நிரல்
மே 11 22:00

நிரபராதியான முன்னாள் போராளி ஐந்து மாதங்களின் பின் விடுதலை

(மட்டக்களப்பு, ஈழம்) கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில், இலங்கைப் பொலிஸார் இருவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில், கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிரபராதியான முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர், கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற அஜந்தன் ஐந்து மாதங்களின் பின்னர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மே 11 15:50

இந்தோ-பசுபிக் மூலோபாயம் தொடர்பாக அமெரிக்காவில் கலந்துரையாடல்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்க அவுஸ்திரேலிய மற்றும் சர்வதேச இராணுவப் புலனாய்வாளர்கள் தடையப் பொருட்கள் பலவற்றை ஆதாரமாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணை நடத்துகின்றனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமும் மற்றும் பலரிடமும் வாக்குமூலங்கள் பதியப்பட்டு தாக்குதலுக்கான அடிப்படைக் காரணங்கள், பின்னணிகள் குறித்தும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தாக்குதல் செயற்பாடுகளை எதிர்காலத்தில் எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்து எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை அமெரிக்காவில் உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
மே 10 23:02

ஒன்பது சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை - விசாரணை ஆரம்பம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறித்து இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தால் நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது. தற்கொலைத் தாக்குதல் நடத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட்டுக்குச் சொந்தமான, செப்புத் தொழிற்சாலையில் குண்டுகள் தயாரிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் அங்கு சோதனை நடத்தப்பட்டு அங்கு பணியாற்றிய ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். ஆனால் அந்த ஒன்பது பேரும் சில நாட்களிலிலேயே பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மே 10 14:45

மாணவர்களின் விடுதலைக்கு மேற்குலகம் பொறுப்புக் கூற வேண்டும்

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக தெளிவான விளக்கம் தரப்படவில்லையென இலங்கைப் படையினரால் கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கூறுகின்றனர். இலங்கைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்பட்டபோதும் அந்தச் சட்டத்தின் எந்தப் பிரிவின் அடிப்படையில் என்ன குற்றத்திற்காக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்பது தொடர்பாக இலங்கைப் பொலிஸார் எதுவுமே கூறவில்லையென சக மாணவர்களும் தெரிவிக்கின்றனர். அதேவேளை, இதனைச் சட்ட விடயமாகப் பார்க்காமல் ஈழத் தமிழர்களின் அரசியல பிரச்சினையாகவே நோக்க வேண்டுமென அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் விளக்கம் நீதிமன்றத்திற்கு அவசியமே இல்லையென சட்டவல்லுநர்களும் கூறுகின்றனர்.
மே 09 22:39

மத அடிப்படைவாதம் அச்சுறுத்தல் - கத்தோலிக்க ஆயர்கள் மன்றம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்கள் மன்றம் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து உரையாடியுள்ளது. கொழும்பு புஞ்சிபொரளையில் உள்ள பேராயரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. வடக்கு - கிழக்கு உட்பட பன்னிரண்டு மறை மாவட்டங்களின் ஆயர்களும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலைமை குறித்தும் எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்களைத் தடுப்பது தொடர்பாகவும் ஆயர்கள் மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடியுள்ளனர். கிறிஸ்தவ பாடசாலைகளை எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பிக்க முடியுமென ஆயர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் உரிய பாதுகாப்பு இல்லையெனவும் தெரிவித்துள்ளனர்.
மே 09 10:35

அமெரிக்க, இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் இலங்கையில் ஆலோசனை

(யாழ்ப்பாணம், ஈழம் ) எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்த போன்ற நகரங்களில், குண்டு வெடிக்கும் அபாயம் உள்ளதென்று தகவல் கிடைத்துள்ளதாக பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று புதன்கிழமை மாலை இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இலங்கைப் பாதுகாப்பு உயர் அதிகாரிகள், இது தொடர்பாகத் தன்னிடம் கூறியதாகவும் இந்த ஆபத்துத் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்த வேண்டுமெனவும், சரத் பொன்சேகா வலியுறுத்தினார். உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்கள், ஹோட்டல்களில் குண்டுவெடிக்கவுள்ளதாக இந்தியப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்ததை, 15 தடவைகள் இலங்கைப் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஹேமசிறி பெர்ணான்டோ ஜனாதிபதி மைத்திரியிடம் கூறியிருந்தார்.
மே 08 15:19

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் கந்தசாமி நியமனம்

(வவுனியா, ஈழம்) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் இ.விக்னேஸ்வரன் திடீரென பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான தகுதி வாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானியில் உயர்கல்வி அமைச்சர் கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மே 08 14:58

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும் பிணை வழங்க மறுப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகியோருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பிணை மனு யாழ் நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் இன்று புதன்கிழமை இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் படி இரு மாணவர்களும் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதால், இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் அது குறித்து பரிசீலிக்கின்றது. எனவே யாழ் நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்க முடியாதென நீதவான் பீற்றர் போல், நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மே 08 10:17

தூதுவர் றொபேட் ஓ பிளேக் கோட்டாபய ராஜபக்சவை பாராட்டினார்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை அமெரிக்காவின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் றொபேட் ஓ பிளேக் (Robert O. Blake) பாராட்டியுள்ளார். சீனாவை மையப்படுத்திய தெற்காசியாவை நோக்கிய அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையும் இலங்கைக்கான அதன் அர்த்தமும் என்ற தொனிப்பொருளில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்திருந்தபோது தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்காகத் தொழிற்றிறன் உள்ள உயர்மட்டக்குழுவை அமைத்திருந்தார். அவ்வாறான தகுதியுடைய தொழிற்றிறனுள்ள உயர்மட்டக்குழு, தற்போதைய சூழலில் இலங்கைக்கு அவசியமென அவர் வலியுறுத்தினார்.
மே 07 23:45

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளான கொழும்புக் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆராதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காலை ஏழு மணிக்குத் திறக்கப்பட்ட ஆலயம், இரவு ஏழு மணிக்கு மூடப்பட்டது. இலங்கைக் கடற்படையினரால் தற்காலிகமாகப் புனரமைக்கப்பட்டுள்ள அந்தோனியார் ஆலயம், இன்றிலிருந்து தினமும் குறிக்கப்பட்ட சில மணித்தியாலங்கள் ஆராதனைகள் இடம்பெறும் என்றும், பூஜைகள் தற்போதைக்கு இடம்பெறாதெனவும் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஆலயத்திற்கு வரும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படுமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஆலய நிர்வாகம் கோரியுள்ளது.