நிரல்
மார்ச் 18 22:55

கோட்டாபய போட்டியிட்டால் மகிந்த அணி தோற்பது உறுதி ரணில் - ராஜபக்ச குடும்பமும் ஒதுங்கும் என்கிறார்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த ராஜபக்சவினால் அறிவிக்கப்படுவார் என செய்திகள் வெளியானதும் கொழும்பில் சிங்கள அரசியல் கட்சிகளிடையே பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேவேளை, அவசர அவசரமாக கென்யாவில் இருந்து கொழும்புக்குத் திரும்பிய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இதுவரை முடிவுகள் எதுவுமே எடுக்கப்படவில்லையென அறிவித்துள்ளார். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களை உனடியாக அழைத்து உரையாடியுமுள்ளார்.
மார்ச் 18 10:21

பிரேரணை இலங்கையின் திருத்தங்களுடன் நிறைவேறும் - உயர்மட்டக்குழு ஜெனீவா பயணம், சம்பந்தன் ஆதரவு

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஜெனீவா மனித உரிமைச் சபையின் 40 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக இலங்கை அரசின் உயர்மட்டக்குழு இன்று திங்கட்கிழமை பயணமாகியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் பிள்ளை ஆகியோர் ஜெனீவாவுக்குப் பயணம் செய்துள்ளனர். மனித உரிமைச் சபையில் பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளின் அனுசரணையுடன் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை எதிர்வரும் 20 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுக்கப்படவுள்ளது. இதன்போது இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இந்த உயர்மட்டக்குழு திருத்தங்கள் உள்ளடங்கிய கருத்துக்களை முன்வைக்கவுள்ளது.
மார்ச் 17 22:52

திருகோணமலை மூதூர் பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரிக்க இலங்கை அரசாங்கம் ஏற்பாடு- சம்பந்தன் எதிர்ப்பு

(திருகோணமலை, ஈழம்) தமிழ பேசும் மக்களின் தாயகப் பிரதேசமான கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேசச் செயலகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முற்பட்டு வருகின்றது. மூதூர் பிரதேசச் செயலகத்தை பிரித்து, மூதூர், தோப்பூர் என்ற இரு பிரதேசச் செயலகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அரசியல் அழுத்தங்களின் பின்னணியிலும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் விகிதாசரத்தைக் குறைத்துக் காண்பிக்கும் நோக்கிலும் இலங்கை அரசாங்கம் இவ்வாறு செயற்படுவதாக தமிழ்த்தரப்புகள் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தன. இந்த நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
மார்ச் 16 23:17

மூன்றாவது ஜனாதிபதித் தேர்தலில் மூன்று பிரதான வேட்பாளர்கள் - தமிழர் நிராகரித்தால் வெற்றி யாருக்குமேயில்லை

(கிளிநொச்சி, ஈழம்) இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை நியமிப்பதற்கு மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன. தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கக்கோரும் விண்ணப்பத்தைக் கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்ததாகச் செய்திகள் ஏலவே வெளியாகியிருந்தன. இந்த நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு உள்ளக ரீதியாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக மகிந்த தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
மார்ச் 16 15:33

தமிழ் இனப்படுகொலை தொடர்பான விசாரணைக்கு சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் - பேரணியில் கோஷம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் இனஅழிப்பை வெளிப்படுத்தியும் போர்க்குற்றம் மற்றும் இன அழிப்பு விசாரணைக்கு சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் அவசியம் என்பதை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை மாபெரும் பேரணி ஒன்று நடைபெற்றது. 'நீதிக்காய் எழுவோம்' என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாணம் முற்றவெளி வரை சென்றது. அங்கு ஒன்றுகூடிய மக்கள் இலங்கை அரசாங்கம், இலங்கை இராணுவம் ஆகியவற்றுக்கு எதிரான கோசங்களை எழுப்பினர். சுலோக அட்டைகளையும் பதாதைகளையும் கைகளில் எந்தியிருந்தனர்.
மார்ச் 15 18:57

அவுஸ்திரேலிய, இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் - கொழும்பில் தூதுவர் அறிவிப்பு, நான்கு கப்பல்கள் வருகை

(யாழ்ப்பாணம், ஈழம் ) அவுஸ்திரேலியாவும் இலங்கையும் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்யவுள்ளதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையேயான பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் அவுஸ்திரேலிய அரசாங்கம் நீண்டகாலமாக பேச்சு நடத்தியது என்றும் அதனடிப்படையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் எனவும் கொழும்பில் உள்ள அவுஸ்திரேலியப் பிரதித் தூதுவர் ஜோன் பிலிப் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகின்றமை தொடர்பாக கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவுஸ்திரேலியப் பிரதி தூதுவர் ஜோன் பிலிப் விளக்கமளித்தார். ஆனால் இதுவரையும் இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக எதுவும் கூறவில்லை.
மார்ச் 15 11:15

இலங்கை அரச கட்டமைப்பைக் காப்பாற்ற முற்படும் சந்திரிகாவும் ரணில் அரசாங்கமும் - ஜெனீவா ஒத்துழைப்பு

(வவுனியா, ஈழம்) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபை கூறுகின்ற அனைத்து விடயங்களையும் இலங்கை அரசாங்கம் அப்படியே ஏற்றுக்கொள்ளாதென இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இலங்கையின் இறைமை தன்னாதிக்கம் ஆகியவற்றைப் பாதுகாப்பது தொடர்பாக இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிகளுடனும் அரசாங்கம் இணைந்து செயற்படும் என்றும் திலக மாரப்பன தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தின் பிடியில் உள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் இன்னமும் பொதுமக்களிடம் கையளிக்கப்படவில்லையென மனித உரிமைகள் ஆணையாளர் கூறியுள்ளதை இலங்கை அரசாங்கம் எற்றுக்கொள்ளவில்லை என்றும் திலக் மாரப்பன கூறியுள்ளார். இலங்கையின் உள்ளகப் பிரச்சினையை இலங்கை மக்களுடன் இலங்கை அரசாங்கம் பேசித் தீர்க்கும்.
மார்ச் 14 23:33

இலங்கையின் இறைமை அதிகாரம் பிரிக்கப்படாமல், அதனை சர்வதேச ஆதரவுடன் பாதுகாப்பதே சிங்களக் கட்சிகளின் நோக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை இராணுவ அதிகாரிகள், சிப்பாய்களை இலங்கையிலேயே கைது செய்வதற்கான ஏற்பாடுகள் உள்ளதாக பூகோள இலங்கையர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், சியாமேந்திரா விக்கிரமாராட்சி, இலங்கைக்கு ஆபத்து வரக்கூடிய அந்தப் பிரேரணையை சிங்கள அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் எனக் கோரினார். இலங்கை இராணுவத்தை உள்ளநாட்டில் விசாரணை செய்யலாம் என்றவொரு அத்தியாயம் ஜெனீவா பிரேரணையில் உள்ளது. பிரித்தானிய அரசு அந்த அத்தியாயத்தை பிரதானப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மார்ச் 14 10:34

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் இழுபறி - கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரைச் சந்தித்தார் மகிந்த ராஜபக்ச

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ச எதிர்க்கட்சிகளின் வேட்பாளராகப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பபடுகின்றது. இந்த நிலையில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்சுடன் மகிந்த ராஜபக்ச சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக, பசில் ராஜபக்ச கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச கொழும்பில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
மார்ச் 13 22:58

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் 4 ஆயிரம் பேர் கொழும்பில் பேரணி

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த சுமார் நான்காயிரம் மாணவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக இன்று புதன்கிழமை பேரணி ஒன்றில் ஈடுபட்டனர். கொழும்புப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்திற்கு அருகில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் அங்கிருந்து பேரணியாக நாடாளுமன்ற வளாகம் வரை சென்றது. அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இலஙகைப் பொலிஸார் மாணவர்களின் பேரணி மீது கண்ணீர்ப்புகை, மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டனர். இதனால் மாணவர்கள் பலருக்குக் காயங்கள் ஏற்பட்டன. பல்கலை மாணவர்கள் ஒருங்கிணைப்பாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி அதற்குப் பதிலாக வேறொரு சட்டமூலத்தை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.