நிரல்
ஏப். 10 16:03

சத்குமாரவின் கைதும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும்- பொல்காவல நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு அமையும்?

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் தேரவாத பௌத்த சமயத்தை (Theravada Buddhist) மையப்படுத்திய பிக்குமார் சிலரின் ஒருபால் சேர்க்கை (Homosexuality) தொடர்பாக சிங்கள மொழியில் களு மக்கற (Black Dragon) என்ற சிறுகதையை எழுதிய சக்திக சத்குமார என்ற சிங்கள இளைஞன், குருநாகல் மாவட்ட பொல்காவல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தடுப்புக் காவில் வைக்கப்பட்டுள்ளார். இலங்கையின் 2007 ஆண்டு 56 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் இலங்கை நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயத்தின் பிரிவு மூன்றின் கீழ் (International Covenant on Civil and Political Rights) (ICCPR) கைது செய்யப்பட்டே முப்பத்தி மூன்று வயதான சக்திக சத்குமார நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஏப். 10 14:10

மன்னாரில் மத ஒற்றுமையை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம்- பிரதேசத்தை துண்டாட வேண்டமென வலியறுத்தல்

(மன்னார், ஈழம்) இன மத ஒற்றுமைய வலியுறுத்தி மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. மன்னார் சமூக பொருளாதர மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற போராட்டத்தில் மன்னார் நகர், மடு, மாந்தை, முசலி, நானாட்டான் ஆகிய ஐந்து பிரதேசங்களைச் சேர்ந்த சர்வ மதங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தி சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பங்குகொண்டனர். மன்னார் மாவட்ட பொது நூலகத்துக்கு முன்பாக ஒன்று கூடிய மக்கள் அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தை அமைதியாக முன்னெடுத்தனர். மதங்களைக் கடந்த மனிதத்தை நேசிப்போம் என்ற தொணிப்பொருளில் இந்தப் போராட்டம் இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.
ஏப். 09 18:30

கோட்டாபய போட்டியிடுவது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில்- மேதினக் கூட்டத்தில் உரையாற்றுவார்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் என்ற அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளிவருவதற்கு முன்னரே சர்வதேச மட்டத்திலான சதி முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விரைவில் கோட்டாபய ராஜபக்சவின் பெயரை ஜனாதிபதி வேட்பாளராகப் பிரேரிப்பார் என்றும் அதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ள சதி முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்படுமெனவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் மக்கள் மத்தியில் கோட்டாபய ராஜபக்ச உரையாற்றுவாரென்றும் அன்றில் இருந்து அவருடைய அரசியல் பயணம் ஆரம்பிக்குமெனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கூறியுள்ளது.
ஏப். 09 14:15

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு ஒக்ரோபா் மாதம் வெளியிடப்பட வேண்டுமென்கிறார் டளஸ்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழ் செயற்படும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இந்த ஆண்டு இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லையென ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன. மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்த வேண்டுமானால் இந்த ஏப்பிரல் மாதம் ஐந்தாம் திகதிக்கு முன்னர் தேர்தல் முறைகளில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். ஆனால் திருத்தங்கள் எதுவும் இல்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை. இதனால் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லையென அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை, அடுத்த ஆண்டு ஜனாவரி மாதம் எட்டாம் திகதியோடு மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் முடிவடைவதால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் அறிவிக்கப்பட வேண்டும்.
ஏப். 08 22:45

மட்டக்களப்பு மாவட்டத்தை மகாவலி வலயத்துக்குள் கொண்டு வந்து சிங்களக் குடியேற்றம் செய்ய முயற்சி

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழ் பேசும் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தை மகாவலி வயலத்திற்குள் கொண்டுவந்து விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகளை இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவில் முறுத்தானை, குடிம்பிமலை, பேர்லாவெளி ஆகிய மூன்று கிராம சேவகர் பகுதியையும் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் ஈரளக்குளம் கிராம சேவகர் பகுதியையும் இணைத்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தென்பகுதி சிங்கள விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள், உதவிகள் தமிழ் பகுதியில் வழங்கப்படவில்லை.
ஏப். 08 11:24

அம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள இராணுவத் தளம் இலங்கைக்குரியது என்கிறார் ரணில்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை பலரும் சீன அரசின் இராணுவத் தளம் என்று கருதுகின்றனர். ஆனால் எந்தவொரு நாட்டிற்கும் அம்பாந்தோட்டையில் இராணுவத் தளம் அமைக்க இடமளிக்க முடியாதென இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிய ஐரோப்பிய அரசியல் மன்றத்தின் மூன்றாவது அமர்வில் உரையாற்றும்போது இவ்வாறு கூறிய ரணில் விக்கிரமசிங்க, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு இலங்கையிடமே இருக்குமெனவும் குறிப்பிட்டார். அம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள இராணுவத் தளம் இலங்கைக்குரியது எனவும் இலங்கைப் படையினரின் தேவைக்காகவே அங்கு இராணுவத் தளம் அமைக்கப்படவுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
ஏப். 07 22:41

முல்லைத்தீவில் இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

(முல்லைத்தீவு, ஈழம்) வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்திடம் நேரடியாகக் கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகள், கணவன்மார் எங்கே எனக் கேட்டு இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. ஈழத் தமிழர் பிரதேசத்தை ஆக்கிரமித்த இலங்கை இராணுவம் வகைதொகையின்றி இளைஞர், யுவதிகளை விசாரணைக்கு அழைத்துச் சென்றிருந்தது. அவ்வாறானதொரு நிலையில் தமது பிள்ளைகள் மற்றும் கணவன்மாரை இலங்கை இராணுத்திடம் விசாரணைக்காகக் கையளித்ததாகவும் ஆனாலும் இதுவரை அவர்கள் வீட்டுக்குத் திரும்பவில்லையெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் தெரிவித்தனர்.
ஏப். 06 02:26

இந்திய ஒன்றிய அளவில் பாஜகவிற்கு எதிர்ப்பு அலை உருவாகிறதா?

(சென்னை, தமிழ்நாடு) இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான காலம் நெருங்கி வரும் வேளையில், இந்திய ஒன்றிய அளவில் கலைஞர்கள், படைப்பாளிகள், ஆராய்ச்சியாளர்கள் என பல்வேறு துறைகளைச் சார்ந்தோரின் பாஜக அரசாங்கத்திற்கு எதிரான கூட்டறிக்கைகள் வெளியாகி வருகிறது. 150ற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், 100ற்கும் மேற்பட்ட இந்திய திரைப்பட இயக்குநர்கள், 200ற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், 700ற்கும் மேற்பட்ட திரைக்கலைஞர்கள் என இதுவரை பலத்தரப்பினரும் "ஜனநாயகம் காப்போம், பாஜகவிற்கு வாக்களிக்காதீர்கள்" என இந்திய ஒன்றிய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். எதிர்ப்புகளை சமாளிக்க, அதிலிருந்து மீள 'பாகிஸ்தான் தாக்குதல்', 'தீவிரவாதிகள்', 'இந்திய ஒற்றுமை', 'அறிவியல் சாதனைகள்' என தொடர்ந்தும் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர் பாஜகவினர்.
ஏப். 05 21:30

அமெரிக்க உயர் நீதிமன்றத் தீர்ப்பை உதாரணம் காட்டிய யாழ் நீதிமன்றம் - வார இதழ் மீதான பி அறிக்கை தள்ளுபடி

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் அரசியல் யாப்பில் உள்ள உறுப்புரை 14 இல் கூறப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்தின் (Freedom of Expression) அடிப்படையில் எழுதுவதற்கான உரிமை உண்டு என்பதை யாழ் பிரதான நீதவான் நீதிமன்றம் இலங்கைப் பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு அறிவித்துள்ளது. 1973 ஆம் ஆண்டு இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் ஐந்தாம் இலக்கச் சட்டத்தின் கீழான 14-10-1981 அன்று வெளியிடப்பட்ட இலங்கை ஒற்றையாட்சி அரச வர்த்தமானி இதழின் இலக்கம் 162- 5/A பிரிவு நான்கில் கூறப்பட்டுள்ள தகவலைப் பாதுகாத்தல், இரகசியம் பேணுதல், உள்ளிட்ட விடயங்கள், குறிப்பாக கட்டுரை அல்லது செய்தியை எழுதியவர் தகவல் மூலத்தை வெளியிட மறுத்தால் அதனைக் கோர முடியாது என்று குறித்த வர்த்தமானி இதழில் கூறப்பட்டுள்ளதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏப். 05 11:15

தலைமன்னார் கடலில் கைதான நைஜீரியப் பிரஜைகளை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

(மன்னார், ஈழம்) தலைமன்னார் கடற்பரப்பில் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இலங்கை கடற்படையினரால் கைதான நான்கு நைஜீரியப் பிரஜைகளையும் பேசாலை மீனவர்கள் இருவரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமன்னார் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் அப்பகுதியால் சென்ற இயந்திரப் படகொன்றினை வழிமறித்து சோதனையிட்டபோது அப்படகில் ஆறுபேர் சட்ட விரோதமாகப் பயணித்ததை அவதானித்துள்ளனர். இதையடுத்து இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசாரணைகளில், படகில் பயணித்த ஆறுபேரில் நால்வர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், இருவர் மன்னார் பேசாலை உதயபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.