நிரல்
ஒக். 04 16:10

யாழ் செய்தியாளர் கொழும்புக்கு அழைக்கப்பட்டு விசாரணை

(யாழ்ப்பாணம், ஈழம்) கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரிப் பத்திரிகையில் பிரசுரமான செய்தி தொடர்பாக வீரகேசரி நிறுவனத்தின் யாழ்ப்பாண அலுவலகச் செய்தியாளர் தி.சோபிதன் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை விசாரணை இடம்பெற்றது. இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவோடு ஈபிடிபி செயலாளர் டக்களஸ் தேவானந்தா, முன்னாள் வடக்குக் கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜபெருமாள் ஆகியோர் இணைந்து தமிழ் மக்களை மேலும் நசுக்க முற்படுவதாக வெளி வந்த செய்தி தொடர்பாகவே சோபிதன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஒக். 03 22:40

கோட்டாபய மீதான விசாரணை - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மீதான வழக்கு விசாரணையின் தீர்ப்பு நாளை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜனப் பெரமுனக் கட்சியின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்சவின் இலங்கைக் குடியுரிமைச் சட்டம் வலுவற்றது என்றும் அதனை இரத்துச் செய்யுமாறு கோரியும் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணை நேற்றுப் புதன்கிழமை ஆரம்பித்து இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தும் இடம்பெற்றது. நீதியரசர் யசந்த கோத்தாகொட தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர் குழு இந்த விசாரணையை நடத்துகிறது.
ஒக். 03 16:27

அதிகாரப் பகிர்வுக்கான பணிகள் தொடருமாம் - ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென கட்சியின் எழுபத்து ஏழாவது சம்மேளனக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற சம்மேளனக் கூட்டத்தில் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளரென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவின் தாயார் ஹேமா பிரேமதாசவை மேடையில் அழைத்துக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஒக். 02 21:43

சகல மாவட்டங்களும் பௌத்த பிரதேசம்- ஞானசார தேரர்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் உள்ள இருபத்து ஐந்து மாவட்டங்களும் பௌத்த பிரதேசம் என்று அத்தே ஞானசார தேரரை மையப்படுத்திய பொதுபலசேன அறிவித்துள்ளது. உரிமைக்கு உரிமை என்ற புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை கொழும்பின் புறநகர் பகுதியான பொறலெஸ்கமுவவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஞானசார தேரர் இலங்கைத்தீவு பௌத்த நாடு என்றும் அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் கூறினார். உரிமைக்கு உரிமை என்ற புதிய கட்சி பெதுபலசேனவின் மற்றுமொரு செயற்பாட்டு இயக்கம் என்றும் ஞானசார தேரர் தெரிவித்தார்.
ஒக். 02 10:38

சிங்கள ஆட்சியாளர்களைத் தமிழர்கள் நிராகரிக்கப்போகும் இறுதி நிலை

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பான நிலைப்பாடுகள், கருத்துக்களில் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் மத்தியிலும் ஏனைய சிங்கள அரசியல் பிரதிநிதிகளிடமும் குழப்பங்கள், முரண்பாடுகள் நீடித்துச் செல்கின்றன. இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டால் மாத்திரமே சிங்கள அரசியல் கட்சிகள் நிம்மதியாக அரசியலில் ஈடுபடலாமென்ற நிலை மாறித் தற்போது தமது கட்சிப் பிரச்சினைகளை மாத்திரமே சிங்கள ஆட்சியாளர்கள் முக்கியப்படுத்தி வருகின்றனர் என்பதையே சமீபகாலச் செயற்பாடுகள் கோடிட்டுகாட்டுகின்றன. சஜித் பிரேமதாச வேட்பாளராகப் போட்டியிடுவதால் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலரிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
ஒக். 01 22:34

வவுனியா-மன்னார் வீதியில் இலங்கை இராணுவத்தின் புதிய சோதனைச் சாவடி

(வவுனியா, ஈழம்) இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவம் புதிய சோதனைச் சாவடிகளை அமைத்து வருகின்றது. ஏ-09 வீதியில் உள்ள ஆனையிறவுச் சந்தியில் புதிய சோதனைச் சாவடி ஒன்று கடந்த வாரம் அமைக்கப்பட்ட நிலையில் வவுனியா மன்னார் வீதி பம்பைமடு பகுதியில் இராணுவத்தினரால் சோதனை சாவடி ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதலையடுத்து குறித்த இடத்தில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுப் பின்னர் அகற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒக். 01 10:59

கோட்டாபய மீதான விசாரணை நாளை ஆரம்பம்- வெள்ளியன்று தீர்ப்பு

(வவுனியா, ஈழம்) மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொது ஜனப் பெர­மு­னவின் ஜனாதி­பதி வேட்­பா­ளர் கோட்டாபய ராஜ­பக்ச இலங்கை பிர­ஜை­ இல்லையென்பதையும் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட முடியாதெனவும் அறிவிக்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை கொழும்பு மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் நாளை புதன்கிழமையும் நாளை மறு நாள் வியாழக்கிழமையும் இடம்பெறவுள்ளது. வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. செட்­டி­யோ­ராரி (Certiorari writ) எனப்படும் எழுத்­தாணை ­ஒன்று நேற்றுத் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சிவில் சமூகச் செயற்பாட்டாளர் சட்டத்தரணி காமினி வெயங்­கொட, பேரா­சிரியர் சந்­ர­குப்த தேனு­வர ஆகியோர் மனுவைத் தாக்கல் செய்­திருந்தனர்.
செப். 30 18:54

நாவிதன்வெளி முஸ்லிம் பிரதேசத்தில் நிரந்தரச் சோதனைச் சாவடி

(அம்பாறை, ஈழம்) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களில் தொடர்ச்சியாகத் தேடுதல் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அம்பாறையில் நாவிதன்வெளிப் பிரதேசத்தில் நிரந்தரச் சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் அம்பாறை மாவட்டதில் சாய்ந்தமருது, கல்முனை ஆகிய பிரதேசங்களில் தேடுதல். சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை இராணுவம், இன்று திங்கட்கிழமை நாவிதன்வெளியில் நிரந்தரச் சோதனைச் சாவடி ஒன்றை அமைத்துள்ளதாகப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
செப். 30 18:03

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகக் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு

(வவுனியா, ஈழம்) கோட்டாபய ராஜபக்ச இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவரென அறிவிக்குமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கக் குடியுரிமை உள்ளவரென்றும் ஆகவே இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாதென்றும் குறித்த மனுவில் கூறப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொட, சந்திரகுப்த தேனுவர ஆகியோரால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செப். 30 10:47

பௌத்த மயமாக்கலுக்கு 167 இடங்கள் தெரிவு- விபரிக்கிறார் நவநீதன்

(முல்லைத்தீவு, ஈழம்) வடக்குக் கிழக்கில் பௌத்த சமயத்தைப் பரப்பும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருவதாக தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான விஜயகுமார் நவநீதன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார். இலங்கைத் தீவு முழுவதும் முந்நூற்றி 20 இடங்கள் பௌத்த சமயத்துக்குரியதாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் தொல்பொருள் ஆராச்சித் திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது. அவற்றில் நூற்றி 67 இடங்கள் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் உள்ளதாகவும் அவர் கூறினார். நூற்றி 67 இடங்களும் பௌத்த சமயத்துடன் தொடர்புடைய தொல்லியல் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு வெறுமனே கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்டவை.