நிரல்
மே 07 15:22

ஸஹ்ரான் ஹாசீம் தமிழ்நாட்டுக்குத் தப்பிச் சென்றாரா? இலங்கை இராணுவம் கூறுகின்றது

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் இலங்கைத் தலைவர் ஸஹ்ரான் ஹாசீமுக்குச் சொந்தமான, கொழும்பு தெமட்டகொடை மஹவில கார்டினில் அமைந்துள்ள மூன்று அடுக்குமாடிகளைக் கொண்ட ஆடம்பர வீட்டை இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பேற்றுள்ளது. குறித்த வீட்டில் உயிரத்த ஞாயிறன்று பிற்பகல் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, இலங்கைப் பொலிஸார் மூன்று பேர் கொல்லப்பட்டனர். சோதனை நடவடிக்கையின்போதே தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த ஆடம்பர வீட்டை இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தற்காலிகமாக தமது தேவைகளுக்காகப் பயன்படுத்தவுள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளனர்.
மே 06 16:14

யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் தற்காலிகமாகப் பதவி நீக்கம் - மைத்திரியின் செயலகம் கடிதம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, தமிழர் தாயகப் பகுதிகளெங்கும் இராணுவமயமாகக் காட்சியளிக்கின்றது. இவ்வாறானதொரு சூழலில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை இராணுவத்தால் தேடுதல் நடத்தப்பட்டு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், கொழும்பு நிர்வாகத்தினால் தற்காலிகமாகப் பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக உயர்மட்டத் தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளன.
மே 06 15:18

நீர்கொழும்பு வன்முறையில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு - ரணில்

(யாழ்ப்பாணம், ஈழம் ) கொழும்பின் புறநகர் பகுதியான நீர்கொழும்பு பலகத்துறைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையின் போது, பொதுச் சொத்துக்களுக்கும் தனியார் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக நஷ்டஈடு வழங்குமாறும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். சேதவிபரங்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்குமாறு ரணில் விக்கிரமசிங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் தேசிய கொள்கைகள், பொருளாதார நடவடிக்கைகள், மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சின் கீழ் சேதங்கள் பற்றிய மதிப்பீடுகள் செய்யப்படவுள்ளன.
மே 06 15:13

திட்டமிட்டுப் பறிக்கப்படும் தமிழ்நாட்டவர்களின் வேலைவாய்ப்புகள் - தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்

(சென்னை, தமிழ்நாடு) சமீபகாலமாக, தொடர்வண்டித் துறை உள்ளிட்ட பல இந்திய மைய அரசு நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில், தமிழ்நாட்டவர்களுக்குரிய இடங்கள் வடநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2019 மே 3 அன்று, திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறைப் பணிமனையை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தியது. அப்போராட்டத்தையொட்டி, சமூக வலைத்தளங்களில் "தமிழக வேலை தமிழருக்கே" மற்றும் TamilnaduJobsForTamils ஆகிய குறிச்சொற்களை (Hashtag) முன்னிறுத்தித் தொடர்ந்த பரப்புரையின் பயனால் இந்திய அளவில் பேசு பொருளாகியும் உள்ளது. ஏனைய மாநிலங்கள் 1986 முதலே மண்ணின் மைந்தர்களுக்கு வேலையை உறுதிப்படுத்தும் சட்டம் இயற்றியுள்ளார்கள் என்றும் தமிழ்நாடு அரசு இதுவரை ஏன் செய்யவில்லை என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டது.
மே 06 08:52

நீர்கொழும்பில் வன்முறை - சமூக வலைத்தளங்கள் மீண்டும் முடக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) கொழும்பு நகரின் புறநகர் பகுதியான நீர்கொழும்பு பலகத்துறைப் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட வன்முறைகளையடுத்து இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீண்டும் தடை செய்யப்பட்டுள்ளன. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கு அமைவாக சமூக வலைத் தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத் தொடர்புகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதேவேளை, சமூக வலைத்தளங்கள் ஊடாக இன வன்முறையைத் தூண்டும் கருத்துக்களைப் பகிர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார். வேறு வழிகள் மூலமாகவும் இனவாத மதவாதக் கருத்துக்களைப் பகிர்வோர் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவாரெனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மே 05 23:09

நீர்கொழும்பில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்- வாகனங்கள் எரிந்து நாசம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) கொழும்பில் இருந்து முப்பத்து ஏழு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள நீர்கொழும்பு பலகத்துறைப் பிரதேசத்தில் உள்ள தைக்கா வீதியில் முஸ்லிம், சிங்கள இளைஞர்கள் சிலருக்கிடையே இன்றிரவு ஏற்பட்ட வாய்த்தகராறு வன்முறையாக மாறியது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான சில வாகனங்கள் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் தீயிடப்பட்டதாகவும் நீர்கொழும்புப் பொலிஸார் தெரிவித்தனர். தடிகள், பொல்லுகள், வாள்களுடன் வந்த சிங்கள இளைஞர்களே முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இதனால் நீர்கொழும்புப் பிரதேசத்தில் பதற்றம் நிலவுகின்றது. இலங்கைப் பொலிஸ் திணைக்களம் இன்றிரவு எட்டு மணியில் இருந்து நாளை திங்கட்கிழமை காலை 7 மணிவரை ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது.
மே 05 14:03

யாழ்ப்பாணம் சுண்டிக்குழி மகளிர் கல்லூரிக்கு தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பு என்ற பெயரில் எச்சரிக்கைக் கடிதம்

(கிளிநொச்சி, ஈழம்) உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட பல பகுதிகளிலும் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குலை அடுத்து இயல்பு நிலை ஸ்தம்பிதமடைந்திருந்தது. இந்த நிலையில், இலங்கையின் அரச பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறையின் பின்னர், நாளை ஆறாம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் யாழ்ப்பாண மாவட்ட தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பு என்ற பெயரில் யாழ்ப்பாணம் சுண்டிக்குழி மகளிர் கல்லூரிக்கு, அச்சுறுத்தல் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாடசாலை வட்டாரங்கள், கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தன.
மே 04 14:57

ஸஹ்ரான் ஹாசீம் உயிருடன்- இலங்கைப் புலனாய்வுப் பிரிவுக்குச் சந்தேகம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் அனைத்தையும் திட்டமிட்டவர் எனக் கூறப்படும், தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் ஸஹ்ரான் ஹாசீம் கொல்லப்படவில்லை. உயிரோடு இருப்பதாக இலங்கைப் புலனாய்வுத் துறைக்கு தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஸஹ்ரான் ஹாசீம் தற்கொலைத் தாக்குதல் நடத்தியபோது கொல்லப்பட்டதாக இலங்கைப் புலனாய்வு அதிகாரிகள் ஏலவே உறுதிப்படுத்தியிருந்தனர். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பிரதம ஆசிரியர்களுடனான சந்திப்பின்போதும் ஸஹ்ரான் ஹாசீம் உயிரிழந்து விட்டதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில், ஸஹ்ரான் ஹாசீம் உயிரிழக்கவில்லையென இலங்கைப் புலனாய்வுத் துறை தற்போது கூறுகின்றது.
மே 04 11:22

கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

(யாழ்ப்பாணம், ஈழம்) கிறிஸ்தவர்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குலின் பின்னர், இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தினால் தேடுதல் என்ற பெயரில் தமிழர் தாயகப் பகுதிகளில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சோதனை நடவடிக்கையின் ஒரு கட்டமாக, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதலை அடுத்து கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மே 03 23:17

கொழும்பு, நீர்கொழும்பில் தங்கியிருந்த பாகிஸ்தான், பங்களாதேஷ் அகதிகளை வவுனியாவில் குடியேற்ற முடிவு

(வவுனியா, ஈழம்) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து ஏற்பட்ட அசாதாரண நிலையினால், ஏற்கனவே அகதிகளாகத் தஞ்சம் கோரி கொழும்பு, நீர்கொழும்பு பிரதேசங்களில் தங்கியிருந்த பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்களை வவுனியாவில் பாதுகாப்பாகத் தங்க வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் பராமரிக்கப்பட்டு வரும் பாக்கிஸ்தான், பங்களாதேஷ் நாட்டவர்கள் தற்கொலைத் தாக்குதல்களுக்கு உதவியளித்திருக்கலாமோ என்ற சந்தேகத்தில் அவர்களை வெளியேற்றுமாறு கோரி நீர்கொழும்பில் சிங்கள மக்கள் பெரும் அழுத்தங்களைக் கொடுத்து வந்தனர்.