நிரல்
மே 03 16:13

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் இலங்கைப் படையினரால் கைது

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் சென்ற உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து தேடுதல், சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இலங்கைப் பொலிஸாரும் இலங்கை முப்படையினரும் வடமாகாணம் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கூடுதலான தேடுதல். சோதனை நடவடிக்கைகளில் ஈடபட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை யாழ் பல்கலைக்கழக வாளகத்திற்குள் நுழைந்த இலங்கை இராணுவத்தினரும் இலங்கை அதிரடிப்படையினரும் பல்கலைக்கழக ஒனறியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். இருவரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள், மாவீரர்களின் படங்கள் ஆகியவை மீட்கப்பட்டதாக இலங்கை இராணுவத்தினர் கூறியுள்ளனர்.
மே 03 10:38

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்க முயற்சியா?

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பின்னர் தேடுதல், சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இலங்கைப் பொலிஸாரும் இலங்கை முப்படையினரும் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலும் தேடுதல் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர். இந்த நிலையில், இலங்கையின் தெற்கிலிருந்து வடபகுதிக்குள் 20 வாகனங்கள் வெடிபொருட்கள், ஆயுதங்களுடன் பிரவேசித்துள்ளதாக இலங்கைப் படையினர் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஆனால் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்க அல்லது குழப்பும் நோக்கில் படையினரால் இவ்வாறு ஆயுதங்கள் பற்றிய புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுகின்றன.
மே 02 17:41

இஸ்லாமிய மத அறிஞர்களின் தலைமை வேண்டாம்- பசீர் சேகுதாவூத்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலின் பின்னர், இலங்கையில் குறிப்பாக கிழக்கில் வாழும் முஸ்லீம் மக்கள் இலங்கை இராணுவத்தின் சோதனைக் கெடுபிடிகளுக்கு உள்ளாகியுள்ளனர். கல்முனை - சவளக்கடை, சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல், துப்பாக்கிப் பிரயோகம் ஆகியவற்றுக்கிடையில் சிக்கி அப்பாவி முஸ்லீம் மக்கள் சிலரும் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற போதும், இலங்கை அரசாங்கம் அவ்வாறு கூறவில்லை. இந்த நிலையில் அன்று ஈழ விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவரும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மூத்த அரசியல்வாதியும், இலங்கை அரசாங்கத்தில் அமைச்சராகவும் பதவி வகித்த பசீர் சேகுதாவூத் (Basheer Segu Dawood) தனது முகநுால் பதவில் தற்கொலைத் தாக்குதலின் விளைவுகள் பற்றிக் கூறியள்ளார்.
மே 02 16:10

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை - ஞாயிறு ஆராதனைகளைத் தவிர்க்குமாறு பேராயர் கோரிக்கை

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் தலைநகர் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதியான நீர்கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு பிரதேசங்களில் சென்ற 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலின் பின்னர் இதுவரை கிறிஸ்தவ மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விடயங்களில் நம்பிக்கை தரும் உத்தரவாதங்கள் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து கிடைக்காததால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் தேவாலயங்களுக்குச் செல்ல வேண்டாமென இலங்கைக் கத்தோலிக்க திருச்சபையின் போராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கோரியுள்ளார். தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் நடத்துவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வியாழக்கிழமை முற்பகல் அனைத்து மறைமாவட்ட ஆயர்களுக்கும் அறிவித்துள்ளார்.
மே 01 23:28

குருநாகல் குளியாப்பிட்டி பள்ளிவாசல் மீது கல்வீச்சு- பாடசாலைக்கும் சேதம்

(மட்டக்களப்பு, ஈழம்) வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்தில், குளியாப்பிட்டிப் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் இன்று புதன்கிழமை பிற்பகல் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏதண்டவெல பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையின்போதே இந்தக் கல்வீச்சுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பள்ளிவாசல் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியதுடன் அங்கிருந்த தளபாடங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பக்கத்தில் இருந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மே 01 22:56

சீன விஞ்ஞானிகள் நால்வர் பலி, ஐவர் காயம் - சீனா அறிவிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 42 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டும் ஐந்துபேர் படுகாயமடைந்தும் மேலும் பன்னிரண்டு பேரைக் காணவில்லையெனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு சென்ற 29 ஆம் திகதி அறிவித்திருந்தது. இந்த நிலையில் சீன விஞ்ஞானிகள் நால்வர் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஐந்து சீன விஞ்ஞானிகள் காயமடைந்த நிலையில் சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. சீன விஞ்ஞான அகடமியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு நடவடிக்கைகளுக்காகக் கடந்த ஏப்ரல் மாதம் கொழும்புக்குப் பயணம் செய்திருந்தனர். அவர்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டும் ஐந்துபேர் காயமடைந்துமுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மே 01 12:09

வவுணதீவு பொலிஸார் படுகொலை - கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளியை விடுவிக்க மைத்திரி இணக்கம்

(மட்டக்களப்பு, ஈழம்) கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில், இலங்கைப் பொலிஸார் இருவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில், கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர், கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற அஜந்தனை விடுதலை செய்வதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
ஏப். 30 23:16

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் துப்பாக்கி ரவைகள் மீட்பு - ஹிஸ்புல்லா மறுப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்து கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு, காத்தான்குடியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவின் அலுவலகம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இலங்கைப் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல், சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன. இதன்போது 48 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகத்தில் அலுவலகத்தில் பணியாற்றிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர். ஆனால் இலங்கைப் பொலிஸாரால் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகளுக்கும் தனது அலுவலகத்திற்கும் அங்கு பணியாற்றிய இரு இளைஞர்களுக்கும் தொடர்பு இல்லையென கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மறுத்துள்ளார்.
ஏப். 30 20:16

தேடப்படும் இஸ்லாமிய அரசின் சூட்சுமதாரி வீடியோவில் தோற்றம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஒசாமா பின் லாடனுக்குப் பின் அமெரிக்காவால் வேட்டையாடப்படும் முதலாம் நம்பர் இலக்கு இஸ்லாமிய அரசு என்ற குழுவின் தலைவனாகத் தன்னைத் தானே 2014 இல் பிரகடனப்படுத்திக்கொண்டவர் அபூ பக்கர் அல் பக்டாடி ஆவார். ஈராக்கைச் சேர்ந்த 48 வயது நிரம்பிய இவர் 2014 இல் ஒரு வீடியோவில் தோன்றினார். ஐந்து வருடங்களின் பின் முதன்முறையாக இந்தத் திங்கட்கிழமையன்று, குறிப்பாக இலங்கையில் நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து, அல் பக்டாடியின் காணொளி ஒன்று மீண்டும் வெளியாகியுள்ளமை உலகச் செய்திகளின் இன்றைய தலைப்பாகியுள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன் தன்னை இஸ்லாமிய அரசின் தலைவனாக வீடியோவில் வெளிப்படுத்திய அல் பக்டாடி, பொதுவாக பின் லாடனைப் போல பகிரங்கமாகத் தனது முகத்தை அடிக்கடி பிரபலப்படுத்துவதில்லை.
ஏப். 30 16:02

இலங்கை அரசாங்கம் வழங்கிய குண்டு துளைக்காத வாகனம் - பேராயர் மெல்கம் ரஞ்சித் நிராகரித்தார்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் சென்ற 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலை அடுத்து இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் கிறிஸ்தவ மக்களின் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு கோரியிருந்தார். பேராயரின் வேண்டுகோளைப் பரிசீலித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குண்டு துளைக்காத வாகனம் ஒன்றைப் பேராயரின் பாதுகாப்புக் கருதி வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் பேராயர் மெல்கம் ரஞ்சித் அதனை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டார். கொழும்பு புஞ்சி பொரளையில் உள்ள பேராயரின் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேராயர் மெல்கம் ரஞ்சித் இதனைத் தெரிவித்தார். மக்களின் பாதுகாப்பே முக்கியமானதென்றும் பேராயர் வலியுறுத்தினார்.