நிரல்
செப். 27 11:11

வீடமைப்புக்கு வழங்கப்படும் நிதி போதுமானதல்ல- மக்கள் குற்றச்சாட்டு

(மட்டக்களப்பு, ஈழம்) வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டம் என்ற போர்வையில் இலங்கை அரசாங்கத்தின் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரமதாசவினால் வழங்கப்படும் நிதி போதுமானதாக இல்லையென மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த வீட்டுத் திட்டத்தினால் மேலும் கடனாளியாக மாற்றியுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர். கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு நகருக்கு 34 கிலோமீற்றர் தென் மேற்காகவுள்ள வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள களுமொந்தன்வெளி கிராமத்தில் கடந்த வருடம் சஜித் பிரமதாசவின் வீடமைப்பு அமைச்சின் கீழ் வழங்கப்பட்ட நிதியுதவியினால் நாற்பது வீடுகள் நிர்மானிக்கப்பட்டு வருகின்றன.
செப். 25 16:25

ஒற்றையாட்சி அரசின் உயர் நீதிமன்றத்தில் ஞானசார தேரருக்கு எதிராக இடையீட்டு மனு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் இடையீட்டு மனுதாரராக இணைவதற்கு வடமாகாணத் தமிழ்ச் சட்டத்தரணிகள் முடிவு செய்துள்ளனர். நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்கு ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்த பொது மன்னிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு ஒன்று ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையின்போதே இடையீட்டு மனுதாரராக இணைவதற்கு தமிழ்ச் சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர்.
செப். 24 22:52

சஜித் போட்டியிட ரணில் நிபந்தனையோடு இணக்கம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முரண்பாடுகளுக்கு மத்தியில் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டுமெனக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் மத்திய குழு உறுப்பினர்களில் அதிகமானோரும் அழுத்தம் கொடுத்திருந்த நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது. இலங்கை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் இன்று செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்து உரையாடிய பின்னர் இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப். 24 13:04

சட்டதரணி மீது பிக்குமார் தாக்குதல்- வடக்குக்- கிழக்கில் கண்டனப் போராட்டம்

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழர் தாயகம் வடமாகாணம் முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத் தீர்த்தக் கேணியடியில் உயிரிழந்த மேதாலங்கார கீர்த்தி தேரரின் உடலைத் தகனம் செய்யக் கூடாதென்ற முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளையை அவமதித்தமை மற்றும் பௌத்த குருமாரின் அடாவடித்தனங்களைக் கண்டித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இன்று செவ்வாய்க்கிழமை சட்டத்தரணிகள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பௌத்த பிக்குமாருக்கு ஆதரவாகச் செயற்பட்ட இலங்கைப் பொலிஸாரை நீதியின் முன் நிறுத்துமாறு வலியுறுத்தியும், சட்டத்தரணி கே.சுகாஸ் மீது தாக்குதல் நடத்திய பிக்குமாரு்க்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் இந்தப் பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டம் இன்று இடம்பெற்றது.
செப். 23 23:18

வேட்பாளர் தெரிவு- ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வாக்கெடுப்பு

(வவுனியா, ஈழம்) ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பாக எதிர்வரும் வியாழக்கிழமை கட்சியின் மத்திய குழு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக கட்சியின் மூத்த உறுப்பினர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியுள்ளார். இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஆனால் இதுவரையும் ஐக்கிய தேசியக் கட்சி தமது வேட்பாளரை அறிவிக்கவில்லை. கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தன்னை வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.
செப். 23 14:29

நீதிமன்ற உத்தரவை மீறித் தேரரின் உடல் பிள்ளையார் ஆலயத் தீர்த்தக்கேணியடியில் தகனம்

(முல்லைத்தீவு, ஈழம்) வடமாகாணம் முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தின் ஒரு பகுதியில் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் பலாத்காரமாக விகாரை அமைத்து, சர்ச்சைகளை உருவாக்கிய மேதாலங்கார கீர்த்தி தேரரின் (Medhalankara Thero) உடலை முல்லைத்தீவு இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்காமல் தேரரின் உடல் பிள்ளையார் ஆலய வளாகத்திற்கு அருகில் உள்ள ஆலயத் தீர்த்தக்கேணியடியில் வைத்துத் தகனம் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குமாரே தகனம் செய்ததாக பிரதேச மக்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.
செப். 22 15:19

பிக்குவின் உடலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் எரிக்க முடியாது- நீதிமன்றம்

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழர் தாயகம் வடமாகாணம் முல்லைத்தீவு பழைய செம்மலை நாயாறு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்குரிய வளாகத்தின் ஒரு பகுதியை இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன் அபகரித்து விகாரை ஒன்றை அமைத்துத் தங்கியிருந்த மேதாலங்கார கீர்த்தி (Medhalankara Thero) என்ற பௌத்த பிக்கு, புற்றுநோயால் உயிரிழந்துள்ள நிலையில், அவருடைய சடலத்தை குறித்த விகாரை வளாகத்துக்குள் தகனம் செய்ய முடியாதென முல்லைத்தீவு நீதிமன்றம் தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது. உயிரிழந்த பௌத்த பிக்குவின் சடலத்தை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குக் கொண்டுவந்து இறுதிக் கிரியைகளை நடத்த இலங்கைப் படையினருடன் பிக்குமார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகம் முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தது.
செப். 21 15:03

கோட்டாபயவுக்கு வாக்களிக்க வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரவுள்ள சிங்கள மக்கள்

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்காப் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் நோக்கில் அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க முற்படுவதாக மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவை வெற்றிபெறச் செய்வதற்காக வெளிநாடுகளில் வாழும் சுமார் இரண்டு இலட்சம் சிங்கள மக்களை இலங்கைக்கு அழைத்து வாக்களிக்கச் செய்யும் முயற்சியில் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி ஈடுபட்டுள்ளதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. இவ்வாறானதொரு சூழலிலேயே கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்ய ரணில் அரசாங்கம் முற்படுவதாக மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
செப். 20 23:29

கேப்பாப்புலவு மக்களுக்குத் தொழிலில்லை- காணிகளைக் கையளிப்பது குறித்து உரையாடல்

(கிளிநொச்சி. ஈழம்) முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவுப் பிரதேச மக்களின் ஐம்பத்தி ஒன்பது தசம் ஐந்து ஏக்கர் காணியை மீண்டும் பொதுமக்களிடம் கையளிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல், இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் முல்லைத்தீவு துணுக்காய்ப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆளங்குளம் பகுதியில் இலங்கைப் படையினர் வசமுள்ள மக்களின் காணிகளைக் கையளிப்பது தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடல் ஆராயப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. வளமுள்ள காணிகளைப் படையினர் தம்வசப்படுத்தியுள்ளதால் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்வுக்குக் கஷ்டப்படுவதாக மக்கள் கூறியுள்ளனர்.
செப். 20 23:28

வாக்காளர் பதிவுப் புத்தகத்தில் பெயர் வந்தது எப்படி? கோட்டாபயவுக்கு எதிராக விசாரணை

(வவுனியா, ஈழம்) இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவு கொழும்புப் பிரதான நீதவான் லங்கா ஜயரட்னவுக்கு இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. கோட்டாபய ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு அமெரிக்கப் பிரஜையாக இருந்தபோது அம்பாந்தோட்டை மெதமுலன வாக்காளர் பதிவுப் புத்தகத்தில் எவ்வாறு பெயர் உள்வாங்கப்பட்டிருந்தது என்பது குறித்தும், அதே ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதன் மூலம் சட்டத்திற்கு மாறான குற்றச் செயல் ஒன்றை புரிந்துள்ளதாகவும் தனது பெயரில் இலங்கை கடவுச் சீட்டொன்றைப் பெற்றுக்கொண்ட முறைகள் தொடர்பாகவுமே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.