நிரல்
செப். 29 22:19

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க போட்டியிடுகிறார்

(வவுனியா, ஈழம்) இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்து கடந்த ஓகஸ்ட் மாதம் ஓய்வு பெற்ற ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பில் மகேஸ் சேனநாயக்கா போட்டியிடுகிறார். இது தொடர்பாக கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த பிக்குமார், சிங்கள சிவில் அமைப்புகள், சிங்களச் சட்டத்தரணிகள் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளை உள்ளடக்கிய தேசிய மக்கள் இயக்கத்தின் தேசிய மாநாடு இன்று முதன் முதலாக நடைபெற்றது.
செப். 29 06:48

கிளிநொச்சியில் ஈழத் தமிழர் பண்பாட்டுப் பெருவிழா

(கிளிநொச்சி. ஈழம்) வடமாகாணம் கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையின் ஏற்பாட்டில் ஈழத் தமிழர் பண்பாட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. கரைச்சிப் பிரதேச சபையினால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பண்பாட்டுப் பெருவிழாவின் முதல் நிகழ்வாக கலாச்சார விழுமியங்களை எடுத்தியம்பும் பொம்மலாட்டம், மயில் ஆட்டம், பொய்கால் குதிரை, தமிழ் இண்ணியைம், பறை, சிலம்பாட்டம் தவில் இசை உள்ளிட்ட ஊர்வலத்துடன் தமிழ் மன்னர்களை பறைசாற்றும் வகையில் ஊர்தியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பண்பாட்டுப் பெருவிழாவைப் பார்வையிடுகின்றனர்.
செப். 28 23:01

அம்பாறையில் முஸ்லிம் பகுதிகளில் இராணுவம் தேடுதல்

(அம்பாறை, ஈழம்) ஏப்பிரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொழும்பு. மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னரான சூழலில், இலங்கைத் தீவில் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களில் இலங்கைப் படையினர் தேடுதல், சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள் பலர் விடுதலை செய்யப்பட்டபோதும் மேலும் பலர் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இலங்கை இராணுவத்தினர் திடீரெனத் தேடுதல், சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
செப். 28 08:39

சஜித் பிரேமதாச வெற்றிபெற முடியாதென்கிறார் மகிந்த

(வவுனியா, ஈழம்) ஐக்கிய தேசியக் கட்சியி;ன் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாதென இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டமை தொடர்பாக அம்பாந்தோட்டையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச, தனது சொந்தத் தேர்தல் தொகுதியான அம்பாந்தோட்டையிலேயே சஜித் பிரேமதாச வெற்றிபெற முடியாதென்றும் கூறினார். ஸ்ரீ;லங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் தலைவரான மகிந்த ராஜபக்ச, தேர்தலில் தனது சகோதரரான கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெறுவது உறுதியெனக் கூறினார்.
செப். 27 20:42

நீதி விசாரணை நடத்துமாறு கிழக்கு மாகாண சைவக் குருக்கள் கோரிக்கை

(மட்டக்களப்பு, ஈழம்) முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைத்து சர்ச்சையை ஏற்படுத்திப் பின்னர் நோயினால் உயிரிழந்த மேதாலங்கார கீர்த்தி தேரரின் உடலை ஆலயத்தின் தீர்த்தக்கேணியடியில் தகனம் செய்தமையைக் கண்டித்து கிழக்கு மாகாணத்தில் உள்ள கிழக்கு இலங்கை இந்துக் குருமார் ஒன்றியம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு எதிர்ப்பை வெளியிட்டனர். தமிழ்ச் சட்டத்தரணிகளையும் தமிழ் மக்களையும் பௌத்த பிக்குமார் தாக்கி அச்சுறுத்தியமைக்கும் கண்டனம் தெரிவித்தனர். மட்டக்களப்பு காந்திப் பூங்காவிற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
செப். 27 11:11

வீடமைப்புக்கு வழங்கப்படும் நிதி போதுமானதல்ல- மக்கள் குற்றச்சாட்டு

(மட்டக்களப்பு, ஈழம்) வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டம் என்ற போர்வையில் இலங்கை அரசாங்கத்தின் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரமதாசவினால் வழங்கப்படும் நிதி போதுமானதாக இல்லையென மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த வீட்டுத் திட்டத்தினால் மேலும் கடனாளியாக மாற்றியுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர். கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு நகருக்கு 34 கிலோமீற்றர் தென் மேற்காகவுள்ள வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள களுமொந்தன்வெளி கிராமத்தில் கடந்த வருடம் சஜித் பிரமதாசவின் வீடமைப்பு அமைச்சின் கீழ் வழங்கப்பட்ட நிதியுதவியினால் நாற்பது வீடுகள் நிர்மானிக்கப்பட்டு வருகின்றன.
செப். 27 10:37

பிக்குமாரின் செயற்பாடுகளைக் கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்

(கிளிநொச்சி. ஈழம்) முல்லைத்தீவில் உயிரிழந்த சர்ச்சைக்குரிய மேதாலங்கார கீர்த்தி தேரரின் உடலை முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத் தீர்த்தக்கேணியடியில் தகனம் செய்தமைக்கும், பௌத்த பிக்குமார் தமிழ்ச் சட்டத்தரணிகளையும் தமிழ் மக்களையும் தாக்கி அச்சுறுத்தியமைக்கு கண்டனம் தெரிவித்தும் கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. காலை 10.30க்கு ஏ-ஒன்பது வீதியில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர். பௌத்த பிக்குமாரின் செயற்பாடுகளுக்கும் கண்டனம் தெரிவித்தனர்.
செப். 26 22:36

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சஜித் பிளவுபடாத இலங்கைக்குள் தீர்வு என்கிறார்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச வேட்பாளராக போட்டியிடவுள்ளார். இன்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை அறிவித்தார். வேட்பாளராகப் போட்டியிடுவதில் கடந்த சில வாரங்களாக கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. ஆனாலும் சஜித் பிரேமதாசவே பொருத்தமான வேட்பாளரெனக் கட்சி உறுப்பினர்கள் பலர் அழுத்தம் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ச்சியாகச் சந்தித்து உரையாடிய ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் முரண்பாட்டில் உடன்பாட்டை ஏற்படுத்தினர்.
செப். 26 15:24

அரசியல் விடுதலையை உணர்த்திய தியாகி திலீபன் நினைவேந்தல்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை தொடர்பாக இந்திய- இலங்கை அரசாங்கத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரம் கூட அருந்தாமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர்த்தியாகம் புரிந்த தியாகி திலீபனின் முப்பத்தியிரண்டாவது நினைவேந்தல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை தாயகப் பிரதேசங்களில் இடம்பெற்றது. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில், தியாகி திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்திருந்த நேரமான காலை 9.45க்குப் பொதுச் சுடரேற்றப்பட்டது. பொதுச் சுடரை மாவீரர் ஒருவரின் பெற்றோர் ஏற்றினர். யாழ் பல்கலைக்கழக வளாகத்திலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு வவுனியாவில் கடந்த 21 ஆம் திகதி நடைப்பயணம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
செப். 25 21:56

கொழும்பில் பதினொரு தமிழர் கடத்தல்- விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

(வவுனியா, ஈழம்) இலங்கைத் தீவின் தலைநகர் கொழும்பில் கொட்டாஞ்சேனை, தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் இருந்து கடத்திச் செல்லப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட பதினொரு தமிழர்கள் தொடர்பான வழக்கில் இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் விசாரணை நடத்துமாறு கொழும்புக் கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் நாளை வியாழக்கிழமையும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையும் விசாரணை நடத்தவுள்ளனர். ஐந்து தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு தமிழர்கள் 2008 ஆம் ஆண்டு கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் அட்மிரல் வசந்த கரன்னாகொட உள்ளிட்ட படை அதிகாரிகள் பன்னிரண்டுபேரிடம் விசாரணைகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன.