்) கிழக்கு மாகாணம் - மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் இரவு நேரக் கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கைப் பொலிஸார் இரண்டுபேர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு பொலிஸாரும் பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கிகளும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் இருவரின் கைகளும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை இரவு இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கைப் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொலிஸார் கொல்லப்பட்ட இடத்துக்கு இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.