செய்தி: நிரல்
ஓகஸ்ட் 07 17:39

பூநகரி - கௌதாரிமுனைப் பகுதியில் மணல் அகழ்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு

(கிளிநொச்சி, ஈழம்) தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு போரைத் தொடர்ந்து தமிழ் மக்களது பூர்வீக நிலங்கள் உட்பட தமிழர் தாயகத்தில் உள்ள வளங்கள் திட்டமிட்ட முறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சூறையாடப்பட்டுவரும் நிலையில், கிளிநொச்சி - பூநகரி, கௌதாரிமுனைப் பகுதியில் மணல் அகழ்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை செப்டெம்பர் மூன்றாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கௌதாரிமுனையில் உள்ள இயற்கை வளமான மணல் தொடர்ந்தும் சட்டவிரோதமாக அகழப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் இதனைத் தடுத்து நிறுத்துமாறும் வலியுறுத்தி கடந்த யூலை 22 ஆம் திகதி பிரதேச மக்கள் தாக்கல் செய்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஓகஸ்ட் 06 23:19

பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்கு அழைப்படுவதில்லை - ரணில்

(வவுனியா, ஈழம்) இலங்கையில் ஏப்ரல் இருபத்தியொராம் திகதி உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பான எந்தவொரு புலனாய்வுத் தகவல்களும் தனக்குக் கிடைக்கவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப் பின்னரான சூழலில் இலங்கைப் பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு பிரதமர் என்ற முறையில் கூட தான் அழைக்கப்படுவதில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தெரிவுக்குழு முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க வாக்குமூலம் வழங்கினார். இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தின் பின்னர் இலங்கைப் பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடைபெறவேயில்லையென்றும் ரணில் கூறினார்.
ஓகஸ்ட் 06 13:00

சஜித் வேட்பாளரானால் மைத்திரி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு!

(வவுனியா, ஈழம்) இலங்கையில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவதென பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. கட்சிகளின் மூத்த உறுப்பினர்களிடையேயும் முரண்பாடுகள், கருத்து மோதல்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுத் திங்கட்கிழமை இரவு மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து உரையாடியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏனைய சிறிய பத்துக் கட்சிகளை உள்ளடக்கி ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒப்பந்தம் செய்யவில்லை.
ஓகஸ்ட் 05 16:40

சைவ- கிறிஸ்தவ ஆலய திருவிழாக்களில் தீவிர சோதனை

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பு அதன் புறநகர்ப் பகுதிகள் மற்றும் வடக்குக்- கிழக்கு தாயகப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த சோதனை நடவடிக்கைகள் தற்போது குறைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வருடாந்த திருவிழா நாளை ஆரம்பமாகவுள்ளது. பாதுகாப்பு என்ற பெயரில் இலங்கை இராணுவத்தினர் நல்லூர் கந்தன் ஆலய வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். ஆலய வளாகம் முற்று முழுதாக இராணுவம் மற்றும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூர்மைச் செய்தித்தளத்திற்குத் தெரிவித்தனர்.
ஓகஸ்ட் 05 16:05

வவுனியாவில் மூன்று கிராம மக்கள் ஒருவேளை உணவுக்குப் பெரும் அவதி

(வவுனியா, ஈழம்) வவுனியா - வெண்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கண்ணாட்டி, பரமனாலங்குளம், கணேசபுரம் ஆகிய மூன்று கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் நூற்று எழுபத்தைந்து தமிழ்க் குடும்பங்கள் ஒருவேளை உணவிற்கு வழியின்றிப் பெரும் அவலத்தை எதிர்நோக்கியுள்ளதாகக் கண்ணாட்டிப் பங்குத் தந்தை அன்ரனி சோசை தெரிவித்துள்ளார். குறித்த மூன்று கிராமங்களையும் சேர்ந்த தமிழ்க் குடும்பங்கள் 1990 ஆம் ஆண்டு நிகழ்ந்த இராணுவ நடவடிக்கைகளினால் தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்து, தற்போது மீள்குடியேறி வாழ்ந்து வரும் நிலையில் நிரந்தர வருமானமின்றி ஒருவேளை உணவுக்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். எனவே இந்த மக்களைக் காப்பாற்றுவதற்கு உதவியளிக்குமாறு அருட்தந்தை அன்ரனி சோசை கோரிக்கை விடுத்துள்ளார்.
ஓகஸ்ட் 05 10:34

இலங்கையில் தாக்குதல் நடத்தப்படலாம் - இலங்கை வாழ் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை அடுத்து தற்போது நாடு வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் விடுத்த எச்சரிக்கை தமது நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட வழமையான அறிவுத்தல்தான் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ஸ்டெப்ளிட்ஸ் தனது ருவிட்டர் தளத்தின் ஊடாக தெரிவித்துள்ளார். இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் கொழும்பில் உள்ள அமெரிக்க நாட்டவர்களை அவதானமாக இருக்குமாறும் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை அமெரிக்கத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.
ஓகஸ்ட் 04 22:44

மன்னார் கரையோரப் பகுதிகள் மூலமாக போதைப்பொருட் கடத்தல்

(மன்னார், ஈழம்) இலங்கைக்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதற்கு இலங்கைப் படையினரும் இலங்கைப் பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்குதாகவும் தென்பகுதி அரசியல்வாதிகள், அமைச்சர்கள் சிலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு வழங்கி வருகின்றனர் என்று குற்றம் சுமத்தப்படுகின்றது. இந்த நிலையில் தலைமன்னார், பேசாலை, தாழ்வுபாடு, சிலாவத்துறை ஆகிய கரையோரப் பிரதேசங்களில் இருந்து மன்னார் மாவட்டத்திற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாக பிரதேச மக்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குக் கூறுகின்றனர். தமிழ்நாட்டுக் கரையோரங்களில் இருந்து கெரோயின், கஞ்சா, போதையூட்டப்பட்ட பாக்கு வகைகள் மன்னார் கரையோரப் பகுதிகளுக்கு படகுகள் மூலமாக தினமும் எடுத்து வரப்படுகின்றன.
ஓகஸ்ட் 04 11:25

கிளிநொச்சியில் கடும் வரட்சி- 7947 குடும்பங்கள் பாதிப்பு

(கிளிநொச்சி, ஈழம்) வடக்கு- கிழக்குப் பகுதிகளில் நிலவும் தொடர் வரட்சியினால் கிளிநொச்சி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாற்பத்து நான்கு கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த ஏழாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து ஏழு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. வரட்சியினால் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் நாற்பத்து நான்கு கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த இருபத்து ஏழாயிரத்து ஐந்நூற்று அறுபத்து நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
ஓகஸ்ட் 03 11:27

வல்வைப் படுகொலையின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் வல்வெட்டித்துறையில் அனுட்டிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறைப் பகுதியில் அப்பாவிப் பொதுமக்கள் 72 பேர் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட வல்வைப் படுகொலையின் முப்பதாம் ஆண்டு நினைவேந்தல் நேற்று வெள்ளிக்கிழமை அனுட்டிக்கப்பட்டது. கடந்த 1989 ஆம் ஆண்டு ஆடி அமாவாசை தினத்தன்று இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்ட பொது மக்களை நினைவுகூர்ந்து வல்வெட்டித்துறைப் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில், வல்வெட்டித்துறை நகரில் நினைவேந்தல் நடைபெற்றது.
ஓகஸ்ட் 02 21:00

மடு தேவாலயப் பெருநாளுக்கு மக்களின் வருகையில் வீழ்ச்சி

(மன்னார், ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் மடு மாதா ஆலய ஆடிப் பெருநாளுக்கு வருகை தந்த மக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம், கொழும்பு உள்ளிட்ட சிங்களப் பிரதேசங்களில் இருந்து மக்கள் வருகை தரவில்லையென ஆயர் கூறியுள்ளார். மடு மாதா திருத்தலத்தின் இவ்வருட ஆடி மாதப் பெருநாள் கடந்த யூன் மாதம் 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. யூலை மாதம் 2 ஆம் திகதி மடுத்திருப்பதியின் இறுதி நாள் உற்சவம் ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது.